நூற்றாண்டுகள் கடந்தும் மாறாத கீ-போர்டு!

முற்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்கள் A B C D… எனும் வரிசையில்தான் சீராக அமைந்திருந்தன.

1867-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ்’ என்பவர்தான் சீரற்ற எழுத்து வரிசை உள்ள தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார்.

தொடக்க கால தட்டச்சு இயந்திரத்தின் எழுத்துக்கள் பொம்மைகள் செய்கிற சிறிய கட்டைகளால் அமைக்கப்பட்டன.

இதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. நல்ல வேகத்தில் தட்டச்சு செய்யும்போது பல கட்டைகள் ஒரே சமயம் சேர்ந்து அழுந்தின.

இதை எப்படித் தவிர்ப்பது? ஷோல்ஸ் சிந்தித்தார். தட்டச்சு செய்பவர்களின் அதிக வேகம்தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தார்.

எழுத்து வரிசையை சீரற்ற வகையில் மாற்றி அமைத்தால், தட்டச்சு செய்யும் வேகம் குறையும் என்று அவர் நினைத்தார். அப்படித்தான் இன்றைய தட்டச்சு இயந்திரத்தின் முதலாவது வடிவம் வெளிவந்தது.

ஆனால், மக்கள் அதிலும் மிக வேகத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கினார்கள். பிற்பாடு கணிப்பொறிகள் வந்தன.

அவற்றின் கீ போர்டையும் இதே வரிசையில் அமைத்தார்கள். 1936-ம் ஆண்டு ‘டொராக்’ என்பவர் ஒரு புதிய கீபோர்டை அறிமுகம் செய்தார்.

இதில் எழுத்துக்கள் பிரத்தியேக ரீதியில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு எழுபது சதவிகித டைப்பிங்கையும் செய்துவிடலாம்.

இவ்வகையான இரண்டாயிரம் இயந்திரங்கள் வேண்டும் என்று அமெரிக்கக் கடற்படை ஆர்டர் செய்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் இடையில் அந்தத் திட்டம் முடங்கியது.

1950-ம் ஆண்டிற்குப் பிறகு கணிப்பொறிகள் மிகவும் மாற்றமடைந்தன. ஆனால் கீபோர்டுக்கு மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை.

இந்த நூற்றாண்டில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களுக்குக்கூட 19-ம் நூற்றாண்டு கீ-போர்டைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

  • நன்றி : தினமணி
 
You might also like