வாழ்ந்தபோது சொத்து சேர்க்கவில்லை, சுகபோகம் தேடவில்லை. உடுத்த ஒரு வெள்ளை வேட்டி, உள்ளத்தில் அணையாத மக்கள் சேவை – இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கை.
இன்று அவர் கண்மூடினாலும், அவரது உடல் ஓய்வெடுக்கப் போகவில்லை. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்கூடத்தில் ஒரு வருங்கால மருத்துவர் அறுவை சிகிச்சை பழக, அந்தப் பேராசான் தன் உடலையே பாடப்புத்தகமாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறார், தோழர் நல்லண்ணு!
சடங்கல்ல, ஒரு புரட்சி!
உயிர் காக்கும் மருத்துப் படிப்பை கற்க, உடற்கூறு குறித்து மாணவர்கள் அறிய உடல்கள் தேவை.
மனித உடலின் பாகங்களை – உடலில் நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் தசைகள் எங்கு அமைந்துள்ளன என்பதைத் தொட்டுப் பார்த்து – படிப்பதற்கு அவசியம்.
ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக, மருத்துவ மாணவர்கள் அந்த நுட்பங்களை, உயிரற்ற மனித உடல்களில் செய்து பழகுகிறார்கள்.
எந்த இடத்தில் வெட்டினால் இரத்தப்போக்கு குறையும், இதயம் அல்லது சிறுநீரகம் எந்த ஆழத்தில் இருக்கும் போன்றவற்றை நேரடிப் பயிற்சியின் மூலமே துல்லியமாக அறிய முடியும்.
புதிய மருத்துவக் கருவிகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகளை (எ.கா: ரோபோட்டிக் சர்ஜரி) அறிமுகப்படுத்தும்போது, அவற்றை முதலில் மனித உடல்களில்தான் பரிசோதித்துப் பார்ப்பார்கள். இது உயிருள்ள மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், உடல் என்பது, மருத்துவ உலகில் ஒரு ‘மவுன ஆசிரியர்’.
உடல்கள் தட்டுப்பாடு!
முன்பெல்லாம், யாரும் கோராத உடல்கள் மட்டுமே, மருத்துவ கல்விக்குப் பயன்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு, உடல் தானம் அதிகரித்திருப்பதால் நிலைமை முன்னேற்றம் கண்டிருக்கிறது.
ஆனாலும் இன்னமும் உடல்களுக்கு பற்றாக்குறைதான்!
உலக அளவில் முன்னேறிய நாடுகளில் நான்கு முதல் எட்டு மருத்துவ மாணவர்களுக்கு ஒரு உடல் இருக்க வேண்டும்.
இந்தியாவிலோ 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு உடல் இருக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ கவுன்சிலின் விதி. ஆனால் அதற்கே போதிய உடல்கள் கிடைப்பதில்லை.
ஆகவே, பல கல்லூரிகளில் 25 முதல் 30 மாணவர்கள், ஒரு உடலை மட்டுமே வைத்து மருத்துவம் கற்கிறார்கள். இதனால் மாணவர்கள் போதுமான பயிற்சி பெற முடியாமல் போகிறது.
இந்தியாவில், சுமார் 12 லட்சம் பேருக்கு ஒருவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 5 லட்சம் பேருக்கு ஒருவர் உடல் தானம் செய்கிறார்கள். அதாவது தேசிய சராசரியைவிட நமது மாநிலம் முன்னிற்கிறது.
ஆனாலும், இது இன்னும் உயர வேண்டும்.
காரணம், அமெரிக்காவில் 25,000 பேருக்கு ஒருவர், ஸ்பெயினில் 20,000 பேருக்கு ஒருவர் உடல்தானம் செய்கிறார்கள்.
அதாவது நம் நாட்டைவிட ஸ்பெயினில் 60 மடங்கு அதிகமாக உடல்தானம் நடக்கிறது.
மருத்துவ பேராசிரியர்கள், “நான்கு மாணவர்களுக்கு ஒரு உடல் என இருந்தால்தான், மாணவர்களே நேரடியாக அறுவை சிகிச்சை கத்தியை பிடித்துப் பழக முடியும்.
தற்போது உள்ளது போல் இருபது உடல்களுக்கு ஒரு மாணவர் என்ற நிலையினால், பெரும்பாலும் வெறும் செய்முறை விளக்கம் போலாகிவிடும்” என்கிறார்கள்.
உடல்தானம் செய்வது எப்படி?
உங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடற்கூறியல் (அனாடமி) துறையை அணுகி, படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்கள் சம்மதத்துடன், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நெருங்கிய உறவினர்கள் (வாரிசுகள்) சாட்சிக் கையொப்பம் இட வேண்டும்.
உடல் தானம் என்பது மரணம் நிகழ்ந்த சில மணிநேரங்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
தானம் செய்த நபர் இறந்தவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். 6 முதல் 10 மணிநேரத்திற்குள் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
(தற்கொலை, விபத்து, தொற்று நோய்களால் மரணம் என்றால் உடல் ஏற்கப்படாது.)
முன்னிலை வகிக்கும் தோழர்கள்!
பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் உடல் தானம் செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசு 2010-ல் மறைந்தபோது, இவரது உடல் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டது.
மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி 2018-ல் மறைந்த இவரது உடலும் மருத்துவ ஆய்வுக்காகத் தானம் செய்யப்பட்டது. பொதுவுடமை கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் பலர் இப்படி உடல்தானம் செய்துள்ளனர்.
உடல் தானத்துக்குப் பதிந்துள்ள பிரபலங்கள்!
தமிழ்நாட்டில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் நபர் நடிகர் கமல்ஹாசன். பல வருடங்களுக்கு முன்னரே தனது உடலை தானம் செய்ய பதிவு செய்ததோடு, அதை வெளிப்படையாக அறிவித்தார்.
அதே போல கடந்த 2009-ம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் தானத்துக்குப் பதிவு செய்தார்.
இப்படிப் பல பிரபலங்கள், தங்கள் உடலை தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.
விழிப்புணர்வு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
உடல்தானம் செய்தவருக்கு அரசு மரியாதை அளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. இது மிகச் சிறந்த செயல்.
அதேபோல பள்ளிப் பாடத்திட்டத்தில் உடல்தானம் குறித்து சேர்க்கலாம், தனியார் மருத்துவமனைகளிலும் இது குறித்த விழிப்புணர்வு வாசங்களை வைக்கலாம்.
சில நாடுகளில் உள்ளது போல உடல்தானம் செய்வோரின் விருப்பத்தை அவர்களது ஓட்டுநர் உரிமத்தில் பதியலாம்.
(இதன் மூலம் விபத்தில் உயிர் ஆபத்து ஏற்பட்டால், அவரது உடலை தானம் செய்ய ஏதுவாக இருக்கும்).
உடல்தானத்தை கட்டாயமாக்கலாம். இதனால் மருத்துவ மாணவர்களுக்குத் தேவையான உடல்கள் கிடைக்கும் என்பதோடு, சுடுகாடு – இடுகாடு ஒழிந்து சாதி, மத பேதம் மரணத்துக்குப் பிறகாவது ஒழியும்.