திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி ஆனார்?

– எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை உணர்வு பற்றி கி.வீரமணி

வாசிப்பின் ருசி:

“என்னுடைய திருமணம் 1958-ல் திருச்சியில் நடந்தபோது பெரியாரும், மணியம்மையாரும் உடனிருந்து நடத்தி வைத்தார்கள். அப்போது வந்திருந்து வாழ்த்தியவர் எம்.ஆர்.ராதா. அவர் பேசிய பேச்சின் பதிவுகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன.

76-ல் எங்களைக் கைது செய்தபோது பெரியார் திடலில் ஒரே கூட்டம். எங்களைக் கைது செய்து காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ராதாவையும் அழைத்து வந்தார்கள்.

வந்ததும் ராதா காவல்துறை அலுவலகத்தில் சுற்றிலும் இருந்த படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே என்னிடம் “இவங்க எல்லாம் யாரு?” என்று கேட்டார்.

நான் ஐ.ஜி.யின் பெயர்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தேன். அடுத்து அங்கே மாட்டியிருந்த திருவள்ளுவர் படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார்,

“திருவள்ளுவர் எப்போப்பா ஐ.ஜி ஆனாரு?”

சிறைக்கு வந்த அந்த நெருக்கடியான நேரத்திலும் அவரிடமிருந்த நகைச்சுவை உணர்வு போய்விடவில்லை.

சிறையில் இருந்த மருத்துவமனையில்தான் அவரை வைத்திருந்தார்கள். அங்கிருந்தபடியே பலருக்கு உதவுவார்.

‘நள்ளிரவில் சுதந்திரம்’ போன்ற ஆங்கிலப் புத்தகங்களை நான் மொழிபெயர்த்து சொல்லும்போது ஆர்வத்துடன் கேட்பார்.

வெளியே வந்தபிறகு பெரியார் மறைந்த நேரத்தில் ராதா வந்திருந்தபோது எம்.ஜி.ஆரும் வந்திருந்தார்.

எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் “என்ன.. ராமச்சந்திரா? எப்படி இருக்கே?” என்று ராதாவே அவரிடம் போய்க் கேட்டபோது வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

1979-ல் ராதா மறைந்த அன்று தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு. மாநாட்டிற்கிடையில் அவருடைய மறைவுச் செய்தி கிடைத்ததும் மேடையிலேயே அந்தச் செய்தியை அறிவித்துவிட்டு திருச்சிக்குப் போனோம்.

அன்பில் தர்மலிங்கம், நான், வாசு எல்லோரும் சேர்ந்து சென்றோம். நல்லடக்கம் நடந்தது. பிறகு அவருடைய பெயரில் திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் நினைவாலயம் அமைக்கப்பட்டபோது கலைஞரும், நானும் கலந்து கொண்டோம்.
அவருடன் நான் பழகியதை வைத்து அவரை மதிப்பிட்டால் இப்படித்தான் சொல்ல முடியும்.

அவர் ஒரு சுய சிந்தனையாளர். துணிச்சலானவர். படிப்பறிவுக்கும் பொது அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ராதா ஒரு நல்ல உதாரணம்.

பெரியாரின் துணிச்சல், எதிர்ப்பு வரும்போது கலங்காமல் அதை எதிர்கொள்ளும் மன உறுதி போன்றவை இவருக்கும் இருந்தது. அத்துடன் பலருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

அந்த உதவியை மற்றவர்களைப் போல விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர் ராதா என்பதுதான் அவருடைய சிறப்பு.”
****
‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’
ஆசிரியர்; மணா
டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர், சென்னை-78,
போன்; 044 48557525, 8754507070
விலை – ரூ.250

You might also like