பன்னெடுங் காலமாக மனித குலத்தை பாதித்த பல நோய்கள், அறிவியலின் துணைகொண்டு ஒழிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் தொழுநோய்.
உலகின் பழமையான நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நோய், பெரும்பான்மையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும் கூட, மக்களில் குறைந்த சதவீதத்தினர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை முற்றிலுமாக களைவதற்கும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பிரெஞ்சு மனிதநேயவாதி ரவுல் ஃபெலெரோ என்பவரால் இந்த தினம் தொடங்கப்பட்டது.
நோய் குறித்த அறிகுறிகளை மக்களுக்கு தெரிவிக்கவும், முறையான சிகிச்சையின் மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை உணர்த்துவதும் இதன் நோக்கங்கள் ஆகும்.
இது குறித்த சரியான புரிதல் அவசியமாகிறது. தொழுநோய் என்பது பாக்டீரியா தொற்றால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும்.
Myco bacterium lebre எனப்படும் கிருமி, இந்நோய் உண்டாவதற்கு முழுமுதற் காரணமாகிறது. கிருமிகளின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை பொறுத்து Pauci bacillary மற்றும் Multi bacillary என இரு வகையாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவரிடம், வாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும் எச்சில் மூலமாக பரவும் சரும நோயாகும்.
நோய் பாதித்தவர்களை தொடுவதால் இந்நோய் பரவாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் தோல், நரம்பு, விரல்கள், கண்கள் மற்றும் பிற உடல் பாகங்களும் நிரந்தர பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
1873-இல் Dr. Kerard Hansen என்பவர் தான் தொழுநோயை உண்டாக்கும் உயிரியை கண்டுபிடித்தார். அதனால் இது Hansen நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
பாவச் செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய் என்பது போன்ற மூடநம்பிக்கைகளின் காரணமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானார்கள்.
ஆகையால் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தவறான எண்ணங்களையும், பாகுபாடுகளையும் நீக்கி அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து அளிக்கவும், உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1955 ஆம் ஆண்டு இந்திய அரசு, தொழு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் துவக்கியது. அதன் பிறகு இந்த திட்டம் தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டமாக மாற்றப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழு நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த பின்பும் உலகத்தில் உள்ள தொழுநோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தொழு நோயை முற்றிலுமாக ஒழிக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

W.H.O. எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தபடி Multi drug therapy எனப்படும் பன்மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாலும் சமூகத்தின் ஒத்துழைப்பாலும் தொழு நோய் இல்லா இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
போதிய விழிப்புணர்வு, ஆரம்ப கால சிகிச்சை மற்றும் சமூகத்தின் ஆதரவுடன் தொழுநோய் அற்ற உலகை உருவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தினம் நினைவூட்டுகிறது.
- எஸ்.வாணி