‘டார்வின்: வாழ்வும் அறிவியலும்’ – வாசிக்கப்பட வேண்டிய நூல்!

நூல் அறிமுகம் :

*உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியலைச் சொன்னவரும்; பரிணாம வளர்ச்சி தத்துவத்தை உலகிற்கு தந்தவரும்; எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியது என்ற அறிவியல் அதிசயத்தை விளக்கியவரும்;

குரங்கிலிருந்தே மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்று உருவானான் என்ற அறிவியலின் ஆச்சர்யத்தைப் பொது வெளியில் வெளியிட்டவருமான அறிவியல் மாமேதை டார்வினின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நூல் இது!

* இந்த நூலை எளிமையாகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் ஒரு நல்லதொரு பயண இலக்கியமாகவும் பயனுள்ள அறிவியல் நூலாகவும் படைத்த நூலாசிரியர் நன்மாறன் திருநாவுக்கரசுக்கு முற்போக்கு சிந்தனையாளர்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள்!

*கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கிய இங்கிலாந்து அறிவியல் அறிஞர்களின் மத்தியில் – உயிரினங்களைப் படைத்தது கடவுள் அல்ல… அது இயற்கையின் பரிணாம வளர்ச்சி என தனது 25 ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர் டார்வின்.

அவருடைய வாழ்க்கையின் சுருக்கத்தை இந்த நூல் அறிமுகவுரையில் தருகிறேன்:

* இங்கிலாந்தில் வாழ்ந்த ராபர்ட் டார்வின் – சூசானாவுக்கும் 12.02.1809 அன்று பிறந்தவர் – சார்லஸ் ராபர்ட் டார்வின்.

மொத்தம் ஆறு சகோதர சகோதரிகள். டார்வினுக்கு இளமையிலேயே சாகசக் கதைகள், சாகசப் பயணங்கள் பிடிக்கும். கடல் பிடிக்கும். வண்டுகள் பிடிக்கும். சிறு சிறு நத்தைகள் பிடிக்கும்! அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம்!

*மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லாத நிலையில் எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடல் உயிரினங்களை ஆய்வு செய்த அறிஞருக்கு உதவியாக இருந்தார்.

மருத்துவத்தில் நாட்டம் இல்லாததால் தந்தையிடம் தெரிவித்துவிட்டு கிறிஸ்துவப் பாதிரியராக ஆவதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்!

* கல்லூரியில் படிக்கும்போதே தனியாக ஒரு படகை ஏற்பாடு செய்து, ஏதாவது ஒரு புதிய இடத்திற்குச் சென்று கடல் உயிரினங்களை ஆய்வு செய்ய ஆர்வப்பட்டார்.

அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று அவருக்குக் கிடைத்தது!

*இங்கிலாந்து அரசே தனியான ஒரு கப்பலில் உலகப் பயணம் மேற்கொள்ளவும், புதிய கனிம வளங்களைக் கண்டறியவும், குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாவது பயணம் செய்து திருப்பும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கியது.

அந்தக் கப்பலின் கேப்டன் ஃபிட்ஜ்ராய்க்கு பேச்சுத் துணைக்கு உதவியாக ஆள் தேவைப்பட்டது. அந்த நல் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. உலகப் பயணம் செல்ல தனக்கு வாய்ப்பு கிடைத்தது கண்டு மகிழ்ந்தார்!

* ஹெச்.எம்.எஸ். பீகில் (HMS Beagle) கப்பல் இங்கிலாந்திலிருந்து 32 பேருடன் கேப்டன் ஃபிட்ஜ்ராய் தலைமையில் டார்வினும் இணைந்து 27.12.1831 அன்று தனது கனவுப் பயணத்தை துவக்கியது. முதல் நிறுத்தமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகே இருந்த தீவில் நின்றது!

*கடல் பயணம் கடுமையாக இருந்தது. அதைவிட கேப்டன் எல்லோரிடமும் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.

ஆனால், டார்வினிடம் மட்டும் பிரியமாக இருந்தார். கடும் காய்ச்சலால் மூன்று பேர் பலியானார்கள். பயணம் துவங்கி ஓராண்டு நிறைந்தபோது (1832) – தென் அமெரிக்காவின் கால்வாசியைக் கூட ஆராயவில்லை!

* பீகில் பயணம் இரண்டாவது ஆண்டை (1833) நிறைவு செய்யும்போதே பரிணாமத்தின் கேள்விகள் டார்வினுக்கு உருவாக ஆரம்பித்தன.

காட்டுமிராண்டி மனிதர்கள் குரங்குகளிடமிருந்து தோன்றினார்கள் என்றால், நாகரிகம் அடைந்த மனிதர்களை மட்டும் கடவுள் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்?.

