கலைஞானம்: அழியாத நினைவுகள்- ரஜினிகாந்த்!

திரைப்படக் கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட மதிப்பிற்குரியவர் கலைஞானம்.

வயதின் முதுமையைப் பேச்சில் வெளிக்காட்டாத கலைஞர். அந்தக் காலத்திய நினைவுகளில் இன்னும் அவ்வளவு துல்லியம்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கிற போது, கோடம்பாக்கத்தின் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நுழைந்து திரும்பிய உணர்வு பலருக்கும் வந்திருக்கும்.

அவருடைய திரைப்படப் பங்களிப்பைப் பாராட்டி சென்னையில் நடந்த பாராட்டு விழாவும், அதில் ரஜினி பேசிய பேச்சு அப்போது சிலாகிக்கப்பட்டன.

பிறந்தநாள் வாழ்த்துகளுடன் – அந்தப் பாராட்டு விழா – மீண்டும் உங்கள் பார்வைக்கு.
***

திரையுலகில் மூத்த கதாசிரியரான கலைஞானத்திற்குச் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் அரங்கு நிறைந்த பாராட்டுவிழா நடந்தது.

தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், சிவகுமார், வைரமுத்து, பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் பேசியதன் ஒரு பகுதி:

“போன மாதம் ஒரு நாள் நான் மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருந்தபோது கலைஞானம் போன் பண்ணினார். தன்னுடைய 90 ஆவது பிறந்த நாள் நெருங்குவதைச் சொன்னதும், வாழ்த்துத் தெரிவித்தேன்.

சென்னையில் ஒரு விழா நடப்பதாகவும், அதற்கு என்னை வரும்படியும் அழைத்தார்.

அன்றைக்கு எனக்குப் படப்பிடிப்பு இருப்பதாகச் சொன்னதும் இயக்குநர் பாரதிராஜா உங்களிடம் பேசுவார் என்று சொன்னார். நீங்கள் வராமல் அந்த விழா பூர்த்தி ஆகாது என்றும் சொன்னார்.

அடுத்த நாள் பாரதிராஜாவிடம் இருந்து போனில் செய்தி வந்திருந்தது. உடனே பாரதிராஜாவிடம் நான் பேசினேன்.

“என்ன… தலைவரே… எப்படி இருக்கீங்க?’’ என்று அவருடைய பாணியில் பேசினார். தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது அப்படித்தான் பேசுவார் பாரதிராஜா.

அவர் “தலைவர்’’ என்று கூப்பிடுவது என்னுடைய ரசிகர்கள் கூப்பிடுவதைப் போன்ற அர்த்தத்தில் அல்ல. அவர் தனி ‘டோனில்’ கூப்பிடுவார் என்னுடைய படங்களை விமர்சிப்பார்.

என்னுடைய படங்கள் வெற்றியடையும்போது என்னிடம் சொல்வார். “உனக்கு எங்கோ மச்சம் இருக்குய்யா’’

எங்களுக்கு இடையிலான நட்பு ஆழமான நட்பு. அவருக்கென்று தனிக் கருத்து இருக்கிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரிக் கருத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கருத்து மாறுபாட்டால் எங்களுடைய நட்புக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராது. நட்பு முறியாது.

நாம் எவ்வளோ பேர், புகழைச் சம்பாதிக்கலாம். ஆனால் சம்பாதிக்க முடியாதவர்கள் நம்முடைய பழைய நண்பர்கள். அப்படிப்பட்ட பழைய நண்பர்களுக்கிடையில் ஏதாவது மனஸ்தாபம் வந்தால் கூட, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிடணும்.

மதுரையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பெரிய விழா எடுத்த மாதிரி உனக்கும் ஒரு விழா எடுக்கப் போறேன்னு என்னிடம் கேட்டார்.

அதற்குப் பிறகு நீ அரசியலுக்கு வந்துருவே.. அதுக்குப் பிறகு உனக்குத் தனியா கச்சேரி வைச்சுக்கிறேன். அது வேறேன்னு சொன்னார்.

பாரதிராஜா தமிழ் கலை, இலக்கியப் பேரவைங்கிற அமைப்பை வைச்சுக்கிட்டுப் பல நல்ல காரியங்கள் பண்ணியிருக்கார்.

இப்போது கலைஞானம் அவர்களுக்காக இந்த அளவுக்குப் பெரிய பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார். இதற்காக அவரை எந்த அளவுக்குப் பாராட்டினாலும் தகும்.

