பாடமாகப் படித்தபோது நம்மிடம் பரிச்சயமாகாத இலக்கியங்கள், திரைப்படப் பாடல்கள் ஆனபோது, மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது.
அதேபோல் பள்ளிகளில் சரித்திர வகுப்புகளோடு சமரசம் செய்துகொள்ளாத மாணாக்கர்கள், பின்னாளில் இவர் எழுதிய சரித்திர நாவல்களை, உற்சாக மிகுதியால், உணவையும் உறக்கத்தையயும் மறந்து ஒரே மூச்சில் படித்து முடித்தார்கள்.
இவரது சரித்திரக் கதைகளில் அறிமுகமான நாயகன்களும், நாயகிகளுக்கும் உறங்கும்போது கனவில் வந்தார்கள். உறங்காதபோது உணர்வுகளில் உயர்ந்து நின்றார்கள்.
அந்த சரித்திரக் கதைகளின் நாயகன்தான் பாஷ்யம் அய்யங்கார் என்கிற சாண்டில்யன்… சரித்திரக் கதைகளின் சாகா வரம் பெற்ற ஆசிரியர்… ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டம் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) திருக்கோவிலூரில் பிறந்த சாண்டில்யன், தனது பள்ளிக் கல்வியை சென்னை பச்சையப்பன் பள்ளியிலும், சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் முடித்தார்.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற சாண்டில்யன், ராஜாஜி மீது கொண்ட ஈர்ப்பால் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்திய தேசிய காங்கிரசிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
ரெங்கநாயகி என்பவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்ட சாண்டில்யன், 1930-ம் ஆண்டு சென்னையில் குடிபுகுந்தார். தமிழ் தென்றல் திரு.வி.க. நவசக்தியிலும், பிரபல பத்திரிகையாளர் கல்கியிடமும் பணியாற்றினார்.
அவர்கள் தந்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தால், ‘சாந்தசீலன்’ தன்னுடைய முதல் சிறுகதையை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து, கண்ணம்மாவின் காதல், அதிர்ஷ்டம் ஆகிய சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது… அப்போது பழம்பெரும் நடிகர் சித்தூர் நாகையா, தயாரிப்பாளர் நாகிரெட்டி ஆகியோரின் நட்பு கிடைத்தது.
இந்த நட்பு காரணமாக சொர்க்க சீமா, என் வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைக்கும் பணி கிடைத்தது.
பின்னர், சரித்திர நாவல்கள் பக்கம் சாண்டில்யனின் கவனம் திரும்பியது. இதையடுத்து, ஒட்டுமொத்த தமிழகமும் சாண்டில்யன் பக்கம் திரும்பியது.
யவனராணியின் அழகு கலந்த ஆளுமையில் வாசகர்கள் வாசம் செய்தார்கள். ‘கடல் புறா’வில் அந்தக் காலத்தின் தொழில்நுட்பம், போர் தந்திரம் அறிந்து மிரண்டு போனார்கள். காஞ்சனா தேவியையும், மஞ்சளழகியையும் மாறி மாறி காதலித்தார்கள்.
இளைய பல்லவனை இளையவர்களும், முதியவர்களும் தங்கள் இதயத்தால் நேசித்தார்கள். கற்பனை கதா பாத்திரங்கள் என்றாலும் அவர்கள் மீது சாண்டில்யன் காவிய முலாம் பூசி, வாசகர்களை தன் எழுத்துக்கு அடிமையாக்கினார்.
ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் அடுத்த வார குமுதம் இதழுக்காக தவமிருந்தார்கள் வாசகர்கள்.
குமுதம் வார இதழின் விற்பனையில் தேக்கம் வந்தால், சாண்டில்யனின் தொடரை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் சூட்சுமமும் அந்தக் காலத்தில் அரங்கேறியிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
ஜலதீபம், மன்னன் மகள், ராஜமுத்திரை, கன்னிமாடம், ராஜபேரிகை, ராஜதிலகம், விலை ராணி உள்ளிட்ட பல சரித்திர புதினங்கள், பாமரர்களுக்கும் கற்றுக் கொடுத்தன.
சாண்டில்யன் கதையை ஒருமுறை படித்தவர்கள், மறுமுறையயும் படிப்பார்கள். படித்துக்கொண்டே இருப்பார்கள்.
கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் மரணத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. காலம் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
ஆம்!. சரித்திரக் கதைகள் மூலம் சாகாவரம் பெற்று சரித்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சாண்டில்யன்.
(சரித்திர நாவல் ஆசிரியர் சாண்டில்யன் நினைவுநாள் (செப்டம்பர் – 11, 1987) இன்று.)
✍️ லாரன்ஸ் விஜயன்