எதற்காக வந்தோம் இந்த உலகிற்கு?

வாசிப்பின் ருசி:
 
“என்றாவது ஒருநாள் உயிர் துறக்க வேண்டியிருக்கிறது. இறந்துவிடத் தான் பிறக்கிறோம். அல்லாமல் வேறு எதற்குமல்ல.!
 
இடையில் உண்ணவேண்டும். உறங்கவேண்டும். குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும்.
 
இதெல்லாம் எதற்கென்று கேட்பதாயின், பிறந்ததனால் ஏற்பட்ட சாபங்கள் தான் இவையென்று பதிலளித்துவிடலாம்.
 
பிறந்த போதே பசியெடுக்கத் தொடங்கியது. உறங்கத் தொடங்கியது. சிதையிலெழும் நெருப்பு அணைவதுடன் அந்த நெருப்பும் அணைந்து விடுகிறது. எல்லாமே முடிந்து விடுகிறது.
 
எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம்?
 
அப்படிப் பார்க்கும் போது எங்கேயோ இருந்திருக்கிறோமென்றல்லவா ஆகிவிடுகிறது?
 
எங்கேயோ இருந்திருக்கிறோம். இங்கே வந்து நுழைந்து கொண்டோம். எங்கேயோ இருந்தோம்.
 
அது எங்கே? எதற்காக அங்கிருந்து வந்தோம்? சும்மா சில காலம் இந்த உலகத்தில் துள்ளி நடந்துவிட்டுச் சிதை வழியாக மறுபடியும் வேறு இடத்திற்குப் போவதற்காகவா?
 
அப்படிப் போவதாயிருந்தால் அது எந்த இடத்திற்கு? வந்த உலகமும் போகிற உலகமும் ஒன்று தானா?
 
ஓர் இடத்திலிருந்து வந்து விட்டு சில காலம் இங்கே இருந்துவிட்டு இன்னோரிடத்திற்குப் போகிறோம். எதற்காக?”
 
– மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை.
You might also like