ஏப்ரல் 29ஆம் தேதி என் நெஞ்சுக்கு நெருக்கமானவரின் அலைபேசி அழைப்பு.
அலைபேசி அழைப்பை எடுத்தால் 96ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரக நினைவு விழா, நாளை வேதாரண்யத்தில் நடைபெற இருக்கிறது. நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என அழைத்தார்.
மறுக்க முடியவில்லை. வருகிறேன் எனக் கூறி, ஆறு மணி நேர சாலைப் பயணத்தில் 4 மணிக்கு வேதாரண்யம் சென்றடைந்தேன்.
அழைத்தவர் வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வி.ராஜேந்திரன்.
அவர் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலத்துடன் இணைந்து நடத்தும் பெருவிழா.
அழைத்தவருக்காக மட்டுமல்ல, அந்த நிகழ்வில் பங்கேற்க மறுத்தால் அது ஒரு பாவச் செயல்போலத் தோன்றியதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அங்கு சேர்ந்திட வேண்டும் என எண்ணி அவர்களுடன் இணைந்தேன்.
அழைத்தவர் என் வயது கருதி, ஆறு கி.மீ தூரம் கூட்டத்தில் நடக்க வேண்டும் முடியுமா? என்றார். முடியும் என்றேன்.
ஒரு தவ உணர்வுடன் 6 கி.மீ. தூரத்தையும் நடந்து சென்றது என் வாழ்நாளில் நான் பெற்ற பேறு.
உப்புச் சத்தியாகிரகத்தை உள்வாங்கிப் படித்து உணர்ந்தவன், மனது நட என்று கட்டளை இட்டது. நடந்ததால் கற்றுக் கொண்டது ஏராளம். சாலைகளில் தண்ணீர் தெளித்திருந்தார்கள்.
ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் கோலம் போட்டிருந்தார்கள். சிலர் வீட்டில் விளக்கேற்றி தன் வீட்டு வாசலில் வைத்திருந்தார்கள்.
ஆங்காங்கே தேநீர், பலகாரங்கள், தண்ணீர் என நடந்து செல்வோருக்கு ஊர் மக்கள் வழங்கினார்கள்.
இதில் கலந்து கொள்ள திருச்சியிலிருந்து நடைபயணமாக பலர் வந்திருந்தனர்.
வாசலில் நின்ற வயதானவர்கள் கூட்டத்தைக் கண்டு கும்பிட்டு நின்றார்கள். கூட்டத்தில் பல நூறு பேர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த யாத்திரையை புனிதமாக்கின.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது தண்டியாத்திரையை வரலாற்றில் படித்த வரலாற்று மாணவனாக ஒரு தியாக கால கற்பனைக்குச் சென்று ஒரு உணர்வு வெள்ளத்தில் தோய்ந்திருந்தேன்.
என்னைப் பாதுகாப்பாக கூட்டத்தில் வழிநடத்திய சர்தார் வேதரெத்தினம் பிள்ளையின் பேரன் வழி நெடுக நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்கிய வண்ணம் வந்தது என்னை தியாக காலத்துக்கே அழைத்துச் சென்றதுபோல் இருந்தது.
காந்தி விரும்பிக் கேட்கும் பஜன் – ரகுபதி ராகவ ராஜா ராம் – இசை ஒலித்துக் கொண்டே இருந்தது.
இரவு 7 மணி அளவில் உப்புச் சத்தியாக்கிரக ஸ்தூபியை ஊர்வலம் சென்று அடைந்தது.
அதன்பின் உப்பை அள்ளி கோஷமிட்டபடி தூவினோம். அடுத்து ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தோம்.
இந்த நிகழ்வில் பங்கேற்றபோது இந்தியச் சமூகம் எவ்வளவு சீக்கிரமாக இந்த தியாக காலத்தை மறந்துவிட்டது என எண்ணிய வண்ணம் இருந்தேன்.
அப்பொழுது விவேகானந்தர் கூறியதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது.
“அடிமைத்தனத்தில் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த நம் மக்கள், அந்த உளவியலிலிருந்து வெளியேறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதற்கு நாம் இந்த மக்களைத் தயார் செய்ய வேண்டும்” என்றார்.
