பொதுவாக பண்டிகைகளுக்குப் பின்னால் மரபு சார்ந்து புனையப்பட்ட சில கதைகள் இருந்தாலும் அந்தக் கதைகள் தற்போது முக்கியத்துவம் பெறுவதில்லை. பலரையும் ஒன்றிணைத்து குதூகலப்படுத்தும் இந்தப் பண்டிகை தான் எல்லாவற்றையும் மீறி பெரும் கொண்டாட்டமாக மாறிவிடுகிறது.
அதுமாதிரிதான் தீபாவளியும்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் நடக்கும் வணிகத்தின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டிய அளவில் இருக்கிறது.
நம்மூர் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் நாடு முழுக்கவும் கடல் கடந்தும் சென்று பல ஆயிரம் கோடிகளை ஈட்டிக் கொடுக்கின்றன.
இந்த வருவாய்க்காகத்தான் பட்டாசு உருவாக்கத்தின்போது நிகழும் விபத்துக்களில் நம் தமிழர்கள் உயிரிழக்கிறார்கள் அல்லது கந்தகத் துகளை சுவாசித்து வெவ்வேறு நோய்களுக்கு இறையாகிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும், இந்தியா முழுக்க பரந்துபட்ட அளவில் தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஜவுளி வியாபாரம் துவங்கி விடுகிறது.
டிவி விளம்பரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்நுழைந்து புத்தாடை வாங்குவதை ஏதோ அத்தியவசியமான பண்டத்தைப் போல ஆக்கி, வாங்க வைத்து விடுகின்றன.
நம் வீட்டுப் பெண்கள் ஓர் ஆண்டாக எடுக்க நினைத்த உடைகளை இந்தப் பண்டிகைக் காலத்தில்தான் பெரும்பாலும் வாங்குகிறார்கள்.
பற்றாக்குறைக்கு வெவ்வேறு முகத்தோற்றத்தில் டிவி விளம்பரங்களில் அடிக்கடி வெளிப்பட்டு, செய்கூலி தவிர்த்த நகைகளை ஏதோ ஓசியாக வழங்குவதைப் போல ஒருவித பிம்பத்தைக் கட்டமைத்து மாதச் சம்பளக்காரர்களைக் கடன்காரர்களாக்கி நகைக்கடைக்குள் பெண்கள் நுழைய வேண்டிய சூழ்நிலையையும் இம்மாதிரிப் பண்டிகைகள் தோற்றுவிக்கின்றன.
இதுதவிர நாடு முழுக்க பெரும் கோடிக்கணக்கான அளவுக்கு இனிப்பு மாபெரும் வணிகமாகப் பெருகிப் பரவி ஏற்கனவே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி அவர்களைத் தடுமாற வைக்கிறது.
பொதுவாக தீபாவளிக்கு முன்பும் பின்பும் உள்ள மூன்று நாட்கள் தீபாவளி மூடிலேயே இருக்கின்றன.
வடக்கிலிருந்து தெற்கே பிழைக்க வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்தாலும் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு ரயில் ஏறும்போது அவர்களது முகங்களில்தான் எவ்வளவு உற்சாகம்?
அதேமாதிரியே சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பல லட்சம் பேர் ரயில், பேருந்து, கார்கள் மூலம் பயணித்து சொந்த ஊர்களை அடைவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் கூட, இதை நோக்கித்தான் அவர்கள் போகிறார்கள்.
பண்டிகையை ஒட்டி தங்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள் பலரையும் சந்தித்து, கொண்டாட்ட மனநிலைக்கு மாறி, விருந்துண்டு கேளிக்கைகளில் ஈடுபட்டு, உருவாகும் கனநேர பரவசத்திற்காகத்தான்.
இதைக் கணக்கில் வைத்து தான் டாஸ்மாக் கடைகளில் ஒருநாள் விற்பனை கூட பல கோடிகளைத் தாண்டுகிறது.
