‘கிராமிய ஊர்’ ஒன்றை உருவாக்க வேண்டும்!

விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் கோரிக்கை

தமிழில் ‘இரட்டைக் கிளவி’ எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி – நவநீதகிருஷ்ணன் தம்பதியர்.

இரண்டு பெயர்களில் ஒன்றை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு ‘செம்புலப் பெயல் நீர்போல’ கலந்த இல்வாழ்க்கை இவர்களுடையது.

ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது லட்சியத்தைப் பற்றிப் பேசியவை இதோ:

“ ‘கிராமிய ஊர்’ என்று ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். நாட்டுப்புறப் பாடல்களின் முழுத் தொகுப்பும் அங்கே இருக்க வேண்டும்” 

தொடர்ந்து பேசியவர்: “இப்போது நடக்கும் ஈவ்-டீஸிங்கூட அப்போதும் இருந்திருக்கிறது.

பெண்கள் கும்மி அடிக்கும்போது, வாலிபர்கள் கூடி நின்று கேலி பேசும்போது, பாடலிலேயே அந்தக் கும்பலை ‘அண்ணன்’ என்று சொல்லிவிடுவார்கள். தங்கையைக் கிண்டல் பண்ண முடியுமா? அதனால், வாலிபர்கள் அமைதியாகப் போய்விடுவார்கள்”.

பெண்ணின் முந்தானை என்பது கணவனுக்கு உரிய ஒன்று. அதைக் காரணம் காட்டிப் பாடி, கேலி செய்யும் கூட்டதை விரட்டிவிடுவார்கள்.

இதுதான் அந்தப் பாட்டு…

‘கும்மி அடிக்கிற மந்தையில

வந்து குமிஞ்சு நிக்கிற அண்ணன்மாரே

முந்தானை வந்து முகத்திலடிக்கும்

முக்கால் போடுறேன் உக்காருங்க.’

ஒவ்வொரு விதமான பாடலையும் தேடிப்பிடித்துச் சேகரிக்கும் இவருக்குச் சமீபத்தில் கிடைத்திருக்கும் ஆச்சர்யமான தகவல், பிரசவத்துக்கும் பாடல்கள் இருக்கின்றனவாம்.

“இப்போதெல்லாம் சிசேரியனுக்கு யாரும் பயப்படுவது இல்லை. அது ரொம்ப சாதாரண விஷயமாகப் போய்விட்டது நகரத்தில்.

ஆனால், இன்றும் கிராமங்களில் சுகப்பிரசவம்தான் நன்மையான விஷயம் என்று இருக்கிறது.

இதன் காரணமாக, பிரசவத்தின்போது உடனிருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் நடக்கப் பாடுகிறார்கள்.

இந்தப் பாடலை நீதிபதி லட்சுமிநாராயணனின் மாமியார் பாடுகிறார்கள்.

சரி, இதைச் சேகரிக்கலாம் என்று போனால், ‘அது சக்தி வாய்ந்த பாட்டு. பிரசவத்தின்போதுதான் பாட வேண்டும். மற்ற சமயங்களில் பாடக் கூடாது’ என்று என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

‘அடுத்து அந்த ஊரில் (காரைக்குடி) பிரசவம் நடக்கும்போது சொல்லுங்கள். நானும் பிரசவத்தின்போது உடனிருந்து சேகரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்!” – என்று உற்சாகமாகக் கூறினார் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்.

  • நன்றி : விகடன் பொக்கிஷம்
vels
You might also like