மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த உணவு!

அனுபவத்தைச் சொன்ன விஜயகுமாரி

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிடுவதில் காட்டுகிற அக்கறையும் தனது வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் காட்டும் அக்கறையும் பிரசித்தமானவை.

பல மாநில முதலமைச்சர்களும் அவர் வீட்டுக்கு வருகை தந்து எம்.ஜி.ஆரின் கனிவான உபசரிப்பை ஏற்று அந்த அனுபவத்தை மதிப்புடன் பதிவு செய்திருக்கிறார்.

அவ்வளவு ஏன்? 

ஈழப் போராளியான பிரபாகரனும் தன்னுடைய நண்பரான அன்டன் பாலசிங்கம் உடன் ராமவரம் தோட்டத்திற்கு காலை உணவருந்த சென்றபோது, எப்படியெல்லாம் அசைவ உணவு பரிமாறப்பட்டு எம்.ஜி.ஆர். எப்படி தங்களை கவனித்துக் கொண்டார் என்பதை நெகிழ்வுடன் பகிர்ந்திருக்கிறார்.

அசைவ உணவுகளில் எம்.ஜி.ஆருக்குள்ள ஈடுபாடும் அதிலும் குறிப்பாக மீன் போன்றவற்றை உண்பதில் காட்டும் ஈடுபாட்டைப் பற்றியும் கருவாட்டுக் குழம்பை ருசித்து உண்பதில் அவருக்கிருந்த தனி விருப்பத்தையும் கூட பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

அண்மையில், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசிய பழம்பெரும் நடிகையான விஜயகுமாரி இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

“எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவர் மனைவி ஜானகி அம்மா தயாரித்துக் கொடுக்கிற பழங்கறி குழம்பை மிகவும் ருசித்துச் சாப்பிடுவார்.

இட்லிக்கு தொட்டுக் கொள்ளவும், சாப்பாட்டின்போது பயன்படுத்தவும் அந்தக் குழம்பைப் பயன்படுத்துவார்” என்று தான் நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் விஜயகுமாரி.

You might also like