நவம்பர் 17 : சர்வதேச மாணவர்கள் தினம்
மாணவர்கள் என்பவர்கள் வெறும் கல்வி கற்கும் வகுப்பறையோடு ஜாலியாக ஊர் சுத்தி நின்றுவிடுபவர்கள் அல்ல.
சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும், புதிய மாற்றங்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்.
மாணவர்களின் கல்வி உரிமை, தியாகங்கள் மற்றும் சமூக பங்களிப்பைக் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி ‘சர்வதேச மாணவர்கள் தினம்’ உலகெங்கிலும் உள்ள மாணவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
கல்வி உரிமை, மாணவர்களின் ஒற்றுமை மற்றும் சமூக மாற்றத்தில் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மாணவர்கள் வரலாற்றுப் பின்னணி :
இந்த நாளின் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சோகமும், தியாகமும் மறைந்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது, 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் செக்கோஸ்லோவாக்கியாவின் பிராகு (Prague) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழக மாணவர்கள் நாட்சி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக புரட்சியில் இறங்கினர்.
இந்தத் போராட்டத்தின் போது நாட்சி படைகளால் ஜான் ஒப்லெடல் (Jan Opletal) என்ற மருத்துவ மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலம் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எலுச்சியாக உருவெடுத்தது.
இதனால் ஆத்திரமடைந்த நாட்சி அரசு, 1939 நவம்பர் 17 அன்று பல்கலைக் கழகத்தை மூடியதுடன், 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்களை வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

இதில் ஒன்பது மாணவர் தலைவர்கள் எந்தவித விசாரணையுமின்றி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாணவர்களின் இந்த மாபெரும் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், கல்விக்காக அவர்கள் கொடுத்த விலை எக்காலத்திலும் மறைக்கப்படக் கூடாது என்பதற்காகவும், வருங்காலத் தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும்…” 1941-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாணவர்களின் கூட்டத்தில் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச மாணவர் சங்கம் மற்றும் இயக்கங்கள் :
1941-ல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, உலகளாவிய மாணவர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ‘சர்வதேச மாணவர் சங்கம்’ (International Union of Students – IUS) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முக்கியக் காரணமாக இருந்தது.
உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், சர்வாதிகார ஆட்சிகளை வேரோடு வீழ்த்தவும், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மாணவர் சமூகம் எப்போதும் மாபெரும் புரட்சிகளை முன்னெடுத்துள்ளது.
1968 மே புரட்சி (பிரான்ஸ்) : பாரிஸ் பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
1. சோவெட்டோ எழுச்சி 1976, தென்னாப்பிரிக்கா: நிறவெறி அரசு திணித்த ஆப்கான்டிஸ் மொழிக்கு எதிராகக் கறுப்பின மாணவர்கள் நடத்திய போராட்டம், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான இறுதிப் போராட்டத்திற்கு வித்திட்டது.
2. தியான்மென் சதுக்கப் போராட்டம் 1989 சீனா: சீர்திருத்தவாதத் தலைவரான ஹூ யாவ்பாங் (Hu Yaobang) என்பவரின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் தியான்மென் சதுக்கத்தில் ஒன்றுகூடினர்.
அந்த அஞ்சலிக் கூட்டம், நாட்டில் நிலவிய ஊழல், பணவீக்கம் மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது.இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
3. சிப்கோ இயக்கம் இந்தியா: உத்தராகண்டில் மரங்களைப் பாதுகாக்க மாணவர்களும் கிராம மக்களும் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் போராட்டம்.
4. வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் 1960கள், அமெரிக்கா: அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக லட்சக்கணக்கான மாணவர்களைத் திரட்டி அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் மாணவர் எழுச்சிப் போராட்டங்கள்: தமிழ்நாட்டில் மாணவர் சமூகம் கல்வி உரிமைகள், மொழி பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்காகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் :
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம், தமிழ்நாட்டில் ‘இருமொழி கொள்கையை’ (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உறுதிப்படுத்தியது.
ஈழத் தமிழர் ஆதரவு போராட்டம் 2009 :
இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் மறியல் “போர்க்களத்தில் இறங்கி, உலக நாடுகளின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பினர்.”
ஜல்லிக்கட்டு மீட்பு மாணவர் எழுச்சி 2017 – மெரினா புரட்சி :
அரசியல் கட்சிகளின் பின்பலமின்றி, சமூக வலைதளங்கள் மூலம் சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் தன்னிச்சையாகத் திரண்டு அமைதியான முறையில் வெயில், மழை பாராமல் இறங்கி போராடி பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுத்தனர்.
இந்தத் போராட்டங்கள் மாணவர்கள் மத்தியில் சுயேச்சைச் சிந்தனையையும், சமத்துவம் மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பையும் மீட்டெடுத்துள்ளன.
சர்வதேச மாணவர்கள் தின முக்கியத்துவம் மற்றும் நோக்கங்கள் :
கல்வி உரிமை: உலகின் எமுலையில் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் இளைஞருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் உருவாக்கப்பட்டது.
மாணவர் ஒற்றுமை :
இனம், மொழி, மதம் மற்றும் நாடு கடந்த எல்லைகளைத் தாண்டி மாணவர்கள் அனைவரும் கல்வி மற்றும் மனித உரிமைகளுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
சமூக மாற்றம் :
சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், வறுமை மற்றும் அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும், புதிய மாற்றங்களை உருவாக்குவதிலும் மாணவர்களே நாட்டின் தூண்களாக விளங்குகிறார்கள்.
கல்விக்கான தொடர் போராட்டம் :
“இந்த நாள் வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமல்லாமல், உலகின் பல மூலைகளில் இன்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைக்கான அறைகூவலாகவும் ஒலிக்கிறது.

குறிப்பாக, போர் மற்றும் வன்முறைச் சூழல்களில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியத்தை இது உரக்க வலியுறுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் வெறும் புத்தக கல்வியோடு நின்றுவிடாமல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு என அனைத்திலும் பங்காற்றி வருகின்றனர்.
உதாரணமாக 2026-ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு எதிர்ப்புப் போராட்டம் ஜூன் 6 முதல் ஜூலை 25 வரை நடைபெற்றதுடெல்லியில் நடந்த நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்தை கண்டித்து வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
வினாத்தாள் கசிவுக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
நாடு முழுவதும் அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போர்க்காலத் தியாகங்களை நினைவுகூரும் இந்த நாளில், மாணவர்கள் தங்களின் கல்வி அறிவைச் சமூகத்தின் நலனுக்காகவும் அமைதிக்காகவும் பயன்படுத்த உறுதியேற்போம்.
– யாழினி
