பொதுவுடமைக் கட்சியின் மூத்தத் தோழரான சங்கரய்யா அவர்களின் நினைவுநாள் (நவம்பர்-15) அண்மையில் அனுசரிக்கப்பட்டபோது அவரது மகனான நரசிம்மன் சங்கரய்யா, தனது அப்பவுடன் மிக நெருங்கிப் பழகிய பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றி பகிர்ந்து கொண்டதை இங்கே பகிர்கிறோம்.
***
அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசியல் உறவு இருந்த காலத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடினமாக தான் இருக்கும்.
அவ்வளவு சீக்கிரம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விடாது.
ஒரு கட்டத்தில் இழுபறி அப்படியே நீடித்து வந்த நிலையில் அப்பா (சங்கரய்யா) எம்.ஜி.ஆரிடம் நீங்கள் ரொம்பப் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டார்.
அங்கிருந்த மற்ற அதிமுக தலைவர்களுக்கெல்லாம் சற்று அதிர்ச்சி.
எம்.ஜி.ஆரை இப்படிச் சொல்லி யாரும் பார்த்ததில்லை.
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின்போது, “நீங்கள் என்னை ரொம்பப் பிடிவாதக்காரர் என்று சொல்லிவிட்டீர்களே” என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
“நேரம் ஆயிட்டே இருக்கு. முடிக்கணும் இல்ல. அதனால தான், நீங்க இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் தானே முடிக்க முடியும்” என்று அப்பா சொல்லி உள்ளார்.
பல நேரங்களில் எம்.ஜி.ஆர். சிபிஎம் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவருடைய வீட்டில் மிக இயல்பாக லுங்கி – பனியன் உடன் எந்தவித மேக்கப் இல்லாமல் கலந்து கொள்வார்.
இதை அவரே சொல்லியும் இருக்கிறார். உங்களுடன் பேசும்போது தான் நான் இப்படி இயல்பாக வர முடிகிறது என்று.
1980. மே மாதம். தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது.
அதே ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றப் பொது தேர்தலில் திமுகவும் காங்கிரசும் பெரும் வெற்றி பெற்றிருந்தன.
அதிமுக படுதோல்வி சந்தித்த சூழலில் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடைபெற்றது.
மனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் எம்.ஜி.ஆருக்கு எந்தத் தொகுதியில் போட்டிப் போடுவது என்று குழப்பம் இருந்ததாகத் தெரிகின்றது.
மதுரை பாண்டியன் ஹோட்டலில், எம்.ஜி.ஆரும் அப்பாவும் தனியாகப் பேசும்போது, ஆண்டிபட்டி போட்டியிடலாமா அல்லது மதுரை மேற்கில் போட்டியிடலாமா என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
அன்றைய மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் குமாரை வரச் சொல்லி, ஆலோசனை செய்து, நீங்கள் மதுரை மேற்கில் நிற்பது தான் பாதுகாப்பு என்று சொல்லி உள்ளார் அப்பா.
எம்.ஜி.ஆரும் அந்த ஆலோசனை ஏற்றக்கொண்டு, இதை இப்போது சொல்ல வேண்டாம் இரண்டு நாட்கள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்.
அடுத்த சில நாட்கள் கழித்து, மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த எம்.ஜி.ஆர். மதுரை கிழக்குத் தொகுதியில் அப்பாவை ஆதரித்து பேசினார்.
அப்போது எனக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால் எல்லா வாக்குகையும் ஒன்று விடாமல் ’அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்’ சின்னத்துக்கே செலுத்தி சங்கரைய்யாவை வெற்றி பெறச் செய்வேன் என்றார் எம்.ஜி.ஆர்.
சங்கரய்யா ஜெயித்தால்தான், நான் ஏதாவது தவறு செய்தால் என் தலையில் கொட்டி, என்னைத் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வார். தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் உரத்தக் குரல் கொடுப்பார் என்று பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.
தேர்தல் முடிவுகள் வெளியானது. அதிமுக – மார்க்சிஸ்ட் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
மதுரை மேற்கில் எம்.ஜி.ஆரும் மதுரை கிழக்கில் அப்பாவும் வெற்றி பெற்றார்கள்.
***
1981-ல் எட்டயபுரத்தில் பாரதியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள். கட்சியின் சார்பாக அப்பா கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆருடைய ஆட்சியில் சிலருக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்பட்ட நேரம்.
மார்க்சிஸ்ட் கட்சி எப்பொழுதும் போல் தேர்தல் கூட்டணிக்காக மக்கள் பிரச்சனையை விட்டுக் கொடுத்ததில்லை.
பல நேரங்களில் அதிமுக ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த காலகட்டம்.
பாரதியின் நூற்றாண்டு நிகழ்வில், ‘பாரதியும் பொதுவுடமையும்’ என்ற தலைப்பில் பேசிய அப்பா, இறுதியில் மகாகவி பாரதியின் வரிகளோடு முடித்திருக்கிறார்.
அது,
“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள் எங்கள் தாய்;
அவர் அல்லவ யாரின்
அவரை விழங்கியபின்
ஆனந்த கூத்திடுவாள்”
நிகழ்ச்சி முடிந்த பின், மூத்த அமைச்சர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம், “என்னங்க தலைவரே… விமர்சனம் பண்ண மாதிரி தெரியுது” என்று கேட்டிருக்கிறார்.
“தவறு செய்தால் என்னைத் தலையிலேயே கொட்டி சரி செய்வார் சங்கரைய்யா என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருக்கிறார்.
தேர்தல் கூட்டணி, வெற்றி, வெளியில் இருந்து ஆதரவு என எதுவாக இருந்தாலும் அன்றைக்கு இன்றைக்கும் என்றைக்கும் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மக்களே பிரதானம்.
