எம்.ஜி.ஆர். காட்டிய மறக்க முடியாத பாசம்!

- நெகிழ்ந்த நடிகர் குண்டு கல்யாணம்

இயக்குநர் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்றில் பல்வேறுபட்ட தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் குண்டு கல்யாணம்.

அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திருமதி ஜானகி அம்மையார் மற்றும் ரஜினி உள்ளிட்ட பலரைப் பற்றி அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இருந்தன.

அவற்றிலிருந்து சில பகுதிகள்.

“என்னுடைய அப்பாவான குண்டு கருப்பையா, எம்.ஜி.ஆருடைய நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். அவருடைய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘அந்தமான் கைதி’ என்ற திரைப்படத்தில் பாடல் காட்சியிலும் நடித்திருப்பார்.

அந்த அளவுக்கு அவர் அப்போது திரையுலகில் கவனிக்கப்பட்டிருந்தார். அவரை பெரியளவில் கவனித்துக் கொண்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்தான்.

என்னுடைய அப்பாவுக்குத் திரைப்படக் காட்சிகளில் வாய்ப்புக் கொடுத்ததோடு பல்வேறு விதத்திலும் உதவியிருக்கிறார்.

ஒருமுறை சென்னை, சத்யா ஸ்டுடியோவில் ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பாடல் காட்சியில் என்னுடைய அப்பா தாடி வைத்த ஒரு சாமியார் வேடத்தில் நடித்திருப்பார். அந்த பாடல் காட்சி அங்கே எடுக்கப்பட்டபோது என்னையும் சத்யா ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அப்பா.

அப்போது மேக்கப்போடு வந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் என்னுடைய அப்பா.

அங்கேயே மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தபோது, நான் தொடர்ந்து அங்கு சென்றிருந்தேன். என்னை சாப்பிட வைத்து உபசரித்து அனுப்பினார்கள்.

அதன்பிறகு 1972-ம் ஆண்டு என்னுடைய அப்பா மறைந்தபோது, அவருடைய இறுதிச் சடங்கை செய்வதற்குகூட போதுமான அளவில் நாங்கள் பண வசதி இல்லாத நிலையில் இருந்தோம்.

அப்போது இன்னொருவர் மூலமாக நிலைமையை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்த போதும் குறிப்பிட்ட பணத்தை எங்கள் குடும்பத்திடம் சேர்க்குமாறு கொடுத்து அனுப்பியிருந்தார்.

அப்படி எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில்தான் அப்பாவின் இறுதிச் சடங்கு நடந்தது. இதை வாழ்நாள் முழுக்க எங்க குடும்பம் மறக்க முடியாது.

அதன் பிறகு எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் ராமாபுரம் தோட்டத்திற்கு மிகவும் உரிமையோடு சென்றிருக்கிறேன்.

எப்போது அங்கே சென்றாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர்களை விலக்கி உள்ளே ஹாலுக்குச் செல்கிறபோது, திருமதி ஜானகி அம்மையார் என்னைப் பார்த்தால் அவ்வளவு நன்றாக உபசரிப்பார். எம்.ஜி.ஆரும் அதே மாதிரி உபசரிப்பார்.

ஒரு முறை நடந்த சம்பவம் எனக்கே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருந்தது.

ஒரு காலை நேரத்தில் நான் ராமாபுரம் தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். மக்கள் திலகம் மாடியில் உள்ள அவரது அறையில் இருப்பதாகச் சொன்னார்கள்.

இன்னும் கீழே இறங்கி வரவில்லை என்று சொன்னதால்தான், அவர் கீழ்த்தளத்தில் அவர் வழக்கமாக சாப்பிடும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே, இன்னொரு டெல்லிலிருந்து வந்த பிரமுகருடன் சேர்ந்து அந்த ஹாலுக்குள் நுழைந்தார் எம்ஜிஆர். எனக்கு உடம்பெல்லாம் நடுக்கமாகிவிட்டது.

