மனித சமூகம் பின்பற்றி வரும் அழகான நடைமுறைகளில் ஒன்று திருமணம். இது நம் வாழ்வின் அடிப்படை அங்கமாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் உள்ளது.
தலைமுறைகளை உருவாக்கும் பொறுப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கருவூலமாகவும் விளங்குகிறது.
கொண்டாட்டங்களின் தொகுப்பாகவும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் மட்டுமே அறியப்பட்ட திருமணங்கள், இன்று சமூக நோக்கத்துடனும் நடத்தப்படுகின்றன.
இத்தகைய ஒன்றுதான் “ஜீரோ வேஸ்ட் வெட்டிங்” என்று அழைக்கப்படும் பூஜ்ய கழிவு திருமணங்கள்.
இது இயற்கைக்கு உகந்த முறையில் நடத்தப்படும் ஓர் மஙகல நிகழ்வாகும்.
பொதுவாக திருமண விழாக்களில் உருவாகும் குப்பைகளை முற்றிலுமாக தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடத்தப்படும் நவீன மற்றும் சிறந்த திருமண முறையாக இது கருதப்படுகிறது.
தற்கால இளைஞர்கள் சிலர் இந்த மாற்று பாதையில் பயணிக்க நினைப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இன்று ஒரு சாதாரண திருமணத்தில் கூட கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள் மற்றும் மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகள் உருவாகின்றன.
இவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையாகவும் மாறுகின்றன.
இதற்கு ஒரு சிறந்த மாற்றாக “ஜீரோ வேஸ்ட் வெட்டிங்” முறை உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
கழிவுகளை மேலாண்மை செய்யவும் உணவு வீணாக்கப்படுவதை தவிர்க்கவும் உறுதி செய்யும் வகையில், சூழலியல் திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்வதற்கென்றே சமூக வலைதளங்களில் பிரத்தியேக குழுக்கள் செயல்படுகின்றன.
பூமியின் வளங்களுக்கு ஊறு விளைவிக்காத வகையில் சிறப்பாக திருமண வைபவங்கள் நடைபெற, இவை பெரிதும் உதவுகின்றன.
இதில் காகித அட்டைகளுக்கு பதிலாக whatsapp, மின்னஞ்சல் மற்றும் குறிப்பிட்ட வலைத்தளங்கள் மூலம் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது.
கையில் கொடுக்கும் உணர்வு வேண்டும் என நினைப்பவர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் மற்றும் விதைத் தாள் அழைப்பிதழ்கள் மிகுந்த பயனளிக்கும்.

இதனை பயன்படுத்திய பிறகு மண்ணில் புதைத்தால் செடியாக வளரும். கைக்குட்டையிலும் தற்போது அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன.
இதனை விருந்தினர்கள் மீண்டும் பயன்படுத்த முடியும். திருமண மண்டபத்தில் செய்யும் அலங்காரத்தில் பிளாஸ்டிக் பூக்கள், தெர்மாகோல் மற்றும் பலூன்களுக்கு பதிலாக –
வாழை இலைகள், தென்னங்கீற்றுகள், மாவிலைகள், மூங்கில்கள் – சாமந்தி, மல்லிகை, ரோஜா போன்ற உள்ளூரில் கிடைக்கும் இயற்கை மலர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
இவை விழா முடிந்ததும் உரமாக மாற்றப்படுகின்றன. செயற்கை பூந்தொட்டிகளுக்கு பதிலாக மண் விளக்குகள் மற்றும் டெரகோட்டா கலைப் பொருட்கள் வைக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியின் ஒவ்வொரு தருணத்திற்கு பின்னும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் நடக்கும் செயல்பாடுகள் கேமராக்களில் பதிவு செய்யப்படுகின்றன.
மேலும் மண்டபம் முழுவதும் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்க்கக் கூறி, விழிப்புணர்வு அட்டைகள் இடம்பெறுகின்றன.
பின்பு களைக்கட்டும் விருந்து பிரிவில் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பாட்டில்கள் தவிர்க்கப்பட்டு பாரம்பரிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டுகள் மற்றும் எவர்சில்வர் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல் அந்தந்த பகுதிகளில் விளையும் காய்கறிகளே உபயோகிக்கப்படுகிறது.
விருந்தினர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட்டு உணவு சமைக்கப்படுகிறது.
மீதமாகும் தரமான உணவுகளை பசியால் வாடுபவர்களுக்கு வழங்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
மண்டபத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
இவை கால்நடைகளுக்கு தீவனமாகவும் தாவரங்களுக்கு உரமாகவும் மாற்றப்படுகின்றன.
புதிய ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக அம்மா அல்லது பாட்டியின் பழைய பட்டு புடவைகளை, நவீன வடிவமாக மாற்றி அணிகின்றனர்.

நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களின் திருமண ஆடைகளைப் பகிர்ந்து அணிவதும் இம்முறையில் பின்பற்றப்படுகிறது.
துணிப் பைகள், விதைப் பந்துகள், இயற்கை சோப்புகள், சணல் பைகளில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள், தானியங்கள் ஆகியவை தாம்பூலமாக வழங்கப்படுகின்றன.
மொத்தத்தில், இத்தகைய பசுமைத் திருமணங்களை முன்னெடுப்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக திகழும்.
நமது மகிழ்ச்சியான தருணங்கள், பூமிக்கு சுமையாக இல்லாமல் வரமாக அமைய, இந்த முறை பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகையல்ல.
S. வாணி