கலைஞானம் சார் அவர்களைப் பற்றிச் சொல்லணும்னா நிறையச் சொல்லணும். இங்கே சிவகுமார் பேசினார்… பாக்யராஜ் பேசினார்.. கோயம்புத்தூர்லே இருந்தப்போ எம்.ஜி.ஆருக்கும், சாண்டோ சின்னப்பத் தேவருக்கும் இருந்த நட்பைப் பற்றிச் சொனானங்க..

அப்பவே தான் படம் தயாரிச்சா உன்னைக் கதாநாயகனா வைச்சுத் தான் எடுப்பேன்னு சொல்லியிருக்கிறார் தேவர். அவர் சொன்னபடியே தேவர் எடுத்த முதல் படம் “தாய்க்குப் பின் தாரம்’’. எம்.ஜி.ஆர் கதாநாயகன். படம் பெரிய ஹிட்.
பெரிய முருக பக்தர் தேவர்.. அவர் கடைசியாத் தயாரிச்ச படம் நான் நடித்த “தாய் மீது சத்தியம்’’. அடிக்கடி என்னிடம் அவரைப் பற்றிப் பேசிக்கிட்டிருப்பார்.

வெள்ளிக்கிழமை சஷ்டியன்னைக்கு கோவையில் தான் நான் சாவேன்னு தன்னுடைய இறப்பைப் பற்றிச் சொல்லிக்கிட்டிருந்தார். அவர் சொன்னபடியே அங்கே அதே தினத்தில் தான் மறைந்தார்.

படிக்காத மேதையான தேவருடைய கதை இலாகாவில் இருந்தவர் கலைஞானம். புதியவன், மா.ரா போன்றவர்கள் இருந்தாலும் இவர் தான் ஆஸ்தான எழுத்தாளர்.

அப்போ நிறைய இந்திப் படங்கள் வெளியாகும். தேவருடைய கதை இலாகாவில் இருக்கிறவங்க எல்லோரும் அந்தப்படத்தைப் பார்க்கப் போவாங்க. இவங்க யாருக்கும் இந்தி தெரியாது.

அந்தப் படத்தைப் பார்த்துட்டு ஒவ்வொருத்தரும் ஒரு கதை ரெடி பண்ணுவாங்க. பிறகு அதை இணைச்சு ஒரு கதையாக்குவாங்க.

அப்படி அவங்க ஒரு கதையை ரசிச்சு எழுதி நல்ல நல்ல கதைகளைக் கொடுத்தாங்க.. ஆனா அப்படி எழுதுற கதாசிரியர்களுக்கு உரிய அந்தஸ்தை, மரியாதை ஏன்.. ஊதியம் கூட அவர்களுக்குச் சரியாக் கிடைக்காது. இந்த நிலை அவர்களுக்கான சாபம்.

ஆரம்ப காலத்தில் புராணப்படங்கள், ராமாயணம், மகாபாரம்னு படமாக்கினாங்க.. அடுத்து சரித்திரக் கதைகளைப் படமாக்கினாங்க.. அந்தப் படங்களில் பார்த்தீங்கன்னா கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது.

அடுத்து சமூகப் படங்கள் வந்தப்பவும் அது தான் தொடர்ந்தது. நான் என்ன நினைக்கிறேன்னா சினிமாவில் டைரக்டர், தயாரிப்பாளர் பெயர் போடுறாங்களே.. அதுக்கு அடுத்தபடியா கதாசிரியர் பெயரைப் போட வேண்டும்.

நீங்களே பாருங்க.. ‘சந்திரலேகா’ படத்தில் சம்பந்தப்பட்ட நடனக் கலைஞர்கள் உட்படப் பலரைப் பத்தி வெளியே தெரியும். ஆனால் யார் கதாசிரியர்ங்கிறது தெரியாது. ‘மலைக்கள்ளன்’ படம் வந்திருக்கு. அதிலேயும் பலரோட பெயர் தெரியும்.

அதோட கதாசிரியர், வசன கர்த்தாவோட பெயர் தெரியாது. அப்போ மட்டுமல்ல, நான் நடிச்ச ‘அண்ணாமலை’, ‘பாட்சா’ படங்களிலே கூட அப்படித்தான். அதோட கதாசிரியர் பற்றிப் பலருக்குத் தெரியாது. அந்த நிலைமை மாறணும்.

இங்கே சினிமா சம்பந்தப்பட்ட பல பேர் இருக்கீங்க, இனியாவது கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்படணும்னு நான் நினைக்கிறேன்.

நான் நடிச்ச ஆறு புஷ்பங்கள், தாய் மீது சத்தியம் படங்கள்னு பல படங்களிலே கலைஞானம் வேலை பார்த்திருக்கிறார். ஜெமினி வாசன், எல்.வி.பிரசாத், ஏ.வி.எம். செட்டியாரிலிருந்து, நாகி ரெட்டியார், சின்னப்பாதேவர் வரை கலைஞானத்தைத் தெரியாதவங்க இருக்க முடியாது.