மத்தியப் பொறுப்பிலிருக்கிற அவருடன் சாப்பிட்டபடி, ஏதாவது தனியாக உரையாடலாம் என்று வந்தவரை தொந்தரவு படுத்திவிட்டோமோ என்கிற கலக்கத்தோடு இருந்தேன்.

என்னை கவனித்த எம்.ஜி.ஆர், என்னைப் பார்த்தபடி சமையல்காரிடம் எனக்குக் கூடுதலாக “ரெண்டு லட்டு வையுங்கள்” என்று சொன்னார். பிறகு எனக்கு கூடுதலாக ரெண்டு லட்டு பரிமாறப்பட்டது.

நான் அந்த இலையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய்விடலாமா என்ற முயற்சித்தபோது, என்னை அங்கேயே அமர்ந்து உட்காரச் சொன்னவர், “நம்ம பையன்தான்” என்று சொல்லி அறிமுகப்படுத்தி எந்த பாகுபாடையும் காட்டாமல் பழகியதெல்லாம் மறக்கவே முடியாது.

அப்படி ஒரு அனுபவத்தை எனக்கும் மட்டுமல்ல, என் குடும்பத்திற்கே கொடுத்தவர் மக்கள் திலகம்.

என் அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்களுடைய குடும்பம் சிரமப்படுகிறது என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். என்னுடைய மூத்த சகோதரர்கள் இரண்டு பேரை அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.

அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுத்த பிறகுதான் எங்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை ஓரளவு சீரடைந்தது.

அப்படி உதவிய மக்கள் திலகம், எங்கள் வீட்டில் நடந்த திருமணம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் அதற்கான செலவுகளை ஏற்று நடத்தி வைத்திருக்கிறார்.

இப்படி எங்களை மட்டுமல்ல, பல்வேறு குடும்பங்களை வாழவைத்த எம்.ஜி.ஆர். அவர்களை அவர் முதல்வராக இருந்தபோது சந்திக்கப் போனேன்.

அப்போது பெரும் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு இடையே என்னை கவனித்த எம்.ஜி.ஆர். அவர்கள், கார் கண்ணாடியைக் கீழே இறக்கி என்னை அருகே வரச்சொன்னார்.

அருகே சென்றபோது அவருடைய கையை என் தோளில் போட்டபடி சிறிது நேரம் பேசிவிட்டு, “நான் சென்று வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவ்வளவு பெரும் கூட்டத்துக்கு இடையே எனக்கு அவர் தனிப்பட்ட முறையில் கொடுத்த பெருமையை நான் என்றுமே மறக்க முடியாது. அப்படி ஒரு பேருள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அதற்கு பிறகு நான் எங்கள் அப்பாவுடைய சில நாடகங்களில் நடித்த பிறகு தொலைக்காட்சியில் ஒரு சிறு நிகழ்ச்சியிலும் நடித்து வந்தேன். அப்போது அதை பார்த்த இயக்குநர் கே. பாலசந்தரின் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. போயிருந்தேன்.

அங்கு என்னிடம் குறிப்பிட்ட வசன ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து அதை பேசச் செய்து ஒத்திகை பார்த்தார்கள்.

அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு ரஜினியுடன் ‘தில்லு முள்ளு’ படத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. அவருடைய நண்பர்களில் ஒருவராக அந்தப் படத்தில் நான் நடித்தபோது, ரஜினி என்னிடம் காட்டிய அந்த அன்பும் பரிவும் மறக்க முடியாது.

அவருடன் மேலும் சில படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்றாலும், எம்.ஜி.ஆர். எப்படி எனக்கு சில உதவிகளைச் செய்தாரோ அதே மாதிரியான சில உதவிகளை ரஜினி அவர்களும் செய்திருக்கிறார்” என்று தன்னுடைய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான குண்டு கல்யாணம்.

 
You might also like