*டார்வினுக்கு பயணத்தின்போது உடல் உபாதைகள், வயிற்றுப் போக்கு காரணமாக ஒரு மாதம் படுக்கையில் இருந்தார். கேப்டன் ஃபிட்ஜ்ராய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டது.

வேறு ஒருவர் கப்பலின் கேப்டன் ஆனார். பயணம் தொடர்ந்தது. சிலி நாட்டின் வால்டியா காடுகளில் ஆய்வு செய்யும்போது கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

* சிலியின் நகரப் பகுதிகள் பெரும் பாதிப்பு அடைந்தது. இந்த அழிவுக்கு மத்தியில் டார்வினுக்கு அறிவியல் கண் திறந்தது. நில அதிர்வுகள் தான் கடலுக்கு அடியிலுள்ள நிலத்தை வெளியே கொண்டு வந்தது என நேரில் கண்டு புரிந்துகொண்டார்.

பேரிடர்கள் வெறும் அழிவுகளை மட்டும் கொண்டு வரவில்லை. அவைகள் மலைகளையும் கண்டங்களையும் வடிவமைக்கும் படைப்பு இயந்திரங்கள் என்ற முடிவுக்கு வந்தார்!

* பீகில் பயணம் மூன்றரை ஆண்டுகள் (1835) நிறைவடைந்த போதுதான் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக் கூட்டங்களான கலாபகாஸ் (Galapsgos) சென்றடைந்தது.

அங்கு தான் டார்வினின் பரிணாமக் கொள்கைகளை விளக்கும் பல பொருட்கள், உயிரினங்கள், தாவரங்கள் கிடைத்தன. அவைகளை அள்ளிக் கொண்டு கப்பலில் சேர்த்தார்!

*அதன் பின்னர் பீகில் தெகுதி தீவுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இடங்களுக்குச் சென்றது. ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் பூர்வக் குடிகளை எப்படியெல்லாம் அழித்தொழித்தது என்ற அவலத்தையும் புரிந்து கொண்டார்!

* பீகில் பயணம் நான்கு ஆண்டுகளை (1835) நிறைவு செய்தபோது மொரீசியஸ் தீவை அடைந்தார்கள். பின்னர் தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனை அடைந்தார்கள்.

டார்வினின் புவியியல் குறித்து கடிதங்கள் வாயிலாக எழுதியவைகள் நண்பர் ஒருவர் தொகுத்து வெளியிட்ட காரணத்தால் டார்வின் அறிஞர்கள் மத்தியில் பிரபலமானார்!

*ஐந்து ஆண்டுகள் (1836) பயணம் நிறைவடைய இருந்தது. பீகில் பயணத்தின் போது கப்பல் குழுவினர் சந்தித்த – புயல், புரட்சி, போராட்டம், நோய், மரணம் எல்லாவற்றையும் கடந்து கப்பல் இங்கிலாந்தை நெருங்கும்போது, எல்லோரும் குரல் எழுப்பி, கத்தி ஆரவாரம் செய்தனர்.

பீகில் கப்பல் அக்டோபர் 1836-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தது!

* கப்பலிலிருந்து டார்வின் இங்கிலாந்துக்கு கொண்டு வந்த பொக்கிஷங்கள் – பயணக் குறிப்புகள் 700 பக்கங்கள்; புவியியல் ஆய்வுகள் 1300 பக்கங்கள்; உயிரியல் ஆய்வுகள் 400 பக்கங்கள்; பெட்டிகள் நிறைய உயிர் மாதிரிகள்;

கிட்டதட்ட 1500 பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள்; 4000 வகையான எழும்புகள், தோல்கள், உலர்ந்த உயிரினங்கள், உயிருடன் ஒரு கலாபாகஸ் ஆமை… இப்படி எண்ணற்ற அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்தார்!

*கொண்டு வந்த பொருட்களை மேலும் ஆய்வு செய்ய அந்தந்தத் துறைச் சார்ந்த அறிவியலாளர்களை அமர்த்தி ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளுக்கிடையே டார்வின் – எம்மா திருமணம் 29.01.1839ல் நடைபெற்றது!

* கடவுள் பற்றிய விவாதங்கள் வரும்போது – கடவுள் என்பது மனிதன் பிறப்பிலேயே அறிந்திருந்தால் தென் அமெரிக்காவில் தான் சந்தித்த பழங்குடி மக்களுக்கு கடவுள் என்றால் என்னவென்றே தெரியவில்லை!

கடவுள் பற்றிய ஞானம் உலகளாவியது என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?.. என டார்வின் கேட்டார்!