கதையில் அவர் போடுற முடிச்சு நல்லா இருக்கும்.. சினிமாவுக்கான கதையை உருவாக்கிறதில் ஒரு சிக்கலா? உடனே “கலைஞானத்தைக் கூப்பிடுங்க”ன்னு சொல்லிருவாங்க. இவரும் போய் கதையில் என்ன சிக்கல், எப்படி மாத்தலாம்னு லேசாச் சொல்லிட்டு வந்திருவார்.

மேடையில் இருக்கிற கலைஞானம் சாரைப் பாருங்க.. நல்ல கட்டுமஸ்தான உடம்பு.. நல்ல நிறம்.. குஜராத்தி மார்வாடி மாதிரி… ஏதோ சௌகார்ப்பேட்டேயில் ஜிலேபி விற்கிறவர் மாதிரி இருக்கார் பாருங்க… எப்ப பார்த்தாலும் தனிச்சிருக்காம, மத்தவங்க கிட்டே பேசிக்கிட்டும், சிரிச்சுக்கிட்டும் தான் இருப்பார்.

ஆறு புஷ்பங்கள் படத்தில் விஜய்குமார் முதல் ஹீரோ. நான் செகன்ட் ஹீரோ. அப்போ என் கிட்டே வந்து பேசிக்கிட்டிருப்பார் கலைஞானம். என் மேலே நல்ல அபிமானம் அவருக்கு.

ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருக்கு.. என் கிட்டே வந்து தனியாப் பார்க்கணும்னு சொன்னார் கலைஞானம். வரச் சொன்னேன்.
வந்தார். பைரவி படத்தைப் பற்றிச் சொன்னதும் நான் அவரிடம் கேட்டேன்.

“யார் ஹீரோ?’’

“நீங்க தான் ஹீரோ’’

எனக்கு ஆச்சர்யமாப் போச்சு.

அப்போ எனக்கு ஹீரோ ஆகணும்கிற ஆசை நிச்சயமா கிடையாது. கண்டக்டர் ஆக இருந்து சினிமா ஃபீல்டில் நுழைஞ்சு, ஒரு ஸ்கூட்டர், ஒரு ஃபிளாட்னு இருந்தாப் போதும். அது தான் ஹேப்பிங்கிற மாதிரி நினைப்போட தான் அன்னைக்கு இருந்தேன்.

எனக்கு டான்ஸ் ஆடுறதெல்லாம் வராது… அப்போ எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்காங்க.. அதனாலே எனக்கு ஹீரோ ஆசை எல்லாம் இல்லாம இருந்தது.

கலைஞானம் சார் தான் தயாரிக்கப்போற பைரவி படக்கதையை என்னோட இருந்த நண்பர் நட்ராஜ் கிட்டே சொல்லியிருக்கார்.
உடனே என் கிட்டே வந்தார் நட்ராஜ்.

“சிவாஜி… கதை கேட்டேன். ரொம்ப நல்லா இருக்கு.. இதை ஏன் நீ பண்ணக்கூடாது?”
அவர் சொன்ன பிறகும் எனக்குத் தயக்கம் இருந்தது. அப்போது படத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் தான் வாங்கிக்கிட்டு இருந்தேன். சரி… பணத்தைக் கொஞ்சம் கூடுதலாக் கேட்டா நம்மை வற்புறுத்த மாட்டார்னு நினைச்சு ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டேன்.

கேட்டதும் இரண்டு நாட்களில் ஐந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸாக் கொண்டு வர்றதாச் சொல்லிட்டுப் போய்ட்டார் கலைஞானம்.

சொன்னபடியே இரண்டு நாட்களில் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்திட்டார். ஆனா அவருடைய மனைவியின் தாலியை அடகு வைச்சுத் தான் கொடுத்தாங்கங்கிறது அப்போ எனக்குத் தெரியாது.

படப்பிடிப்பு ஆரம்பிச்சிருச்சு. ஸ்ரீப்ரியா கதாநாயகி. ஸ்ரீகாந்தை மெயின் வில்லனாப் போட்டுட்டார். படத்தோட டைட்டிலை முதலில் கலைஞானம் என்னிடம் சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு.

ஏன்னா… எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்தில் நான் முதலில் பார்த்த படம் ‘பாதாள பைரவி’.

அபூர்வ ராகங்கள் படத்தில் நான் வர்ற முதல் ஷாட்.

