மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் :

யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்?

*

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

‘எதிர்பாராத விதமாக’ ஆற்றில் மூழ்கியிருக்கிறார்கள் என்று தான் பெரும்பாலான ஊடகங்கள் சொல்கின்றன.

சிலவற்றில் மட்டும் அதே ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டதால்- உருவான ஆழமான பள்ளத்தில் சிக்கியே அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிற செய்தி வெளிவந்திருக்கிறது.

ஆற்றில் யாரோ மணலைக் கொள்ளையடிக்க சம்பந்தமே இல்லாமல் ஆற்றை நம்பி அதில் இறங்கிய ஏழு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்த உயிரிழப்புக்கு யார் முதற் காரணம்?

மணலைக் கொள்ளையடித்த கும்பல் தானே! ஆறுகளைத் தோண்டி ஆழமான பள்ளங்களை அவர்கள் உருவாக்கியதால் தானே அதில் சிக்கி இவர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்கிறது..

இப்படிப்பட்ட மணல் கொள்ளை கெடிலம் ஆற்றில் மட்டுமா நடக்கிறது? தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் நீதிமன்றங்கள் தடுத்தாலும், அதையும் மீறி நடந்து கொண்டு தானிருக்கின்றன. அண்டை மாநிலங்களிலும் ஆறுகள் இருக்கின்றன. அங்கு இப்படி யாராவது மணலைத் தன்னிச்சையாக அள்ளிவிட முடியுமா? அதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மணல் அள்ளப்பட்டுப் பக்கத்து மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட அவலம் எல்லாம் இங்கு நடந்திருக்கிறது? எத்தனை லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும் ஆறுகளில் இருந்து மணல் அள்ளப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது?

இதனால் ஆறுகளில் உருவாகும் பள்ளங்களில் மூழ்கி இதற்கு முன்னாலும் பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன?

ஆட்சியில் இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும், மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் எந்த அளவுக்கு அதிகார பலம் உள்ளவர்களாக இருப்பார்கள்? எத்தனை பேருக்குக் கமிஷன் தருகிறவர்களாக இருப்பார்கள்?

மணல் கொள்ளைக்கு சமீபத்திய பலிகள் இந்த ஏழு உயிர்கள்? இந்தப் பலிக்கு மூல காரணமானவர்கள் மீது யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? இந்த ஆற்று மணல் கொள்ளை எப்போது தான் தடுக்கப்படும்?

நீர் நிலைகள் குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் பேசுகிறவர்கள் முதலில் இந்தத் தொடர் மணல் கொள்ளையைத் தடுக்கட்டும்!

– யூகி

You might also like