சிதிலங்களின் தேசம்: பாலஸ்தீனர்களின் கண்ணீர்க் கதை!

நூல் அறிமுகம் :

* இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகின்றது.

இது ஒரு மதச் சண்டையா அல்லது இனச் சண்டையா? மண்ணுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களா அல்லது சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் சண்டையிடுகின்றார்களா ?

* என்ன பகை ? என்ன பிரச்னை? என்ன பின்ணனி?

இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும் ! அதற்கு முழுவதுமான வரலாற்றைச் சொல்லும் சரியான நூல் ஒன்று வேண்டும்!

அந்தக் குறையைப் போக்குவதற்கு நமக்கு கிடைத்த சிறந்த நூல் தான் இந்த படைப்பு!

* அந்த வலி மிகுந்த வரலாற்றை, வலிமை மிகுந்த நாடுகள் சம்பந்தப்பட்ட வரலாற்றை, இரத்தமும் கண்ணீரும் கலந்த சரித்திரத்தை, பாலஸ்தீனர்கள் வாழ்வின் சரித்திரத்தை –

மனிதாபத்தோடும் சமுதாய கடமையோடும் பல நூல்களை ஆதாரமாக கொண்டு இந்த நூலை படைத்துள்ளார் நன்மாறன் திருநாவுக்கரசு.

(டார்வின் பற்றி அவர் எழுதிய நூலுக்கு ஏற்கனவே அறிமுகவுரையை எழுதிப் பகிர்ந்துள்ளேன்).

நன்மாறன் திருநாவுக்கரசுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்!

* நூலில் தரப்பட்ட தகவல்களைக் கொண்டு – யூதர்கள் பற்றியும் பாலஸ்தீனர்கள் பற்றியும் அவர்களிடையேயுள்ள பிரச்னைகள் பற்றியும் சுருக்கமானதொரு வரலாற்றை இந்த நூலின் அறிமுகவுரையாக வழங்குகின்றேன் :

*யூதர்களின் பூர்வீக இடமாக கருதப்படும் இஸ்ரேல் தேசம் பண்டைய தேசமாக இருந்ததற்கோ அங்கு யூதர்கள் தான் பூர்வகுடிகள் என்பதற்கோ பைபிள் கதைகளைத் தவிர வரலாற்றில் எங்கும் ஆதாரம் கிடையாது!

* ஆனால், பாலஸ்தீனர்கள் பற்றி வரலாற்றில் நிறைய தகவல் உண்டு. பெலஸ்தியர்கள் என்ற கடலாடிகள் தான் பாலஸ்தீனர்கள்.

பாலஸ்தீனம் – எகிப்துக்கு இடையே 4000 ஆண்டுகளாக வணிகம் நடைபெற்றதற்கு ஆதாரம் உள்ளது !

* ஏழாம் நூற்றாண்டில் உருவான இஸ்லாம் எங்கும் பரவி இஸ்லாமிய பேரரசுகள் உருவானது. பாலஸ்தீனத்திலும் இஸ்லாம் பரவி செழித்தது.

பல இஸ்லாமிய ஆட்சியருக்குப் பின்னர் ஒட்டோமான் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் வந்தது.

* ஒட்டோமான் ஆட்சிக் காலத்தில் 1876 – 78 களில் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் நிலத்தை வாங்கி குடியேறினார்கள்.

அங்கு விவசாயிகளாகவும் பழங்குடிகளாகவும் இருந்தவர்களுக்கும் புதிதாக குடியேறியவர்களுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடைபெற்றன.

ஒட்டோமான் அரசு அந்த பழங்குடி மக்களை விரட்டி விட்டனர்!

* அவ்வாறு துரத்தி விடப்பட்ட அரபியர்களே பாலஸ்தீனர்கள் (Palestinians) அங்கே புதிதாக குடியேறியவர்களே யூதர்கள் (Jews).

*1878ம் ஆண்டு நடந்த சிறிய சண்டை சச்சரவின் விரிவடைந்த வடிவம் தான் இன்றைய பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்னை !

அந்த தொடர் சச்சரவுக்குப் பின்னால் – பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடுகளும், அருகேயுள்ள எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்டான், ஈரான் ஆகிய நாடுகளின் பங்கெடுப்பும் இருந்து வருகின்றன !

* இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்து கட்டுப்படுத்தப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு வந்ததற்கு முழு முதற் காரணம் – சியோனிஸ்டுகள் (Zionists)

*சியோனிஸ்டுகள் என்பவர்கள் பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுகான தனி நாட்டை நிறுவ வேண்டும் என்று கூறும் யூதர்களை குறிப்பதாகும் !

அவர்களின் நோக்கம் பாலஸ்தீன நிலங்களில் குடியேறுவது மட்டுமல்ல. பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்தே முற்றிலும் துடைத்து எறிந்து விட்டு அந்த இடத்தில் ஒரு புதிய யூத தேசத்தை – இஸ்ரேலை நிறுவுவதாகும்!

* ஐரோப்பா, அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களின் கூட்டமைப்பு முதலில் உகாண்டாவில் யூத தேசத்தை அமைக்க நினைத்தார்கள்.

ஆனால், பல பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளாததால் ‘பாலஸ்தீனமே யூதர்களின் தாய் நிலம்’ என முடிவானது !