இதற்காகத் தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று பிரபலமான சொற்றொடர் உண்டு.
அதுமாதிரிதான் பல்வேறு சிரமங்களைச் சகித்துக்கொண்டு, கடன் வாங்கியாவது பயணம் செய்து தங்களது சொந்தங்களைத் தேடிப் பயணப்படுகிறவர்கள் பெரும் எதிர்வினைதான் என்ன?
சிறு இறகால் மனதை நெருடுகிற மாதிரியான சில மணிநேர சந்தோஷங்கள் தான் பலரையும் வெவ்வேறு திசைகளுக்கு நகர வைக்கின்றன. இது தான் தீபாவளி போன்ற பெரும் பண்டிகைகளுக்குப் பின்னிருக்கிற உளவியல் தாக்கம்.
இத்தகைய சந்தோஷம் வெளிப்படுவது குழந்தைகளிடம் இருந்து தான். தீபாவளிக்கான எதிர்பார்ப்பை அவர்கள் சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விடுகிறார்கள். புத்தாடை அணிந்து விதவிதமான உணவுகளை ருசித்து பட்டாசுகளை வெட்டிக்கும்போது அந்தக் குழந்தைகளின் முகத்தில் படரும் வெளிச்சத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
இதை உணர்த்தும் விதத்தில் மூத்த எழுத்தாளரான கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் அருமையான சிறுகதையைச் சொல்லலாம்.
ஊரில் தீபாவளியன்று பல வீடுகளிலும் கொண்டாட்ட மனநிலை அதிகப்பட்டிருக்கும்போது மிகவும் நடுத்தரக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் தெருவில் அரைமுறை ஆடை அணிந்தபடி அனாதையாய் நிற்கும் சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து உடைகளை அணிவித்து அவருடைய பெயரைக் கேட்கும்போது அந்தச் சிறுவன் ராஜா என்று மென்மையாகச் சொல்வான்.
அவனுக்கு அடைக்கலம் அளித்த சிறுவன் வெளியில் மற்றவர்களிடம் பரவசத்தோடு சொல்லுவான், “எங்கள் வீட்டிலும் ராஜா வந்திருக்கிறார்”.
#தீபாவளி #Diwali #பண்டிகை #Festival #தீபாவளிக்கொண்டாட்டம் #DiwaliCelebration #தீபாவளிமகிழ்ச்சி #DiwaliHappiness #தீபாவளிவணிகம் #DiwaliBusiness #சிவகாசிபட்டாசு #SivakasiCrackers #பட்டாசுத்தொழிலாளர்கள் #FireworksWorkers #பட்டாசுவிபத்துகள் #FireworksAccidents #தீபாவளிபுத்தாடைகள் #DiwaliNewClothes #ஜவுளிவணிகம் #TextileBusiness #தங்கநகைகள் #GoldJewellery #நகைக்கடைவிளம்பரங்கள் #JewelleryAdvertisements #இனிப்புவணிகம் #SweetsBusiness #தீபாவளிபயணம் #DiwaliTravel #சொந்தஊர்பயணம் #HometownTravel #பண்டிகைக்காலப்பயணம் #FestivalTravel #குடும்பஉறவுகள் #FamilyRelationships #சொந்தங்கள் #Relatives #குழந்தைகளின்மகிழ்ச்சி #ChildrensHappiness #குழந்தைகள்கொண்டாட்டம் #ChildrensCelebration #பகிர்தல் #Sharing #மனிதநேயம் #Humanity #அன்பு #Love #மகிழ்ச்சி #Happiness #உளவியல்தாக்கம் #PsychologicalImpact #குஅழகிரிசாமி #KuAlagirisamy #ராஜாவந்திருக்கிறார் #RajaVanthirukkarar #தமிழ்சிறுகதை #TamilShortStory #தமிழ்இலக்கியம் #TamilLiterature
