உலகிலேயே சிறந்த புத்தகம்: இந்திரனின் புதிய முயற்சி
கலை விமர்சகர் இந்திரன், உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது எழுதப்படவில்லை. அதுவொரு கலை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. முதல் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும்.
நூலின் முன்னுரையில் “இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக நான் 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் உலகின் எல்லா மொழிகளிலும் அதை வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்கிறார்.
உலகிலேயே சிறந்த புத்தகம் இதுவரையிலும் எழுதப்படாத புத்தகமே. நீங்கள் எழுதுவீர்கள் என்று அது உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் சொல்கிறார் இந்திரன். என் போன்ற வாசகர்களுக்காக நீங்கள் எழுதுவீர்கள் ப்ளீஸ் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
ஒரு நோட்டை கொடுத்துவிட்டு உலகிலேயே சிறந்த புத்தகம் என்று சொல்வது ஏன்?
கலை விமர்சகர் இந்திரன், அதற்கு மிகச்சரியான விடையை வைத்திருக்கிறார். கை நீட்டி மழை தொட்டு சுவைக்கும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் புத்தகக் கலையை செய்து பார்த்திருக்கிறார். புத்தகத்தையே ஒரு கலைப்படைப்பாகச் செய்யும் முதல் முயற்சி.
அதில் ஒரு ஜென் கலைத் தத்துவம் உள்நின்று இயங்குகிறது என்கிறார். அதாவது தமிழில் ஒருவரை அடக்கமான அறிஞர் என்று சொல்வதற்கு, “அவர் ஒரு நிறைகுடம்” என்று சொல்வதுண்டு. ஆனால் ஜென் மரபில் அத்தகையவரை காலி குடம் என்றுதான் சொல்வார்கள்.
நிறை குடத்தில் இன்னும் தண்ணீர் பிடிக்க முடியாது. ஆனால் காலி குடத்தில் தண்ணீர் நிரப்பலாம். எனவே காலிகுடம்தான் மிகவும் பயனுள்ளது. இந்த ஜென் தத்துவத்தில்தான் இந்தப் புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கி நமக்குத் தெளிவை ஏற்படுத்துகிறார் இந்திரன்.
ஒரு சிறு அட்டையில் கருத்துரு கலை பற்றிய விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அதில், கருத்துரு கலையில் ஒரு சிந்தனை அல்லது கருத்தே ஒரு கலைப் படைப்பாகி விடுகிறது. இக்கலையில் வெளிப்புறத் தோற்றத்தைவிட, அதன் உட்கிடையாக உள்ள கருத்து என்ன என்பதே முக்கியத்துவம் பெறுகிறது.
கருத்துக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து கலைப் படைப்பாகச் செய்யும் ஒரு தற்கால நவீன கலைவடிவம்தான் அது. ஒரு கலைப் படைப்பு என்பது ஒரு கலைஞனால் மட்டுமின்றி, அதன் பார்வையாளனாலும் படைக்கப்படுகிறது என்று கருத்துரு கலை வாதிடுகிறது என்கிறார் இந்திரன்.

கோடு, வண்ணம், வடிவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வடிவவியல் சமூக, அரசியல் கருத்துகள் முக்கியமில்லை எனக் கருதியது. இதற்கு எதிர்ப்பியக்கமாக முன் வைக்கப்பட்டதுதான் கருத்துரு கலை.
மார்சல் டுஷாம்ப் (1887-1968) முன்வைத்து வெற்றிகண்ட கருத்துரு கலை டாடாயிசத்தின் ஒரு நீட்சிதான். ஜான் கேஜ் (1912–1992) இசையில் இதைச் செய்து பார்த்தார். புத்தம் புதிய மூத்திரக் கோப்பை ஒன்றைத் தனது கையெழுத்திட்டு Fountain எனும் தலைப்பிட்டு அதனைத் தனது கலைப் படைப்பென்று கண்காட்சியில் வைத்தார் மார்சல் டுஷாம்ப்.
ஒரு புத்தகம் வெறும் வாசிப்புடன் நின்றுவிடாமல், அதன் அடுத்த கட்டமாக இன்னொரு இலக்கியச் செயல்பாட்டில் வாசகனைத் தூண்டுவது இதன் சிறப்பம்சம் என்கிறார். தமிழில் இதுவொரு புதுமை புத்தகக் கலை முயற்சி.
-தான்யா
02.02.2021 11 : 45 A.M