அதைத்தான் அரவிந்தரும் கோரினார். அதைத்தான் காந்தியும் வேண்டினார், செய்தார், அதைத்தான் சுபாஷ் சந்திரபோசும், தாகூரும், வினோபாபாவேயும் செய்தனர்.
ஆனால், சுதந்திரம் அடைந்த மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்திய மக்களை அரசியலுக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும், சந்தைக்குள்ளும் அடைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது.
அந்த ஸ்தூபியில், ஊடக நண்பர்களிடம் கருத்துக் கூறுங்கள் என என்னை அழைத்த பெரியவர் கேட்டவுடன், “இது ஒரு சடங்கல்ல, இது ஒரு புதுப்பித்தலுக்கான நிகழ்வு.
96 ஆண்டுகளுக்கு முன் நம் தலைவர்கள் பசியிலும், வறுமையிலும், பிணியிலும், ஏழ்மையிலும், அறியாமையிலும், வாடிக் கிடந்த மக்களை உணர்வூட்டி, சிந்தனையில் உயர்வு பெறச் செய்து ஆத்ம சக்தியை பெருக்கி இந்திய மக்களிடம் இந்தியாவின் ஆன்மாவை விஸ்வரூபமெடுக்க வைத்த நிகழ்வு உப்புச் சத்தியாக்கிரக நிகழ்வு”.
இந்த நிகழ்வு ஒரு வரலாறு. உலகைக் குலுக்கிய வரலாறு, உலகுக்கு இந்தியாவின் விடுதலை இனிமேல் தடைபடாது எனக் கூறிய நிகழ்வு. உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த வரலாறு.
இன்று நாம் மூன்று தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறை சுதந்திர இந்தியாவில் வாழ்கிறது. முதல் தலைமுறை தியாகம் செய்து நாட்டை விடுவித்தது.
இரண்டாவது தலைமுறை தியாகத்தைப் போற்றியது, நாட்டுருவாக்கத்தில் பங்கு பெற்றது. மூன்றாம் தலைமுறை தியாகத்தை சடங்காக்கிக் கொண்டு, தியாக உணர்வற்று செயல்பட்டது.
நான்காம் தலைமுறை சுயநலத்தின் உச்சத்தில் அனைத்தையும் மறந்து அதிகாரம் நோக்கி, பதவிகளை நோக்கி, பொருள் சேர்க்க, லாபம் ஈட்ட, சொத்துக் குவிக்க, மது குடிக்க, பிழைப்புத் தேட, சுகபோக வாழ்க்கை வாழ தொடர்ந்த ஓட்டத்தில் ஒரு மயக்க நிலையில் யோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியா ஒரு யோக பூமி, கர்ம பூமி, இதன் வரலாற்றை இந்த நாட்டு மக்களுக்கு செயல்வழி உணர்த்த நடத்தும் நிகழ்வுதான்” இது என்று கூறினேன்.
அதை முடித்துவிட்டு ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றக் கேட்டுக் கொண்டார்கள்.
அந்த நிகழ்வில் உரையாற்றும்போது “எந்த ஒரு நாடும் சமூகமும் மேம்படுவது என்பது சிந்தனைச் சூழலை உயர்த்தும்போதுதான்.
சிந்தனையில் மனிதர்கள் தாழ்ந்த நிலையில் அவர்கள் தாழ்ந்த வாழ்வைத்தான் வாழ முடியும்.
ஆகையால்தான் நாம் அடிமையாக பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தோம், நம் தலைவர்கள் நமக்கு வழிகாட்டினார்கள்.
சிந்தனையை நாம் உயர்த்துவதன் மூலம் நாம் உயர்வோம். நம் உணர்வு உயரும், செயல் உயரும் என நமக்குக் கற்றுத் தந்தனர்.
நம் மக்கள் வறுமையில் வாடினாலும் ஏழ்மையில் இருந்தாலும் நாடு என்ற சிந்தனையில் வேற்றுமைகளை அகற்றினர், நாட்டை விடுதலை அடையச் செய்ய எந்தத் தியாகத்திற்கும் தயாராயினர்.
அந்தத் தயாரிப்பு என்பது ஆத்ம சக்தியைப் பெருக்கியதால்தான் எந்த தியாகத்திற்கும் வசதி படைத்த பெரும் பணக்காரர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை தயாராகினர்.

