ஜீவா விதைத்த வீரியமிக்க சமத்துவ விதை!

”எனக்கு உங்களுடைய அன்பு தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால், ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன்…

அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன்…

எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன்.

மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்…”

– இதுதான் அரசியல், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக ஜீவா முழங்கிய வாய்மொழி வாக்குமூலம்.

பொதுவுடைமைப் போராளி, இலக்கிய நேசர், தொழிற்சங்கவாதி, சமூக கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற சமர் புரிந்தவர், சுயமரியா‌தை சுடரொளி…

– இப்படி எந்த அடைமொழிக்குள்ளும் சரியாக பொருந்தக் கூடியவர் தோழர் ப.ஜீவானந்தம். மாற்றுடை இல்லாமல் குடிசையில் படர்ந்து பலருக்‍கும் பொதுவுடைமை உணர்வளித்த செங்’கொடி’.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற இடத்தில் பிறந்த ஜீவாவின் இயற்பெயர் சொரிமுத்து.

அய்யனார் என்ற உள்ளூர் சாமியின் பெயர்தான் சொரிமுத்து. இளம் வயதிலிருந்தே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

விசுவநாததாஸ் என்பவரோடு நெருங்கிப் பழகி, சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக்கொடுத்தார் ஜீவா.

ஒன்பதாவது படிக்கும்போது, அவர் எழுதிய ஒரு கவிதை, காந்தியையும், கதரையும் பற்றியது… போற்றியது.

மகாத்மா காந்தியின் கட்டளைக்கு மறுபேச்சில்லாமல் பணியாற்றக்கூடிய ஜீவா, ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் ஜீவா ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால், அங்கு நிலவிய தீண்டாமைக் கொள்கையால் காரைக்குடிக்கு அருகே சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.

வன்முறையில் நம்பிக்கை இல்லாதவராக இருந்த ஜீவாவுக்கு, பகத்சிங் தூக்கிலிடப்பட்ட விவகாரத்தை ஏற்க முடியவில்லை.

சிறையிலிருந்து தன் சிந்தனையை சிந்தி, பகத்சிங்கால் எழுதப்பட்ட நூலை, தமிழில் மொழி பெயர்த்தார்.

அதுதான் ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற நூல். இந்த நூலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

இதற்காக தோழர் ஜீவாவின் கை, கால்களில் விலங்கிட்டு, வீதி வீதியாக இழுத்துச் சென்று, சிறையில் அடைத்தது காவல்துறை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், சோஷலிச வானில் ஜீவா பறந்தார்.

1935-39 காலகட்டத்தில் பொதுவுடமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட ஜீவா, தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கினார்.

கம்யூனிஸ்ட்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி, பிரிட்டீஷ் அரசை தூக்கி எறிவதற்கான அடிப்படைக் கூறுகளை உருவாக்கியது.

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டபோது, மீரட் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் ஏராளமானோர் மீரட் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து ‘கம்யூனிஸ்ட் ஜீவா’ விடுதலையானார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பு வகித்த ஜீவா, சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில், பம்பாயில் தலைமறைவு வாழ்க்கையில் பொழுதைக் கழித்தார்.

சோஷலிச சரித்திரம், சோஷலிச தத்துவம் சார்ந்த மூலநூல்களை படித்து, அதை தமிழில் மொழி பெயர்த்தார்.

1952-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினரானார் ஜீவா.

அவையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டாலும், அதில் கண்ணியத்தைக் கடைப்பிடித்தார் தோழர் ஜீவா.

முதலாளித்துவம் தனது மூர்க்கத்தனமான, அருவருக்கத்தக்க முகத்தை ஒப்பனையால் அழகுப்படுத்தி, உலகை தன் பக்கம் இழுக்க முயற்சித்தாலும், ஜீவா போன்ற தோழர்கள் விதைத்து விட்டுப்போன பொதுவுடமை உரம், சோஷலிச சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கை‌‌யைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.

பொதுவுடமைப் போராளி தோழர் ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21, 1907)

  • லாரன்ஸ் விஜயன்
You might also like