சில நேரங்களில் மாலைப் பொழுதில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பூச்சிகள் எழுப்பும் ரீங்கார ஒலியை நம்மில் பலரும் கேட்டிருப்போம்.
ஆனால், அந்த ஒலியை எழுப்பும் சிக்காடா (Cicada) பூச்சிகளைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
சிக்காடாக்கள் உலகின் பல பகுதிகளில் காணப்படும் பூச்சிகள். இவை ஹெமிப்டெரா (Hemiptera) என்ற பூச்சி வரிசையைச் சேர்ந்தவை.
உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட சிக்காடா இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் பரிணாம வரலாறு பல கோடி ஆண்டுகள் பழமையானது.
2024-ஆம் ஆண்டு Nature Communications இதழில் வெளியான ஓர் ஆய்வில், மியான்மரில் கிடைத்த சுமார் 99 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் படிமங்கள் ஆராயப்பட்டன.
அவற்றில் சிக்காடாக்களின் பழங்கால உறவினர்களாகக் கருதப்படும் பூச்சிகளின் உடல் அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தப் படிமங்கள், சிக்காடாக்களின் பரிணாம வளர்ச்சியையும் பழங்கால வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.
சிக்காடாக்களின் வாழ்க்கையில் மிகவும் வியப்பூட்டும் விஷயம் அவை மண்ணுக்குள் செலவிடும் நீண்ட காலம்தான்.
குறிப்பாக, வட அமெரிக்காவில் காணப்படும் சில periodical cicadas இனங்கள் 13 அல்லது 17 ஆண்டுகள் வரை மண்ணுக்குள் நிம்ஃப் (nymph) என்ற வளர்ச்சிப் பருவத்தில் வாழ்கின்றன.
ஆனால், எல்லா சிக்காடாக்களும் இவ்வளவு காலம் மண்ணுக்குள் இருப்பதில்லை.
மண்ணுக்குள் இருக்கும்போது இவை மரங்களின் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சி உணவாக எடுத்துக்கொள்கின்றன.
வளர்ச்சியின் பல நிலைகளைக் கடந்து, முழுமையாக வளர்ந்ததும் மண்ணிலிருந்து வெளியே வருகின்றன.
வெளியே வந்தவுடன் அவற்றின் வாழ்க்கையில் அடுத்த முக்கியமான மாற்றம் நிகழ்கிறது.
நிம்ஃப் தனது பழைய வெளிப்புறத் தோலைக் கழற்றி, இறக்கைகளைக் கொண்ட முதிர்ந்த பூச்சியாக மாறுகிறது. இந்த மாற்றத்தை molting என்று அழைக்கிறார்கள்.
புதிதாக வெளிவரும் சிக்காடாவின் உடல் முதலில் மென்மையாக இருக்கும். அதன் வெளிப்புற உடல் உறுதி பெறச் சிறிது நேரம் தேவைப்படும்.
முதிர்ந்த சிக்காடாக்களின் வாழ்க்கை பொதுவாக சில வாரங்கள்தான்.
குறிப்பாக, periodical cicadas-ன் முதிர்ந்த பருவம் சுமார் மூன்று முதல் நான்கு வாரங்கள் நீடிக்கலாம். இந்தக் குறுகிய காலத்தில் அவை இனப்பெருக்கம் செய்து, அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன.
ஆண் சிக்காடாக்கள் எழுப்பும் உரத்த ஒலி அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. அவற்றின் உடலின் இருபுறங்களிலும் இருக்கும் tymbal எனப்படும் சிறப்பு அமைப்புகள் அதிர்வதன் மூலம் இந்த ஒலி உருவாகிறது.
பெண் சிக்காடாக்களைக் கவர்வதற்காகவே ஆண்கள் பெரும்பாலும் இந்த ஒலியை எழுப்புகின்றன.
பல சிக்காடாக்கள் ஒரே நேரத்தில் ஒலி எழுப்பும்போது, மரங்கள் நிறைந்த பகுதிகளே ரீங்காரத்தால் நிறைந்துவிடும்.
இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் சிக்காடா மரக்கிளைகளில் சிறிய பிளவுகளை ஏற்படுத்தி, அவற்றில் முட்டைகளை இடுகிறது. சில வாரங்களுக்குப் பிறகு முட்டைகள் பொரிந்து சிறிய நிம்ஃப்கள் வெளிவருகின்றன.
அவை தரையில் விழுந்து மண்ணுக்குள் சென்று, அடுத்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்குகின்றன.
முட்டைகள் பொரிக்கும் காலம் சிக்காடா இனத்தைப் பொறுத்து மாறுபடும்.
ஆனால், ஏன் சில சிக்காடாக்கள் 13 அல்லது 17 ஆண்டுகள் கழித்தே ஒரே நேரத்தில் வெளியே வருகின்றன?
இதற்கான ஒரு முக்கிய விளக்கம் அவற்றின் உயிர்வாழும் உத்தியுடன் தொடர்புடையது.
ஏராளமான சிக்காடாக்கள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது, பறவைகள் மற்றும் பிற வேட்டையாடும் விலங்குகள் அவற்றில் பலவற்றை உணவாக எடுத்துக்கொண்டாலும், எல்லாவற்றையும் உண்ண முடியாது.
இதனால் போதுமான சிக்காடாக்கள் உயிர் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
மேலும், 13 மற்றும் 17 ஆகியவை பகா எண்கள் (prime numbers). இந்த எண்களின் அடிப்படையிலான வாழ்க்கைச் சுழற்சி, குறிப்பிட்ட இடைவெளிகளில் தோன்றும் வேட்டையாடிகளுடன் சிக்காடாக்களின் தோற்றக் காலம் அடிக்கடி ஒத்துப்போவதைத் தவிர்க்க உதவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த வாழ்க்கைச் சுழற்சி எவ்வாறு பரிணாம வளர்ச்சியில் உருவானது என்பதற்கான முழுமையான விளக்கம் இன்னும் உறுதியாகவில்லை.
சிக்காடாக்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. அவை பொதுவாக மனிதர்களைக் கடிப்பதில்லை; கொட்டும் அமைப்பும் கிடையாது.
இருப்பினும், பெண் சிக்காடாக்கள் முட்டையிடும்போது இளம் மரங்களின் சிறிய கிளைகளுக்குச் சேதம் ஏற்படலாம். அதே நேரத்தில், அவை பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பல பூச்சிகளுக்கு முக்கியமான உணவாகவும் விளங்குகின்றன.
பல ஆண்டுகள் மண்ணுக்குள் அமைதியாக வளர்ந்து, சில வாரங்கள் மட்டுமே வெளியுலகில் வாழும் சிக்காடாக்கள் வியப்பூட்டும் அறிவியலில் ஒரு பாகம்.
அவற்றின் வாழ்க்கை, உயிரினங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப எத்தனை விதமான வழிகளில் உயிர்வாழ்கின்றன என்பதை நமக்கு உணர்த்துகிறது.
- சங்கீதா