“பைரவி வீடு இது தானா?’’- இது தான் நான் பேசிய முதல் டயலாக்.
அதைப் பின் தொடர்ந்த மாதிரி ‘பைரவி’ங்கிற பெயரில் படம்.
அப்போ நான் உணர்ந்தேன்.

“நமக்குத் தெரிஞ்சது கையளவு; தெரியாதது உலகளவு’’.

ஏதோ ஒரு சக்தி நம்ம கூடவே இருக்கிறது.

றுப்புத் தாடியோட நல்ல கெட்அப் எனக்கு அந்தப் படத்தில். படப்பிடிப்பு நடந்துக்கிட்டிருக்கு… இவர் படப்பிடிப்புக்கு வந்தார். ஒரு புற்றில் கையை விட்டுப் பாம்பைக் கையாலே பிடிக்கணும். புற்றில் பாம்பில்லை.

பாம்பு ஒன்னைப் பிடிச்சு உள்ளே விட்டு எடுக்கச் சொன்னாங்க. பாம்பு படம் எடுக்கணும். ஆனா படம் எடுக்கலை.

அதனாலே பாம்பு தலையில் என்னைத் தட்டச் சொன்னாங்க. நானும் தட்டினேன். சீறிக்கிட்டுப் படம் எடுத்துச்சு பாம்பு. உடனே படப் போஸ்டர்களில் அதை வைச்சுத் தான் பப்ளிசிட்டி பண்ணப் போறோம்னாங்க.. அப்படித்தான் பண்ணினாங்க.
கலைப்புலி தாணு ‘கிரேட் சூப்பர் ஸ்டார்’னு அந்தப் படப் போஸ்டர்களில் போட்டார். நான் கூப்பிட்டு அப்படிப் போடக் கூடாதுன்னு சொன்னபிறகு – ‘கிரேட்’ என்கிற வார்த்தையை மட்டும் எடுத்தார் கலைப்புலி தாணு.

படம் ரிலீஸ் ஆன நேரம். நான் இன்னொரு படப்பிடிப்பில் இருந்தேன். கலைஞானம் வந்தார். அன்று மாலை பைரவி படம் திரையிடப்பட்ட ராஜகுமாரி தியேட்டருக்கு அரை மணி நேரம் வந்து பார்க்கச் சொல்லி அழைத்தார்.

நானும் போனேன். தியேட்டரில் செமக்கூட்டம். வெளியிலும் கூட்டம் நின்றிருந்தது. இறுதிக்கட்ட காட்சி திரையில் ஓடிக்கிட்டிருக்கு.. ஒரே கைதட்டல். ஆரவாரம்.
வெளியே வர்றேன். கூடியிருக்கிற கூட்டம் என்னை ஒரே தூக்காத் தூக்கிருச்சு… அதுக்குப் பிறகு பல படங்கள் வர ஆரம்பிச்சிருச்சு.

அதுக்குப் பிறகு கலைஞானத்தைச் சந்திக்கிறபோது நான் கேட்பேன்.

“எப்படி இருக்கீங்க?’’

“நல்ல்ல்லா இருக்கேன்’’ன்னு அழுத்தம் கொடுத்துச் சொல்லிவிட்டுச் சிரிப்பார் கலைஞானம்.

என் கிட்டே வந்து அடுத்து படம் பண்ணலாம்னு அவர் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கலை. அதுக்குக் காரணம் அவரோட தன்மானம். நானும் மற்ற பட வேலைகளில் பிஸியா இருந்துட்டேன்.

ஆனா குழந்தை அழுதாத் தான் தாய் பாலைக் கொடுக்க முடியும்.
அருணாசலம் படம் எடுத்தப்போ அவருக்கு என்னால் உதவ முடிந்தது.
“வாழ்வை ஈஸியா எடுத்துக்கணும். கடமையை சீரியஸா எடுத்துக்கணும்’’ – இதைத் தான் அவர் கடைப்பிடிக்கிறார்.

சிவகுமார் பேசும்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் குடியிருப்பதாகச் சொன்னார். மற்றவர்களும் சொன்னார்கள்.

அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவன செய்வதாக அமைச்சர் இங்கு பேசினார். அந்த வாய்ப்பை நான் அரசுக்குக் கொடுக்க மாட்டேன்.

கடைசி மூச்சு உள்ளவரை அவர் என்னுடைய வீட்டில் தான் வாழ வேண்டும்.
கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாகப் பாருங்கள்.
இப்படியொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி’’

சொல்லி முடித்து கலைஞானத்திற்குப் பொன்னாடை போர்த்தி அவர் வழங்கிய பட்டம் ‘கதைச் சக்கரவர்த்தி’.

You might also like