தாய் – தலையங்கப் பக்கம்
***
“கனவு மெய்ப்பட வேண்டும்” என்கிற மாதிரியான இலக்குகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது நம்மில் பலரின் வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் சற்றே குழப்பம்.
காரணம் – உலகம் முழுக்கப் பரவிப் பெரும்பீதியை ஏற்படுத்தியிருக்கிற கொரோனா இதுவரை பலரைப் பாதித்திருக்கிறது என்றாலும், அதனால் உலகம் முழுக்க சுமார் 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணரும்போது அதன் தாக்கத்தையும், வீரியத்தையும் அழுத்தமாகவே உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி சமாச்சாரங்களால் சீர்குலைந்து போயிருந்த நம்முடைய நாட்டின் பொருளாதாரம், கொரோனா பாதிப்புக்குப் பிறகு முற்றிலும் குலைந்து போய்விட்டது.
பலருடைய வேலை வாய்ப்பு பறிபோய்விட்டது. சிறு வியாபாரிகள் காணாமல் போய்விட்டார்கள்.
பெரும் நிறுவனங்களில் கூடச் சம்பளக் குறைப்பு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு எதையாவது விற்றுச் சமாளிக்கும் அளவுக்கு மோசமாகி இருக்கிறது நிலைமை.
எங்கும் கடனை எதிர்பார்க்கிறார்கள் அல்லது இலவசச் சலுகையை எதிர்பார்க்கிறார்கள். அடகு வைக்கும் கடைகளில் தங்கள் கை வசம் இருந்த பொருட்களை வைத்து அலுத்துப் போய்விட்டார்கள் சாதாரண மக்கள்.
கொரோனா காலத்தில் பலர் வீட்டில் முடங்கியிருந்தபோது, அவர்களோடு வெறுமையும் அவரவர் மனங்களில் முடங்கியிருந்தது. பலருடைய கனவுகளைக் கலைத்துவிட்டிருந்தது கொரோனாக் காலம்.
சொந்தங்கள் அருகில் இருந்தும் பரஸ்பரம் பேச முடியாத தூரத்தில் பலரை நகர்த்தியிருந்தது இதே கொரோனாக் காலம்.
தங்களை விட, இந்தச் சூழலில் தங்களுடைய பிள்ளைகள் எப்படி வளரும் என்கிற பெருமூச்சுகள் பல பெற்றோரிடம். கொரோனாவைத் தொடர்ந்து ஒமைக்கரான் அதனுடன் இணைந்த இணைப்பாகக் கூடவே பரவியநிலையில் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எதுவும் உலகமயமாகும் சூழலில், கொரோனா, ஓமைக்ரான் என்று பெருந்தொற்றுகளும் உலக மயமாகிவிட்டன.
பல நாடுகள் மறுபடியும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிற நிலையில், புத்தாண்டு நெருங்குகிற போது, வழக்கமான குதூகலமான உற்சாகத்தோடு அதை வரவேற்க முடியாத நிலை.

இருந்தும் நம்பிக்கை கொள்வது தான் இப்போதைய அத்தியாவசியத் தேவை. ஏதாவது பற்றிக் கொள்ளத் தவிக்கும் கைகளுக்குப் பிடித்துக் கொள்ள நம்பிக்கை தேவைப்படுகிறது.
நம்பிக்கை நமது எண்ணங்களிலும், செயல்களிலும் தெரிந்தால் தான் நமது வாரிசுகள் அதே நம்பிக்கையின் கரம் பிடித்து வளர்வார்கள். எதிர்காலம் என்ற ஒன்றை அச்சமாகப் பார்க்காத மனநிலை தான் இன்றைய, உடனடித்தேவை.
நம் மனதை நாமே சீர்படுத்துவோம். அச்சத்தை அகற்றுவோம்!
நம்பிக்கை இளந்தளிரைப் போலத் துளிர் விட்டடும்!
#