மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!

மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது.

ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய (எழுதிய) விஷயங்கள். அவையாவும் அக்காலத்தில் அவருடைய சக எழுத்தாளர்கள், பேசத் தயங்கியவை.

தமிழ் இலக்கிய உலகில் அதுவரை நிலவி வந்த, காமத்தின் எல்லைகளை அனாயாசமாகத் தாண்டியவர் ஜி. நாகராஜன்.

ஜி. நாகரஜனின் படைப்புகளில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. எல்லாமே நேரடியான அர்த்தங்களைத் தருபவை.

எளிய மக்களின் வாழ்க்கையை, எளிய தமிழ் நடை கொண்டு பதிவு செய்தவர் ஜி. நாகராஜன்.

ஜி. நாகராஜனின் சிறுகதைகளும் குறுநாவல்களும் பிரபலமானவை. மொத்தம் 42 சிறுகதைகள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இரண்டு குறுநாவல்கள்.

இதில் ‘எழுத்தும் வாழ்வும்’ என்ற ஒரு சிறுகதை.

பேராசிரியர் ஒருவர். எழுத்தாளரும் கூட. அறிவில் சிறந்தவர். பாராட்டு விழா நடக்கிறது. அதில் ஊரே அவரை வாழ்த்துகிறது. காதல் முதல் காமம் வரை. பிறப்பு முதல் இறப்பு வரை என அவர் எழுதாத தலைப்புகளே இல்லை.

மனைவிக்கு வயது நாற்பது. மலடி என்ற பட்டத்தோடு வாழ்க்கையை ஓட்டுபவள்.

ஒரு நாள் திடீரென அவளுக்கு உடல் நலம் குன்றிப்போக…மயக்கம், வாந்தி, உடல்வலி…ஆம் மனைவி கர்ப்பமாகிறாள்.

எழுத்தாளருக்கு அதிர்ச்சி. மனைவியைத் தொட்டு தான் இருபது ஆண்டுகள் ஆகிறதே!

உடைந்து போகிறார் எழுத்தாளர். மனைவி ஏதோ ஒன்றை சொல்ல வர, ‘வேண்டாம்… யார் என எனக்குத் தெரிய வேண்டாம்…’ என்கிறார்.

சிந்தனைகளை மாற்ற எழுத முயல்கிறார். ஆனால் எழுத வரவில்லை.

‘இப்போது எழுத்தாளருக்கு ஒரே ஆசை தான். குழந்தை பிறக்கும் முன் அவர் இறந்து விட வேண்டும்’ என்பதோடு கதை முடிகிறது.

‘துக்க விசாரணை’ என்ற இன்னொரு சிறுகதை.

ரோகிணியும் ஜெயமும் பாலியல் தொழில் செய்யும் சகோதிரிகள். ஒருநாள் ரோகிணி தற்கொலை செய்து கொள்ள, அவளுடைய அன்றாட வாடிக்கையாளரான அவன், துக்கம் விசாரிக்க அவள் வீட்டிற்குச் செல்கிறான்.

துக்கம் விசாரிக்கப் போனவன், இறுதியில் ஜெயம் மீது மோகம் கொள்கிறான். அவளும் சிறிது நேரம் அழுதுவிட்டு, அவனோடு தனி அறைக்குச் செல்வதாகக் கதை முடிகிறது.

இவ்விரு கதைகளைப் போலவே ஜி. நாகரஜனின் மற்ற எல்லா கதைகளும், எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதப்பட்டவை. எந்த கதையிலும் போலித்தனமோ செயற்கைத் தன்மையோ இருக்காது.

போகிற போக்கில் ஒரு காட்சியைக் கதையாக சொல்லிவிடும் அவர் எழுத்தைப் பார்த்து பல முறை வியந்திருக்கிறேன்.

ஒரு சில கதைகள், மற்றொரு கதையின் நீட்சியாக இருப்பதை நுணுக்கமாக கவனித்தால் புரிகிறது.

உதாரணமாக ‘துக்க விசாரணை’ கதையில் வரும் ரோகிணி கதாபாத்திரத்தை தனது பல கதைகளில் உட்புகுத்தி இருப்பார்.

‘டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ என்ற கதையில் வரும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் கதாபாத்திரத்தை, அப்படியே தனது குறுநாவலான குறத்தி முடுக்கில் இணைத்திருப்பார். (ஜீ.நாகராஜன் யுனிவர்ஸ்?!)

குறத்தி முடுக்கு நாவலை தமிழின் ஆகச் சிறந்த நாவலாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க எழுத்தாளரான தாமஸ் வுல்ப்பின் புகழ்பெற்ற Look Homeward, Angel நாவலோடு அதை ஒப்பிடுகிறார். ‘காம இச்சையிருந்து ஆரம்பித்து காதலில் முடிவது’ இந்நாவலின் சிறப்பு என்கிறார் எஸ்.ரா.

ஜி. நாகராஜனின் கதைகளில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் வேறு யாருமில்லை. சாட்சாத் அவரே தான். பாரபட்சம் பார்க்காமல் தன்னையே தன் கதைகளில் சுய விமர்சனம் செய்து கொள்ளும் தைரியம் வேறு எந்த எழுத்தாளருக்கும் இருந்ததில்லை.

ஜி. நாகராஜனின் இறுதி நாட்களைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.

பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து, துணைக்கு ஆளே இல்லாமல் அனாதையாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிரை விட்டிருக்கிறார்.

எழுத்தில் உச்சம் அடைந்த நாட்களில் இருந்து, உயிர் விட்ட கடைசி நிமிடம் வரை, இடைப்பட்ட காலத்தில் ஜி. நாகராஜன் சந்தித்த இன்னல்கள் அதிகம்.

நெருங்கிய நண்பர்களுக்கே தொந்தரவாக இருந்தார். குடும்பத்தை கைகழுவினார்.

வேசைகள், கஞ்சா, குடி என ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவருடைய கதைகளைப் போலவே கசப்பான முடிவை அடைந்தது.

ஜி. நாகராஜன் பற்றி பல எழுத்தாளர்கள் தங்களது சிறுகதைகளில் எழுதி உள்ளனர்.

அவருடைய நெருங்கிய நண்பர் எழுத்தாளர் அசோகமித்திரன், ‘விரல்’ என்ற கதையை நாகராஜனை மையமாகக் கொண்டே எழுதியுள்ளார். ‘ஒரு நாள்’ என்ற கதையை பிரபஞ்சனும், ‘விலகிய கால்கள்’ என்ற கதையை சி.மோகனும் எழுதியுள்ளனர்.

ஜி. நாகராஜனைப் பற்றி இன்றைய வாசகர்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கக் காரணம் சி.மோகனும் சுந்தர ராமசாமியும் தான்.

நண்பர்களுடன் சேர்ந்து சி.மோகன், ஜி. நாகராஜனின் முழுமையான எழுத்துலகை வெளியுலகிற்குக் காட்டியது, தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த மிகப்பெரியத் தொண்டு.

மொத்தத்தில் ஜி. நாகராஜனின் எழுத்தும் வாழ்வும் நமக்கு சொல்ல வருவது ஒன்றைத் தான்.

‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’

– சரத்

நன்றி : விகடன்

You might also like