ஒன்றுபட்டனர், ஒருங்கிணைந்தனர், குறிக்கோள் மீது நம்பிக்கை வைத்து தியாகத் தலைவர்கள் காட்டிய வழியில் இந்தியர்களாக இணைந்து நாட்டை விடுதலை அடையச் செய்தனர்.” என்றேன்.
இன்று நம் நாடு, சமூகம், அரசியல், ஆட்சி, நிர்வாகம் அனைத்தும் எந்த இடத்திற்கு நாம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம் என்று எண்ணும்போது, நம் தேசத் தலைவர்கள் செய்த தியாகத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்தால்,
இப்படி நாட்டில் மக்களைப் பிரித்து வைத்து சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியல் நடத்தி, அதிகாரத்தைப் பிடித்து, சேவையை வணிகமாக்கி கரைபுரண்டு ஓடும் ஊழலில் இந்த நாட்டை சிக்க வைத்து விட்டோமே.
நமக்கு வழிகாட்டிய தலைவர்கள் தியாகத் தலைவர்கள். அவர்கள் மக்களை அன்பால் இணைத்தார்கள்.
இன்று நம் அரசியல்வாதிகள் மக்களை வெறுப்பால் பிரித்து அரசியல் நடத்தி அதிகாரத்தைப் பிடித்து சுகபோக வாழ்க்கையை அறமற்று வாழ்கின்றனர்.
இந்த அவல நிலை போக்கப்பட வேண்டும். இன்று பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளோம்.
ஆனால், வாழ்வியலில் எல்லா உயர்ந்த தர்ம நெறிகளை காற்றில் பறக்கவிட்டு பொருள் ஈட்டி சுகபோக வாழ்க்கையை வாழ அறமற்ற செயல்களைச் செய்துள்ள நிலையில்,
இதை மாற்றுவது யார் என்று நாமும் இல்லத்தில் இருந்து கேட்டுவிட்டு செயல்படாமல் இருப்பதற்குப் பதிலாக நற்சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து சமூக மேம்பாட்டுக்காகச் செயல்பட இப்படிப்பட்ட தியாக நிகழ்வுகளை மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இன்று நமக்குத் தேவை ஒரு உயர்ந்த சிந்தனைச் சூழல். அது முதலில் சமூகத்தில் வரவேண்டும்.
காரணம் இந்தப் பணியை இன்று கட்சிகளால் செய்ய இயலாது. அதை மக்களும் நம்ப மாட்டார்கள்.
இந்தப் பணிகளைச் சமூகத்திலும் அரசியலிலும் உள்ள நல்லவர்கள் இணைய வேண்டும். கட்சிக் கடந்து நாட்டிற்காக இணைய வேண்டும்.
கட்சிகளைவிட நாடு பெரிது. எனவே இந்த நாட்டைக் காப்பாற்ற நாட்டுப்பற்று கொண்ட நல்ல மனிதர்களை இணைத்து நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும்.
நல்ல மனிதர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு செயலில் இறங்கும்போது மக்கள் இணைவார்கள், பின்பற்றுவார்கள்.
தீய செயல்பாடுகள் தீயவர்களால் மட்டும் வருவது அல்ல, நல்லவர்களின் அமைதியாலும், தனித்திருப்பதாலும் நிகழும் செயல்.
எனவே, இன்றைய சூழலை மாற்ற தியாக கால நாட்டுப்பற்று வளர்க்கும் புதிய மக்கள் அரசியல் உருவாக வேண்டும்.
அதற்கு இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்களை இணைத்து நடத்தும்போது நாம் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும்.
இந்த நிகழ்வுக்கு இவ்வளவு பேர் கூடி இருப்பதே மிகப் பெரும் நம்பிக்கை தருகிறது.
எனவே, இந்த மாதிரிப் பணிகளைச் செய்யும்போது அதிக இளைஞர்களை இணைத்துக் கொண்டால் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் இந்தப் பணிகளை எடுத்துச் செல்வார்கள்.
இந்தப் பணிதான் இன்றைய தேவை எனக் கூறி என் உரையை நிறைவு செய்து கொண்டுவிட்டு என் இரவுப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
- டாக்டர் க. பழனித்துரை