(இது சம்பந்தமாக எனது சொந்த அனுபவம் – நான் பணி நிமித்தமாக லிட்டில் அந்தமான் தீவில் இருந்தபோது காட்டுக்குள் டுகாங் கிரீக் (Dugong Creek) பகுதியில் வசித்த ஓங்கி (Onge) ஆதிவாசிப் பழங்குடிகளை 1980-ம் ஆண்டு சந்தித்து அவர்களது வாழ்க்கை விவரங்களை கேட்டறிந்ததுண்டு.

அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றும் கடவுள் என்றால் என்னவென்றே தெரியாதென்றும் மானுடவியல் மொழிபெயர்ப்பாளர் என்னிடம் கூறினார் – பொ.நாகராஜன்)

*பீகில் பயணம் நிறைவு பெற்று இருபது ஆண்டுகள் (1856) ஆனது.

உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றின் ஆய்வை நிறைவு செய்து வைத்திருந்தாலும் அவையெல்லாம் கிறிஸ்துவ திருச்சபைக்கு எதிராகப் போகுமே… மனிதனை கடவுள் தன்னைப் போல படைக்கவில்லை,

இயற்கையாக மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று உருமாறியவன் என்ற உண்மையை வெளியிட்டால், அறிவியலாளர் கலீலியோவுக்கு நடந்த கொடுமை தனக்கும் நடந்து விடுமே என டார்வின் பயந்தார்.

இருப்பினும் இளம் அறிவியலாளர்கள் டார்வினை ஆதரிக்க ஆரம்பித்தார்கள்!

* டார்வின் தனது மொத்த ஆராய்ச்சியையும் ஒரே புத்தகமாக மிகப்பெரிய புத்தகத்தை உருவாக்கினார்.

விலங்குகளின் இனப்பெருக்கம்; உயிரினப் பரவல்; உயிரினங்கள் கருவுறுதல்; தாவரங்கள்; இயற்கை தேர்வு;

வேறுபாடுகள் தோற்றம் என மொத்தம் 10 அத்தியாயங்கள்; ஏறத்தாழ 2.50 லட்சம் வார்த்தைகள் கொண்டது. நூலை மூன்று ஆண்டுகள் எழுதினார்.

டார்வின் தனது நூலுக்கு தலைப்பாக – On the Origin of Species என்று பெயரிட்டார். தமிழில் – உயிரினங்களின் தோற்றம்… என அழைக்கப்படும் நூல்!

*டார்வினின் நூலுக்கு எதிர்ப்பைவிட ஆதரவே அதிகமாக இருந்தது. டார்வினின் ஆதரவாளர்கள் ‘டார்வினிசம்’ என்ற அணியை உருவாக்கி ஆதரித்தார்கள்!

* டார்வின் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அவருக்கு 1877-ம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள்!

*மனித தோற்றம் பற்றி தனது முடிவுரையாக டார்வின் இவ்வாறு எழுதினார்:

நமக்கு முன்னோர்கள் காட்டுமிராண்டிகளும் இருந்திருக்கின்றார்கள். அறவுணர்வு கொண்டவர்களும் இருந்திருக்கின்றார்கள். இதன்மூலம் மனித மாண்பு தெய்வத்தின் படைப்பால் அல்ல!

இயற்கையான பரிணாமத்தின் மூலமாகவே அது நடந்துள்ளது! விலங்குகளிடமிருந்து மனிதன் தோன்றியதை நினைத்து தாம் பெருமை கொள்வதாகக் கூறி முடித்தார்!

* உலகை தனது அறிவினால் ஆராய்ச்சியால் அயராத உழைப்பால் உலுக்கி வைத்த அறிவியலாளர் சார்லஸ் ராபர்ட் டார்வின் தனது 73-வது வயதில் உடல் நலன் குன்றி 19.04.1882 அன்று இயற்கை எய்தினார்!

*இறந்த பின்னரும் வரலாறு படைத்தார் டார்வின் – நாத்திகவாதியாகவும் கிறிஸ்துவத்தைப் பழிப்பவராகவும் சாத்தானின் பணியாளகவும் அறியப்பட்டவர்,

மக்களின் பெருத்த ஆதரவின் காரணமாக, இங்கிலாந்தின் இதயமாக கருதப்பட்ட கிறிஸ்துவ தேவாலயமான ‘வெஸ்ட்மின்ஸ்டர் அபே’யிலுள்ள நியூட்டனின் கல்லறைக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டார்!

* இந்த அருமையான வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதி தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள நூலாசிரியர் தோழர் நன்மாறன் திருநாவுக்கரசுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது!

********************

நூல்: டார்வின் : வாழ்வும் அறிவியலும்!
ஆசிரியர்: நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 296 
விலை: ரூ. 350/-

– பொ. நாகராஜன்

You might also like