சாக்லேட்டை கடவுளின் உணவாகக் கருதிய மக்கள்!

உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும், கொண்டாட்டங்களின் அடையாளமாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு காரணமாகவும் விளங்கும், சுவையான இனிப்பு பண்டம் தான் சாக்லேட்.

அன்பைப் பகிரவும், உறவுகளைப் பேணவும், தற்கால தலைமுறையினர் அதிகம் உபயோகிக்கும் பொருளாகவும் இது உள்ளது.

சாக்லேட் என்ற வார்த்தை ஆஸ்டெக் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு கசப்பான நீர் என்று பொருள்.

முதன்முதலில் ஆஸ்டெக் நாகரீக மக்கள், கோகோ மற்றும் தண்ணீரை பயன்படுத்தி ஒரு கசப்பான பானமாகவே இதனை அருந்தினர். இதைக் கடவுளின் உணவு என்றும் கருதினர்.

இந்த கோகோ விதைகள் அக்காலத்தில் பணத்திற்கு பதிலாக நாணயங்களாகவும் பயன்படுத்தப்பட்டன.

பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் மக்களால் இது ஐரோப்பாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது.

முதன் முதலில் பிரபுக்களும் மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமே உண்டு வந்தனர். பின்பு சாதாரண மக்களுக்கும் இவை கிடைக்க தொடங்கின.

கோகோ விதைகளுடன் சர்க்கரையும் பாலும் சேர்க்கப்பட்டு இன்று நாம் சாப்பிடும் நவீன சாக்லேட் ஆக உருப்பெற்றது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோகோ விதைகள் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது.

உலக அளவில் ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து, போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் சாக்லேட் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

இதில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. பனி படர்ந்த மலைகளும், சுண்டி இழுக்கும் சாக்லேட்டின் சுவையும் அந்நாட்டின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகின்றன.

சாக்லேட்டின் பிறப்பிடம் சுவிட்சர்லாந்து இல்லை என்றாலும் அதனை அனைவரும் விரும்பும் ஒரு பொருளாக மாற்றிய பெருமை சுவிஸ் மக்களையே சேரும்.

17-ம் நூற்றாண்டில் தான் அந்நாட்டில் சாக்லேட் அறிமுகமானது. அடுத்து வந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டன.

அந்நாட்டு பசுக்கள் சொறியும் பாலே சுவிஸ் சாக்லேட்டுகளின் அசாத்திய சுவைக்கு காரணமாகிறது.

ஆல்ப்ஸ் மலை அடிவாரங்களில் படர்ந்து கிடக்கும் பசும்புல்லை சாப்பிட்டு, சுத்தமான பனித் தண்ணீரை குடித்து, பருத்த மடிகளை சுமந்து, அவைகள் வழங்கும் பாலினால் வரும் அடர்த்தியான கிரீம்களைக் கொண்டு செய்யப்படுவதால், இந்த சாக்லேட்டுகள் அதீத சுவையில் உள்ளன.

அதோடு, இதன் தயாரிப்பில் தாவர எண்ணெய்க்கு பதிலாக தூய கோகோ வெண்ணை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் பிரசித்தி பெற்ற வெவ்வேறு பொருட்கள் இருப்பது போல, சுவிட்சர்லாந்து சாக்லேட்டுகள் சுவையிலும் அமைப்பிலும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.

பெண்ரி என்ற இடத்தில் சாக்லேட்டுகளை கரடி உருவத்திலும், ஜூரா மலைப் பகுதியில் கைகடிகார வடிவிலும், இளவேனிற் காலத்தில் பூக்கள் வடிவிலும், மழைக்காலத்தில் காளான்கள் வடிவிலும் செய்து வாழ்க்கையோடு சாக்லேடுகளை கைகோர்க்க வைத்திருக்கின்றனர் சுவிஸ் மக்கள்.

இவர்கள் சாக்லேட் உற்பத்தியில் மட்டுமல்லாது அதை விரும்பி உண்பதிலும் உலக அளவில் முதலிடத்தில் உள்ளனர்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் மதிய உணவில் ரொட்டியும் சாக்லேட்டுகளும் தவறாமல் இடம்பெறுகின்றன.

ஒரு சராசரி ஸ்விஸ் குடிமகன் வருடத்திற்கு 10 கிலோ சாக்லேட்டுகள் உண்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாயில் உருகும் மென்மைக்கு பெயர் பெற்ற Lindor ரக சாக்லேட்டுகள், ஸ்விட்சர்லாந்தின் மேட்டர் ஹோம் மலையை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முக்கோண வடிவம் கொண்டுள்ள Toblerone சாக்லேட்டுகள்,

ஆடம்பர பிரியர்களுக்காக உருவாக்கப்படும் Laderoc சாக்லேட்டுகள், இந்தியாவிலும் கால் ஊன்றியுள்ள Nestle வின் மில்க் சாக்லேட்டுகள், என்றும் பழமை குன்றாத Cailer சாக்லேட்டுகள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சுவிஸ் சாக்லேட்டுகள் ஆகும்.

மிதமான அளவில் சாக்லேட்டுகளை உண்பது உடலுக்கு நன்மை தருவதாக கூறப்படுகிறது.

ஒருவரின் மனநிலையை உடனடியாக மாற்றுவதற்கும் எண்டோர்ஃபின் மற்றும் செரோட்டோனின் போன்ற மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களை மூளையின் சுரப்பதற்கும் இவை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தனது சாக்லேட் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பிரத்தியேக கூட்டமைப்பை நிறுவியுள்ளது ஸ்விட்சர்லாந்து.

இந்நாட்டின் இயற்கை வளம், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் மக்களின் அசாத்திய தொழில் தொழில்நுட்பத் திறன் ஆகியவை காரணமாக இன்று ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகின் கருப்பு தங்கம் என்று போற்றப்படுகின்றன.

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுடன் இவற்றை உண்டு ஆரோக்கியத்தையும் சுவையையும் கொண்டாடுவோம்.

S. வாணி

You might also like