இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!

– ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே சிக்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்திய பிரதமர் மோடியும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை, குறிப்பாக இந்திய மாணவர்கள் அதிகளவில் சிக்கியுள்ள கார்க்கிவ் நகரின் நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

சண்டை நடைபெற்று வரும் பகுதியில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து விவாதித்தனர்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் இந்தியப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது 2வது முறையாகும்.

ஏற்கனவே போர் மூண்ட பிறகு அடுத்த நாளான கடந்த 25-ம் தேதி இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

“இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்குச் செல்ல விடாமல் உக்ரைன் ராணுவம் தடுக்கிறது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like