தொலைக்காட்சிகளில் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ஆதரவுக் குரலை தீவிரமாகவே எழுப்பி வந்தவர் கே.ராஜன்.
“சில சினிமா நட்சத்திரங்கள் அதிகப்படியான சம்பளத்தை வாங்குவதன் மூலம் படத்தயாரிப்புச் செலவு பன்மடங்கு அதிகரித்து, படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் உணர்வார்களா?” என்று தொடர்ந்து குரலை உயர்த்திப் பேசி வந்தவரான கே.ராஜன் தன்னுடைய 85 வயதில் சென்னை அடையாறு ஆற்றில் உள்ள பாலத்திலிருந்து குதித்து உயிர் நீத்திருக்கிறார்.
படத்தயாரிப்பாளராக உற்சாகமாக பேசி வந்தவரான கே.ராஜன் ஏன் இம்மாதிரியான முடிவை எடுத்தார்? இவர் மட்டுமல்ல, திரைப்பட உலகைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்களும் ஒரு கட்டத்தில், இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
ஏன், இயக்குநர் மணிரத்னத்தின் மூத்த சகோதரரும், தயாரிப்பாளருமான ஜி.வி.யே முன்பு தன் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.
திரைப்படத் தொழிலே மிகவும் நலிவடைந்து வரும் நிலையில், ஓராண்டில் திரைக்கு வரும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் பத்து படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றிப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வணிக ரீதியாக தோல்வியடைந்த அந்தப் படங்களைத் தயாரித்தவர்களின் உண்மையான நிலையைத் திரையுலகம் புரிந்து கொள்ளுமா? அல்லது திரை உலகத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிற தமிழ்நாடு முதல்வரான விஜய்யைப் போன்றவர்கள் புரிந்து கொள்வார்களா?
இதைக் கவனமாக பரீசிலித்தால்தான் கே.ராஜனைப் போன்ற தயாரிப்பாளர்கள் தங்கள் உயிரை போக்கிக் கொள்ளும் அவலங்களுக்கு முடிவு கட்ட முடியும்.