*பாலஸ்தீனத்தில் ஜெருசலேம் இருப்பதால் அது யூதர்களின் புனித இடம் என்பதாலும், கடவுள் அருளிய இஸ்ரேலுக்கு திரும்புகிறோம் என்கிற மதப் பிரச்சாரத்தை சியோனிஸ்டுகள் கையிலெடுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள்!

* இப்படியாக ஒரு காலனியத் திட்டம் – தாய் நிலத்திற்கு திரும்பும் திட்டமாக, கடவுளின் பெயரால் யூதர்கள் செயலாற்றினார்கள் !

மதம் – மனிதனுக்கு அபின் என்று மார்க்ஸ் சரியாகத்தான் சொன்னார் !

* முதலாம் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் கீழ் வந்தது.

பாலஸ்தீனத்தின் உயரதிகாரியாக நியமிக்கப்பட்ட சியோனிசத் தலைவர் சாமுவேல் பதவியேற்றவுடனேயே யூதர்களின் ஹீப்ரு மொழியை அலுவல் மொழியாக்கினார் !

* அவர் பாலஸ்தீனம் எனும் பெயருக்குப் பக்கத்தில் ‘இஸ்ரேலின் தேசம்’ எனக் குறிப்பிட்டார்! பாலஸ்தீனர்களின் பல பகுதிகள் சியோனிஸ்டுகளின் கைக்கு வந்தது.

பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு காலி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் !

* இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூதர்களை கொன்றார்!

அந்த வேளையில் யூதர்களை காப்பற்ற வேண்டி சியோனிஸ்டுகள் தங்கள் சொந்த இன மக்களுக்காக அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வில்லையாம்!
வியப்பாக இருக்கிறதல்லவா?

* யூதப் படுகொலைகளைத் தனியான யூத தேசம் அமைப்பதற்கான வாய்ப்பாக சியோனிஸ்டுகள் கருதினார்கள்.

ஹிட்லரிடமிருந்து யூதர்களைக் காப்பாற்ற யூத தேசமே தீர்வு என்று பிரச்சாரம் செய்தார்கள்!

பிரச்சாரத்தின் பயனால் ஆதரவும் பணமும் கிடைத்தது.

யூத தேசம் அமைய எல்லா உதவிகளையும் தருவதாக அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அறிவித்தார்!

* இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்த 42% எண்ணெய் கிணறுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த வேளையில் ஐ.நா. சபை பாலஸ்தீன பிரிவினைக்கு அடிகோலியது. அந்நாட்டை இரு துண்டாக பிரிக்க பரிந்துரைத்தது!

* பாலஸ்தீனத்தின் 55% நிலத்தை யூதர்களுக்கும் 45% நிலத்தை அரேபியர்களுக்கும் வழங்க முடிவு செய்தது. அமெரிக்காவிடம் அதிகாரமும் வீட்டோவும் இருந்ததால் தீர்மானம் நிறைவேறியது !

* அதன்படி மே15 – 1948 அன்று பாலஸ்தீனத்தின் மீதான பிரிட்டிஷ் அரசு முடிவுக்கு வந்தது. அதே நாளில் யூதத் தலைவர்கள் ‘இந்த சுதந்திர நாளில் இஸ்ரேல் எனும் புதிய தேசம் பிறக்கிறது’ என்று அறிவித்தார்கள்.

ஆனால், அன்றோ பாலஸ்தீன மக்களின் இனப் பேரழிவு வரலாறு உருவான துக்க நாளானது!

* அன்றே சுமார் எட்டு லட்சம் பாலஸ்தீனர்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக அண்டை நாடுகளான – ஜோர்டான், சிரியா, எகிப்து, லெபனான் எல்லைகளுக்கு புகளிடம் தேடி இடம் பெயர்ந்தனர்!

*அன்றிலிருந்து இன்றுவரை பாலஸ்தீனர்களுக்கு தனியான ஒரு சுதந்திர நாடு கிடையாது. அதை அடைவதற்கான போராட்டம் இன்றும் நடைபெறுகிறது.

* பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) ஒப்பற்ற தலைவர் யாசர் அராபத் நடத்திய போராட்டங்களும், முயற்சிகளும் முழுமையாக வெற்றியை தராமல் போனது !

அதன் பின்னர் பல போராளிகள் அமைப்பு உருவாகி களத்தில் நின்றது.

தற்போது ஹமாஸ் என்ற போராளிகள் பாலஸ்தீனத்திற்காக போராடுகின்றார்கள் !

* பாலஸ்தீனர்களின் இறுக்கமான வரலாற்றை இதற்கு மேலும் சுருக்கமாக தருவது பயனளிக்காது என்பதால், இவ்வளவு தகவல்களைக் கொண்டு இந்த அறிமுகவுரையை அமைத்துள்ளேன்!

முழு விவரங்களை முழுதாக அறிந்துகொள்ள இந்த நூலை அவசியம் வாங்கிப் படித்தறியுங்கள்!

நூலாசிரியர் நன்மாறன் திருநாவுக்கரசின் நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகள்!

– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

நூல்: சிதிலங்களின் தேசம் : பாலஸ்தீன அரசியல் வரலாறு! 
ஆசிரியர்: நன்மாறன் திருநாவுக்கரசு 
கிழக்குப் பதிப்பகம் 
முதல் பதிப்பு 2023 
பக்கங்கள்: 232

விலை: ரூ. 250/-

You might also like