நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அணியும் ஆடைகளில் மிகச் சிறிய ஆனால் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்பது ‘பொத்தான்’ (Button).
ஆடைகளின் தேவைக்காகவும், அழகுக்காகவும் வைக்கப்படுகிறது. இத்தகைய பொத்தான்கள் பெண்களின் ஆடைகளை விடவும் ஆண்கள் அணியும் சட்டைகளுக்கே அதிகம் தேவைப்படுகிறது.
இத்தகைய பொத்தான்களை சிறப்பிக்கும் விதமாக ஆண்டும் தோறும் நவம்பர் 16ஆம் தேதி ‘தேசிய பொத்தான் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இதன் வரலாறு, கலைநயம், சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் உலகின் மிக விலை உயர்ந்த பொத்தான் பற்றிய வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம்.
தேசிய பொத்தான் தினம் மற்றும் தோற்றம் :
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பொத்தான் தினம் (National Button Day) கொண்டாடப்படுகிறது.
1938-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ‘தேசிய பொத்தான் சங்கம்’ (National Button Society), பொத்தான்களை ஒரு கலைப்பொருளாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் கருதி அவற்றைச் சேகரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தினத்தை அறிமுகப்படுத்தியது.
ஆதிகால பொத்தான் எப்படி இருக்கும்…
ஆடைகளுக்கு பட்டன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனிதர்கள் உடைகளை அணிந்த வரலாறு சுவாரஸ்யமானது என கூறலாம்.
முட்களும் முள்ளம்பன்றிக் முட்களும் :
ஆதிகாலத்தில் விலங்குகளின் தோல்களை அணியத் தொடங்கிய மனிதர்கள், அவற்றை உடலோடு சேர்த்துப் பொருத்த இயற்கையான கூர்மையான முட்கள், மரத்துண்டுகள் மற்றும் எலும்பினால் செய்யப்பட்ட சிறிய குச்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கயிறுகள் மற்றும் நாடாக்கள் :
ஆடைகளில் துணி நாடாக்களை (Straps) அல்லது மரப்பட்டை நாரைக் கொண்டு செய்யப்பட்ட கயிறுகளைத் தைத்து, அவற்றை உடலோடு சேர்த்துக் கட்டிக் கொண்டனர்.

கோத்துவிடும் முறை :
துணிகளில் சிறிய துளைகளை ஏற்படுத்தி, அதில் கயிறையோ அல்லது தோல் வாரியையோ காலணி நாடாப் போல கோத்துக் கட்டும் வழக்கமும் இருந்தது.
முடிக்கிவிடும் முறை :
துணியின் முனைகளை ஒன்றோடொன்று சேர்த்து முடிச்சுப் போடுவது அல்லது மடித்துச் செருகிக் கொள்வது போன்ற முறைகளையும் கையாண்டனர்.
பொத்தான்களின் நவ நாகரிக வளர்ச்சி :
சட்டை பொத்தான்களின் வரலாறு மிகவும் பழமையானது. கி.மு. 2800-ஆம் ஆண்டிலேயே சிந்து சமவெளி நாகரிகத்தில் கடல் சிப்பிகளால் (Seashells) செய்யப்பட்ட பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.
ஆரம்ப காலங்களில் இவை ஆடைகளை இணைப்பதற்குப் பதிலாக, அழகுபடுத்தும் அணிகலன்களாகவும், சமூக அந்தஸ்தைக் காட்டும் அடையாளங்களாக மட்டுமே இருந்துள்ளது.
அதன் பிறகு 13-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ‘பொத்தான் துளைகள்’ (Buttonholes) கண்டுபிடிக்கப்பட்ட பின் ஆடைகளை உடலோடு இறுக்கமாகப் பொருத்தும் நடைமுறை ஐரோப்பா முழுவதும் பரவியது.
17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட பொத்தான்கள் செல்வந்தர்களின் ஆடம்பர அடையாளமாக இருந்தன.
19-ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக்குப் பிறகு உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொத்தான்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு, சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கும் எளிதில் கிடைக்கத் தொடங்கின.
பொத்தான்களின் சுவாரஸ்யமான தகவல்கள் :
ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் சட்டைகளின் பொத்தான்களில் வித்தியாசம் இருக்கும்.
ஆண்களின் சட்டையில் பொத்தான்கள் வலது பக்கத்திலும், பெண்களின் சட்டையில் இடது பக்கத்திலும் இருப்பதை நாம் கவனித்திருப்போம்.
பழங்காலத்தில் ஆண்கள் வலது கையால் வாள் எடுப்பதற்கு வசதியாக வலது புறமும், வசதிபடைத்த பெண்களுக்குப் பணிப்பெண்கள் ஆடை அணிவிக்க எளிதாக இருக்கும் வகையில் இடது புறமும் பொத்தான்கள் தைக்கப்பட்டன.
அந்த நடைமுறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.
சட்டைக் கைகளில் பொத்தான்கள் :
நெப்போலியன் போனபார்ட் தனது வீரர்கள் மூக்கைத் துடைக்கச் சட்டைக் கைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, சட்டைக் கைகளின் விளிம்பில் பொத்தான்களைத் தைக்க உத்தரவிட்டதாக ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு.
உலகின் மிக விலை உயர்ந்த பொத்தான் :
பொத்தான்கள் பொதுவாக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் சாதாரணப் பொருட்களாகவே கருதப்படுகின்றன.
ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க சேகரிப்புகளில் சில பொத்தான்கள் தங்கம் மற்றும் வைரங்களை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுப் பொத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த பொத்தானாகச் சாதனை படைத்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய பொத்தான், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ‘ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம்’ நடத்திய ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்த ஒற்றைப் பொத்தான் உலகப் புகழ்பெற்ற ஏலத்தில் $225,000 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 1.8 கோடிக்கும் மேல் விலைக்கு விற்கப்பட்டு உலக சாதனையைப் படைத்தது.
அப்படி என்ன தான் இந்த பொத்தானில் இருக்கிறது.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றபோது (1789), அவரது ஆதரவாளர்கள் அணிவதற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட நினைவுப் பொத்தான்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த பொத்தானில் அவரை “Father of His Country” நாட்டின் தந்தை என்று குறிப்பிட்டுச் செதுக்கப்பட்டிருந்தது.
இதுவே இத்தகைய பொத்தான்களில் மிகச் சிறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.
இதேபோல் 1920-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜேம்ஸ் காக் மற்றும் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொத்தான் ஒன்று 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் ₹1.5 கோடி விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நவீன காலத்தில் ஜிப் மற்றும் வெல்க்ரோ போன்ற பல வசதிகள் வந்துவிட்டாலும், பொத்தான்களுக்கான தனித்துவம் குறையவில்லை என்றே கூறவேண்டும்.
இன்று அவை ஆடை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பொத்தான்கள் மிகச் சிறிய எளிய பொருளாகத் தெரிந்தாலும், நாகரிக வளர்ச்சியின் ஒரு அங்கமாகவும், கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்படும் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் இருக்கிறது.
பொத்தான்களின் சிறப்பை உணர்த்தும் நாளாக தேசிய பொத்தான் தினம் அமைகிறது.
– யாழினி

