மனித மனங்களின் ஆழமான அக உணர்வுகளுக்கும், எந்திரத்தனமான அன்றாடப் புற வாழ்வுக்கும் இடையே நிகழும் முரண்களைத் தன் எளிய கதை மாந்தர்களின் வழியே அடையாளம் காட்டி வருபவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
மொத்தம் 16 கதைகள் நிறைந்த இவருடைய ‘சாய்ந்தாடும் குதிரை’ சிறுகதைத் தொகுப்பு, தன் அசாத்தியமான வாழ்வியல் சித்தரிப்புகளால் வாசக நெஞ்சில் தீராத உணர்வெழுச்சியை ஏற்படுத்தி, நெருக்கமாகத் தன்னை இணைத்துக் கொள்கிறது.
தொகுப்பின் முதல் கதையான ‘ஆப்பிளுடன் ஒரு நடனம்’ நவீன மனிதனின் எந்திரத்தனமான வாழ்வைப் பேசுகிறது.
கைநிறைய ஊதியத்துடன் உயர்ந்த பொறுப்பில் இருந்தும், கார்ப்பரேட் வாழ்க்கையால் சலிப்பின் உச்சத்துக்கே செல்கிறார் விஜயராகவன்.
தனது அலைபேசித் திரையில் தோன்றும் துனிசிய இளம்பெண்ணின் ஆப்பிள் நடனம், அவருக்குள் தூங்கிக் கிடந்த பால்ய காலச் சுதந்திரத்தைத் தட்டியெழுப்புகிறது.
அவளைப் போலவே தானும் ஆட வேண்டும் என்ற ஏக்கத்தில் அவர் ரகசியமாக முயன்றாலும், அவரது குடும்பமே ஒரு ‘சமூகக் கண்காணிப்பு அமைப்பாக’ மாறி அவரது கனவைச் சிதைக்கிறது.
மனிதர்களின் அகவயமான ஆசைகளை இந்த உலகம் எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கு இக்கதைச் சான்றாகிறது.
தொகுப்பின் தலைப்புக் கதையான ‘சாய்ந்தாடும் குதிரை’ வறுமையின் கொடுமையையும், தனிமையின் கோரத்தையும், சக மனிதர்களின் பாசாங்கையும் விவரிக்கிறது.
நாயகன் வைத்தியநாதன் வாங்கி வரும் சாய்ந்தாடும் மரக்குதிரை, அவனுக்குள் இல்லறம், மனைவி, குழந்தை போன்ற சராசரி ஆசைகளைக் கிளறிவிடுகிறது.
எனினும் அவனது ஆசைகள் வெறும் நிராசைகளே எனத் தெரிய வரும்போது அவன் உலகம் மீண்டும் இருளுக்குள் அடைபடுகிறது.
ஏமாற்றங்களுக்குப் பின் அந்த வீட்டில் வைத்தியநாதனும் மனதளவில் இன்னொரு மரக்குதிரையாகவே மாறிப் போகிறான் என்ற கதாசிரியரின் ஒப்பீடு நெஞ்சைப் பிசைகிறது.
அவனது வாழ்க்கை எங்கும் நகராமல் தேங்கிக் கிடப்பதை உணர்த்த, சாய்ந்தாடும் குதிரையை எழுத்தாளர் ஓர் உன்னதமான குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார்.
‘வெயில் வரைந்த ஓவியம்’ கதையின் வாசிப்பனுபவம், எதார்த்த வாழ்வின் உன்னதத்தைத் தரிசிக்க வைக்கிறது.
பரபரப்பான மாநகர மனிதர்களின் காலடிகளுக்கு இடையே, சாலையோர ஓவியன் சாக்பீஸ் கொண்டு வரையும் ஓவியங்களும், பிச்சையெடுக்கும் சிறுமி மீனாவுடன் அவன் பகிர்ந்துகொள்ளும் வாழ்வு குறித்த எளிய பார்வைகளும் மனதை உலுக்குகின்றன.
அந்த மகா கலைஞன், தான் வரைந்த யானை ஓவியத்தின் மீதே மரணித்துக் கிடப்பது மனதைக் கனக்கச் செய்கிறது.
ஒருநாள்கூட அவனுடன் பேசிடாத, அவனது கலையை மட்டுமே தினமும் ரசித்து வந்த பெண் ஒருத்தி, அவனது மரணம் அறிந்து சிந்தும் கண்ணீர்,
ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு தூய ரசிகையினால் கலைஞனுக்கு வழங்கப்படும் ஆகச்சிறந்த அங்கீகாரமாக அமைகிறது.
இங்கு விவாதிக்கப்பட்ட கதைகள் சில உதாரணங்கள் மட்டுமே. இத்தொகுப்பில் உள்ள 16 சிறுகதைகளும் நவீன மனிதனின் அகப் போராட்டங்களையும், தனிமையின் கொடூரத்தையும், கலையின் உன்னதத்தையும் பேசும் ஆகச்சிறந்த வாழ்வியல் சித்திரங்கள்.
மனித மனங்களின் தீராத ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில், மனித மனத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள மெல்லிய மனிதநேயக் கீற்றுகளையும் இக்கதைகள் ஒருசேரத் தரிசிக்க வைக்கின்றன.