வில்லனாக நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்!

நெகிழ்ந்த நடிகர் விஜய்

எனக்கு சத்யராஜ் சாரிடம் பிடித்தது அவர் ‘ஆன்டி ஹீரோவாக’ நடிப்பதுதான். இவர் வில்லனாக நடித்த பல படங்களை ரொம்ப ரசிச்சிருக்கேன். படு கேசுவலாக இவர் பேசும் டயலாக்குகள் ரசிக்கும்படி இருக்கும்.

காக்கிச் சட்டை, நூறாவது நாள், 24 மணி நேரம், அமைதிப்படை இப்படிப் பல படங்களில் வித்தியாசமாகத் திறமையை வெளிக் காட்டியவர்.

நடிகர்களிலேயே சினிமாவுக்காக முதல்முதலாக மொட்டை போட்டதும் இவர்தான். தன்னம்பிக்கையும், துணிச்சலும் உள்ளவர்.

‘ப்ரியமுடன்’ படத்தில் ‘ஆன்டி ஹீரோவாக’ பண்ணினேன். முதலில் ஆன்டி கேரக்டர் பண்ணினால் ஏற்றுக் கொள்வார்களா என்று பயந்தேன்.

ஆனால், சத்யராஜ் சார் பல படங்களில் ஆன்டி ஹீரோவா நடிச்சு கைத்தட்டல் வாங்கியவர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தான், தைரியமாக, நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இன்று ‘ப்ரியமுடன்’ 100-வது நாளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் ஆன்டி ஹீரோவா நடிப்பதற்கு இன்ஸ்பிரேஷன் சத்யராஜ் சார்தான்.

அடுத்து சத்யராஜ் சார் யாரையும் பாராட்டி பேசும் உயர்ந்த குணம் கொண்டவர்.

ஏதாவது விழாக்களில் என் போன்ற இளம் நடிகர்களை மனம் திறந்து பாராட்டி அதிகமாக உற்சாகப்படுத்துவார்.

அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ரசிகன்’ படத்தின் கேசட்டு வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றிப் பாராட்டிப் பேசிய சில வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

– 1, நவம்பர் 1998 சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்

  • நன்றி:  சினிமா எக்ஸ்பிரஸ்
You might also like