கோடை விடுமுறைக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்டுகளிக்கக் கூடிய இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தக்ஷிண சித்ரா :
கலைப் பிரியர்களுக்கானது இந்த கலைக்கூடம். பல்வேறு மாநிலங்களின் அழகிய கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு மையம் இதுவாகும்.
பாரம்பரிய குடிசை வீடுகள், பல மாநில கலாச்சார கட்டிடங்களின் மாதிரிகள் என வியக்க வைக்கும் வடிவமைப்புடன் காணப்படுகிறது.
கலைப்பொருட்கள் வாங்க விரும்புபவர்களுக்கான சரியான இடம் எனலாம்.
சேத்துப்பட்டு படகுக் குழாம் :
சென்னையின் இதயப் பகுதியான சேத்துப்பட்டில் அமைந்துள்ள இந்த படகுக் குழாம், நகரின் பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே ஒரு அமைதியான பூஞ்சோலையாக விளங்குகிறது.
படகு சவாரி, குழந்தைகள் மீன் பிடித்து மீண்டும் ஏரியில் விட்டு விளையாட தூண்டில் மீன் பிடிப்பு மையம், சுற்றிலும் பெரியவர்களுக்கான நடைபாதை, சிறுவர் பூங்கா என ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஆலம்பரை கோட்டை 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டு சிதிலமடைந்து கிடக்கும் ஒரு கோட்டை இது.
இங்கே போக கல்பாக்கத்தை கடந்து ஈசிஆரில் 30 நிமிடம் பயணிக்க வேண்டும். வரலாற்று காலத்திற்குள் சென்ற அனுபவத்தை இது கொடுக்கும்.
சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வண்டி அமர்த்திக் கொண்டு வந்து செல்கின்றனர்.
கோட்டையை ஒட்டி முகத்துவாரப்பகுதியில் குளியலும் சவுக்குத் தோப்பின் சமையலும் நடைபெறுகிறது.
இந்தக் கோட்டையின் சிதிலமடைந்த பாகங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
சோக்கி தானி ராஜஸ்தானின் கலாச்சார சூழலில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய இடமாக விளங்குகிறது. இது ஒரு உயர் ரக உணவகமும் ஆகும்.
ஒட்டக சவாரி, குதிரை சவாரி, மாட்டுவண்டி பயணம் என பாரம்பரிய விஷயங்களுடன் இனிதாய் பொழுதை கழிக்கலாம்.
ராஜஸ்தான் கிராமத்திற்கு சென்று வந்த உணர்வே மேலோங்கி நிற்கும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா 1450 ஏக்கரில் பரந்து விரிந்த வனப்பகுதி ஆகும்.
வகை வகையான விலங்குகள், செழித்து படர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடையே சிறுவர்களை குஷி படுத்த சைக்கிளிங், லயன்ஸ் சபாரி என காலை தொடங்கி மாலை வரை நாள் முழுவதும் குதூகலிக்க சிறந்ததோர் இடமாகும்.
எழும்பூர் அருங்காட்சியகம் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், மானிடவியல், இயற்கை அறிவியல், சிற்பம் என ஆறு பிரிவுகளில் அமைந்த அழகிய அருங்காட்சியகம் இதுவாகும்.
பாரதியார் கவிதையின் கையெழுத்து பிரதி, சமணர் காலத்து சிற்பங்கள், ரவிவர்மா ஓவியங்கள் என பல கலைக்களஞ்சியங்களைப் பார்க்க முடியும்.
தவிர அவ்வப்பொழுது கலை நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு.
வளாகத்திற்கு உள்ளேயே இருக்கும் கன்னிமாரா நூலகமும் அவசியம் செல்ல வேண்டிய இடமாகும்.
ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இந்த இடங்கள் யாவும் சிறந்ததொரு தேர்வாக அமையும்.
S. வாணி