“அண்ணா அவர்களுக்கு எப்பொழுதுமே தான் சாதித்திருக்க வேண்டியது அதிகமாகவும்; சாதித்தவை குறைவாகவுமே கருதி அதிருப்தி அடையும் சுபாவம் உண்டு.
இந்த அதிருப்திதான் அவரைப் பெருஞ்சாதனைகளைப் புரிய வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் அவர் குறிப்பிட்டதொன்று என் நினைவுக்கு வருகிறது.
‘என்ன சம்பத்து நாம் பெரிய காரியங்களைச் செய்துவிட்டோம்? முப்பத்திரெண்டு வயதில் அவுங்சான் பர்மிய மக்களின் ஒப்பற்ற தலைவனாகி, பர்மாவின் முதலமைச்சனாக இருந்து,
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவனுக்குக் கிடைத்தற்கரிய எதிரி கையில் சாவு என்னும் பெருமையும் பெற்றுக்கொண்டு போய்விட்டான். நாமும் இருக்கிறோமே!’ என்று பெருமூச்சோடு சொல்வார்.
அவரது அறிவாற்றலும், எதிர்கட்சியினரை ஆபாசமாகத் திட்டாமலே திறமையாக எதிர்த்து வெற்றி காண முடியும் அரசியல் போர் முறைப் புதுமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிப்படுத்திக் காட்டியது.
கொள்கைகளை முந்திக்கொண்டு கழகத்தின் நாகரீகப் பாணி பலரையும் ஆட்கொண்டது.
அவரது போர்க்குரல் கேட்டுத் தமிழகம் பல போராட்டங்களில் ஈடுபட்டுத் தன் மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கிறது.
அவரது முழு கவனத்தையும், முழு சக்தியையும் பயன்படுத்திக்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் துடிதுடித்து நிற்கிறது.
கலையுலகம் அவரது நேரத்தையும் நினைப்பையும் கொள்ளை கொள்ள முயலும்போதெல்லாம், ஒரு சக்களத்திப் போராட்டமே நடைபெறுகிறது!
உலகைத் திருத்திய உத்தமர்கள் வரிசையில் எங்கள் அண்ணா இடம்பெற வேண்டுமென்ற ஆவலும், வீரத்தோடு ஒருமனதாய்ப் போராடி,
மக்களுக்கு விடுதலைத் தேடித் தந்த உலக விடுதலை வீரர்கள் வரிசையில் அவரை அமர்த்தி அழகு பார்க்கும் பெருவாய்ப்பு நம் நாட்டவருக்குக் கிடைக்கவேண்டுமென்ற பெருவிருப்பம் மாறி மாறி ஏற்பட்டு அவரை நமக்குரியவராகவும் நம்மை அவருக்குரியவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
அண்ணனாய், தளபதியாய், தலைவனாய், வாழ்க்கை நெறி காட்டும் வழிகாட்டியாய்த் திகழ்ந்து தேம்பிக் கிடக்கும் திராவிட சமுதாயத்திற்குப் புத்துயிர் ஊட்டும் திருப்பணியில் தன்னை முழுக்க முழுக்க ஈடுபடுத்தி நீண்ட நாள் வாழ்ந்து,
நெடுநாளையப் பழி துடைத்துப் புகழ்தேடி நம்மை வாழ்விக்கவேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள எனது பேராவலை அண்ணா அவர்களது ஐம்பதாண்டு நிறைவு விழாவின்போது கூறிக்கொள்கிறேன்”.
– ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி. சம்பத் – 18.09.1959
நன்றி : ‘தென்னகம் ‘ இதழ் .
#அண்ணா #அறிஞர்அண்ணா #ஈவெகிசம்பத் #திராவிடஇயக்கம் #திராவிடஅரசியல் #தமிழகவரலாறு #திமுக #வரலாற்றுப்பதிவு #Annadurai #EVKSampath #DravidianMovement #TamilNaduHistory #DMK #TamilPolitics #HistoricalRecords #AnnaAndSampath #TamilHistory #PoliticalHistory
