பூமியின் எதிர்காலத்திற்கான அறைகூவல்!

ஜூன் 5 : உலக சுற்றுச் சூழல் தினம் !

மனித குலமும் பிற உயிர்களும் வாழ்வதற்கு இயற்கை அன்னை வழங்கிய ஆகப்பெரும் கொடைதான் இந்த பூமி.

காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களின் சமநிலையே பூமியின் உயிர்நாடி.

ஆனால், நவீனமயமாக்கல் மற்றும் மனிதனின் பேராசை, கட்டுப்பாடற்ற தொழிற்சாலைகள் காரணமாக பூமியின் சமநிலை இன்று பெருமளவில் உருக்குலைந்துள்ளது.

பூமியையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை உலகிற்கு உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் வரலாறு :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலக அளவில் ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 1972ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ‘மனித சுற்றுச்சூழல் மாநாட்டில்’ இதற்கான தீர்மானத்தைப் பிரகடனப்படுத்தியது.

அதன் பிறகு, 1973ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று “ஒரே பூமி” (Only One Earth) என்ற முழக்கத்துடன் முதன்முறையாக உலக சுற்றுச்சூழல் தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நாளில் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வருகின்றன.

தற்போது இருக்கும் பிரதான சுற்றுச்சூழல் சவால்கள் என்ன?

பருவநிலை மாற்றம் :

புவி வெப்பமயமாதல் காரணமாகக் காலநிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வழக்கத்திற்கு மாறான கனமழை, வறட்சி, கடுமையான கோடைக்காலம் போன்றவை ஏற்படுவதுடன், மனிதர்களுக்குச் சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, வெப்ப அழுத்தம் (Heat Stress), ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இந்த பருவநிலை மாற்றமானது மனித வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்து வருகிறது.

பிளாஸ்டிக் மாசு :

உலக அளவில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 400 மில்லியன் டன்களுக்கும் அதிகமானவை கழிவுகளாக மாறுகின்றன.

இதில் வெறும் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவான பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

மீதமுள்ளவை நிலத்திலும், கடல் வளங்களிலும் கலந்து ஒட்டுமொத்தச் சூழலையும் நஞ்சாக்குகின்றன.

சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய ஒளி, காற்றுத் திறன் ஆகியவற்றின் பயன்பாடு ஓரளவுக்கு உதவினாலும், உலகளாவிய ஆற்றல் தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாசின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

துறை வாரியான மாசுப் பங்களிப்பு : 

உலக அளவில் மாசு ஏற்படுவதற்குப் பிரதான காரணங்களாக இருக்கும் துறைகள் பற்றிய விவரம்:

மின்சாரத் துறை :

ஒட்டுமொத்த உமிழ்வில் 26% பங்களிப்புடன் இத்துறையே உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

வீட்டு உபயோக மற்றும் மின்னணுப் பொருட்கள் :

குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மைக்ரோவேவ் அவன், கணினி, செல்போன், பிரிண்டர், யு.பி.எஸ் (UPS) மற்றும் வாகன பேட்டரிகள், மின்விளக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.

பாதிப்புகள் :

இவற்றை முறையற்ற வழிகளில் மறுசுழற்சி செய்வதால் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

நிலத்தில் கொட்டப்படும்போது, இதிலுள்ள ரசாயனங்கள் கசிந்து நிலத்தடி நீரை விஷமாக்குகின்றன.

மறுசுழற்சி மற்றும் நிர்வகிப்பு முறைகள் :

பழைய அல்லது பழுதான மின்னணுச் சாதனங்களைக் குப்பைகளில் தூக்கி எறியாமல், அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவு மறுசுழற்சி வழங்க வேண்டும்.

எரிபொருள் உற்பத்தி :

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்ட வேகம் காரணமாக மாசு உமிழ்வு 4.1% அதிகரித்துள்ளது.

போக்குவரத்து :

சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் வாகனப் பயன்பாடு அதிகரித்ததால் இத்துறையின் பங்களிப்பு 2.8% உயர்ந்துள்ளது.

காற்று மாசு மற்றும் மனித உயிரிழப்புகள் :

காற்று மாசின் காரணமாக உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 79 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உலக அளவிலான காற்று மாசு இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது.

அண்மைய கணக்கீட்டின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் மக்கள் காற்று மாசினால் உயிரிழந்துள்ளனர்.

காற்றில் கலக்கும் நுண்ணிய துகள்களால் ($PM_{2.5}$) ஏற்படும் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளில் அறுபது சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காடுகள் அழிப்பு :

காடழிப்பு என்பது வெறுமனே மரங்களை வெட்டுவது மட்டுமல்ல; அது பூமியின் நுரையீரல் சிதைக்கப்படுவதற்கு ஒப்பானது.

காடுகள் அழிக்கப்படும்போது, அது உலகளாவிய சூழலியல் சமநிலையைச் சங்கிலித் தொடர் போலப் பின்வருமாறு பாதிக்கிறது.

வளிமண்டலச் சமநிலை குலைதல்:

மரங்கள் தங்களின் ஒளிச்சேர்க்கை உணவூட்ட முறைக்காக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சி, நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

காடழிப்பால் கார்பன் உமிழ்வு அதிகரித்து, புவி வெப்பமயமாகிறது.

பல்லுயிர் பெருக்கம் அழிதல் மற்றும் வாழ்விட இழப்பு :

மனித-விலங்கு மோதல் :

விலங்குகளின் வாழ்விடம் சுருங்குவதால், அவை மனித நடமாட்டம் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.

மேலும், அரிய வகை மூலிகைகளும் காட்டுயிர்களும் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இதுமட்டுமன்றி வறட்சி, மண் வளம் இழப்பு, நிலச்சரிவு போன்ற பேராபத்துகளும் ஏற்படுகின்றன.

காடுகள் இயற்கையான அரணாகச் செயல்பட்டுப் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் வேகத்தைக் குறைக்கின்றன.

காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, நீர் நிலப்பரப்பைச் சூறையாடிச் செல்கிறது.

வழக்கத்திற்கு மாறான வெப்ப அலைகள் (Heat Waves) வீசுவதற்கும் காடுகள் அழிப்பே முதன்மைக் காரணமாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், காடுகளை அழிப்பது என்பது பூமி தன் சுய சுத்திகரிப்புத் திறனை இழப்பதற்குச் சமம்.

நாம் செய்ய வேண்டிய கடமைகள்:

சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது என்பது அரசாங்கங்களின் கடமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பும் ஆகும்.

“இயற்கை மனிதனின் தேவைகளை நிறைவு செய்ய வல்லது, ஆனால், அவனது பேராசையை அல்ல”.

– யாழினி சோமு

You might also like