தனிமையில் இருந்தாலும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ, மறைந்த சௌகார் ஜானகியைப் பற்றிய நினைவுகள்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பெரும் பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தவரான சௌகார் ஜானகி 94-வது வயதில் மறைந்திருக்கிறார்.

ஆந்திராவில் பிறந்தவரான ஜானகி, 1950-ல் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ படத்தில் பிரபலமானதின் மூலம் ‘சௌகார்’ ஜானகி ஆனார்.

துவக்கத்தில் தமிழில் சிலச்சில வேடங்களில் நடித்து வந்தாலும், அவரை பெருமளவில் கவனிக்க வைத்த படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக தயாரித்து, நடித்த படமான ‘புதிய பறவை’.

அந்தப் படத்தில் சிவாஜியின் மனைவியாக, ஸ்டார் ஹோட்டலில் பாடல்கள் பாடுபவராக அறிமுகமாவார்.

“பார்த்த ஞாபகம் இல்லையோ“ என்று மார்டன் உடையில் அவர் பாடிய நளினமான பாடல் பெரிதும் அவரை பிரபலமடைய வைத்தது.

அதே படத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவராக அந்தக் காலகட்டத்தில் யாரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சௌகார் ஜானகி.

இதுமாதிரி மார்டன் டிரஸ்ஸில் நடித்து வந்த அதே சௌகார் ஜானகிதான், சிவாஜி கணேசன் நடித்த ‘படிக்காத மேதை’ படத்தில் மிகவும் எளிமையான ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பார்.

சிவாஜிக்கு மிக மென்மையாக அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து பாலசந்தரின் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அவரை முதலில் கவனப்படுத்தியது பாலசந்தர் இயக்கியப் படமான ‘பாமா விஜயம்’.

அந்தப் படத்தில் நடித்த பல கதாநாயகிகளில் அவரும் ஒருவராக இருந்தாலும், அவருடைய நடிப்புத் தனித்து தெரியும் விதத்தில் அமைந்திருக்கும்.

அதைப்போலவே பாலசந்தர் அடுத்து இயக்கிய ‘எதிர்நீச்சல்’ படத்திலும் இவர் ஸ்ரீகாந்துடன் இணைந்து பாடுகிற மாதிரியான ‘அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேலா’ என்கின்ற பாடல் அப்போது மிகவும் பிரபலம். அந்தப் படத்தில் பிராமண வட்டார வழக்கை அருமையாகப் பேசி நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து பாலசந்தரின் பல படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார் என்றாலும், எம்.ஜி.ஆருடன் இணைந்து ஒளிவிளக்கு‘, ‘பணம் படைத்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் காயமடைந்து படுக்கையில் படுத்திருக்கும் நிலையில், சௌகார் ஜானகி பாடுவதாக அமைந்திருக்கும் “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ ஒளிவிளக்கு” என்று துவங்கும் அந்தப் பாடல்,

எம்.ஜி.ஆர்.  உண்மையாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்து பட்டித்தொட்டி எல்லாம் ஒளித்த பாடலாக அமைந்தது.

அந்தப் பாடல் காட்சியில் உருக்கமாக நடித்திருந்தார் சௌகார் ஜானகி.

அதேபோல் “கண்போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா” என்று அதே எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன் படத்தில் மிகவும் நளினமான மாடர்ன் டிரஸ்சில் தோன்றி, ஆங்கிலேய பாணியிலான நடனத்தை ஆடியிருப்பார் சௌகார் ஜானகி.

பிறகு பாலசந்தரின் இயக்கத்தில் ஜெமினி கணேசனும், சௌகார் ஜானகியும் இணைந்து நடித்த இருகோடுகள் படம் இவரை தனித்து இன்றைக்கும் பேசப்படுகிற ஒரு பெண்ணிய கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக அமைந்தது என்று சொன்னால் மிகை இல்லை.

அந்த அளவுக்கு அந்தப் பாத்திரத்தை அவ்வளவு அருமையாக செய்திருப்பார் சௌகார் ஜானகி.

அதற்கு பிறகு சௌகார் ஜானகி ‘காவியத் தலைவி’ என்ற படத்திலும் நடித்திருப்பார்.

பிறகு பாலசந்தர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முள்ளு’ படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் அதிரடியாகத் தோன்றி ரசிகர்களை அதிர வைத்திருப்பார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. அவரது மிக முக்கியமான படங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த உயர்ந்த மனிதன்.

அந்தப் படத்தில் சிவாஜியின் மனைவியாக வரும் சௌகார் ஜானகி, கணவன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கராறாக அக்கறை காட்டுகிற கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்.

ஜெமினிகணேசன் நடித்த பாக்கியலட்சுமி திரைப்படத்தில், பி.சுசீலா குரலில் ஒளித்த  “மாலைப் பொழுத்தின் மயக்கத்திலே” பாடலில் இளம் விதவையாக நடித்து எல்லோரையும் உருக வைத்திருப்பார் சௌகார் ஜானகி

இப்படி அவர் நடித்த பல படங்களையும் அதில் அவர் வெளிப்படுத்திய தனித்திறமையையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

பொது மேடைகளிலும் மிக இயல்பாக பேசும் திறன் கொண்டிருந்தவரான சௌகார் ஜானகி, சென்னையில் முக்தா சீனிவாசன் மறைந்த பிறகு நடந்த விழா ஒன்றில், மிகவும் வெளிப்படையாக தன்னைப் பற்றிப் பேசினார்.

அதே மாதிரி தினமணி நாளிதழ் நடத்திய ஒரு விழாவில் அந்த கால திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டபோது, சௌகார் ஜானகியும் கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் இயல்பாக பேசினார்.

அண்மையில் கொடுத்தப் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை குறித்து அவர் எந்தவிதமான சலிப்பையும் வெளிகாட்டவில்லை.

தான் தனிமையில் இருந்தாலும், தன்னிறைவான வாழ்வை வாழ்ந்ததாகவே தெரிவித்திருந்தார்.

அத்தகைய தன்னிறைவான ஒரு வாழ்வை வாழ்ந்த சௌகார் ஜானகி அவர் நடித்த 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வழியே தொடர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

– யூகி

You might also like