‘சிறுதானியங்கள்’ உணவுக்கானது மட்டுமல்ல…!

உணவு என்பது உயிர் வாழ இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அனைத்து உயிர்களையும் இணைக்கும் பொதுவான காரணியாகவும் இருந்து வருகிறது.

ஆரோக்கியமான உணவுகள், உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானவை. உணவின் மூலம் நமக்குக் கிடைக்க கூடிய ஆற்றல் அளப்பரியதாகும்.

உணவானது புரதங்கள், வைட்டமின்கள், கொழுப்புகள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.

சங்க காலம் தொட்டே, உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பது தமிழர் பண்பாடாக இருந்து வந்திருக்கிறது.

நாகரீக வளர்ச்சியினால், உணவு முறைகளும் காலத்திற்கு ஏற்ப பலப்பல மாற்றங்களை பெற்றிருக்கின்றன.

வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்லும் காலச்சூழல் காரணமாக, பல வகை அயல்நாட்டு உணவுகளும் நாட்டிற்குள் கால் பதித்தன.

அதனால் மக்களின் உணவு முறை, பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. இந்த வகையில் துரித உணவுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.

செயற்கை நிறமூட்டிகளும் மணம் ஊட்டும் பொருட்களும் இணைத்து செய்யப்படும் இந்த உணவின் சுவையானது கவரும் வகையில் இருப்பதால், இதன் மோகம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக உள்ளது.

இந்த வகையான உணவின் மூலம் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் ஏராளம். ஆனாலும், தீவிரத்தை பலரும் உணரவில்லை என்றே கூற வேண்டும்.

நமது பாரம்பரிய இயற்கை உணவு முறை பற்றிய விழிப்புணர்வு, மக்களிடையே இன்னமும் மேலோங்க வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்த வகையில், சமீபமாக முக்கிய இடம் பிடித்திருப்பது சிறுதானிய உணவு வகைகளாகும்.

பழந்தமிழர் வாழ்வில், இந்த வகை உணவுகள் இடம் பெற்றிருந்த போதிலும், பல்வேறு காரணங்களினால் இடைப்பட்ட காலத்தில், தன் அடையாளத்தை இழந்திருந்தது.

பசுமைப் புரட்சியாளர்களாலும் இயற்கை விவசாயிகளாலும் மீட்டெடுக்கப்பட்ட இந்த அரிய வகை உணவின் சிறப்பையும் பயன்களையும் இங்கு பார்ப்போம். தாவர உணவுகளின் வரிசையில் வருவது தான் சிறு தானிய உணவுகள் ஆகும்.

சிறுதானியங்கள் என்பவை கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம் ஆகிய சிறு வகையான தானியங்களைக் குறிக்கும். இவை பழங்கால முதற்கொண்டு உணவில் முக்கிய அங்கமாக இருந்தன.

தற்போது ஊட்டச்சத்து மிகுந்த பாரம்பரிய தானியங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

இவை நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து முதலிய பல வகை சத்துக்களை உள்ளடக்கியது.

மனிதனின் ஆயுள் அதிகரித்த போதிலும், நோய்களும் கூடவே விருத்தி அடைந்து வருகின்றன.

நீரிழிவு, உடற்பருமன், ரத்த அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பரவலாக காணப்படுகின்றன.

இந்த பிரச்சனைகளை களைவதில் சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இவை ஒவ்வொன்றும் அளிக்கக்கூடிய பயன்களை பற்றி இங்கு காண்போம்.

கேழ்வரகு: அபரிமிதமான சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்து கொண்டிருப்பதால் எலும்பு தேய்மானம், ரத்த சோகை, மலச்சிக்கல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

உடல் உஷ்ணத்தை நீக்கி, வலிமை பெற உதவுகிறது.

குடல் புண்கள் குணமாவதற்கும் மாதவிடாய் கோளாறுகளை போக்குவதிலும் சிறந்து விளங்குகிறது , இது கேப்பை, ராகி என பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

கம்பு: ஏராளமான இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B9, நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த மூலக்கூறுகளை தன்னகத்தை கொண்டிருக்கும். வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தரும். முத்துத்தினை மற்றும் bajra எனவும் அழைக்கப்படுகிறது.

சாமை: மிகுந்த புரதம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தைக் கொண்டிருப்பதால், இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் சிறப்புற்று விளங்குகிறது.

மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரவல்லது. இதிலுள்ள தாது உப்புக்கள், உயிர் அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும் திறன் மிக்கவை.

இது ‘சிறு தினை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. குலசாமை என்பது ஆங்கிலத்தில் ‘Brown Top Millet ‘என்று அழைக்கப்படும் ஒரு வகையாகும்.

தினை: ஏராளமான இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியத்தை தன்னகத்தை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கும் கண் பார்வைத் திறனுக்கும் மிகுந்த உதவி புரிவதாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு, தாய்ப்பால் நன்கு சுரக்க, தினையைக் கூழாக்கித் தருவார்கள். கபம் தொடர்பான நோய்களுக்கும் வாயு தொல்லையை விரட்டுவதற்கும் பயன்படுகிறது.

இரடி, ஏறல் மற்றும் கங்கு ஆகிய பெயர்களிலும் ஆங்கிலத்தில் ‘Fox Tail Millet’ எனவும் அழைக்கப்படுகிறது.

குதிரைவாலி: மிகுதியான மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், புற்றுநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் anti-oxidant ஆகச் செயல்படும் தன்மை மிக்கதாகவும் விளங்குகிறது.

இடுப்பு வலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் இதனை கஞ்சியாக உட்கொண்டால் சிறந்த பயனை கொடுக்கும்.

‘புல்லுச்சாமை’ என்ற பெயரிலும், ஆங்கிலத்தில் ‘Horse Tail Millet’ எனவும் அழைக்கப்படுகிறது.

சோளம்: அதிகமான புரதம், தாமிரம் மற்றும் பிற சத்துக்களும் நிறைந்திருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

Osteoporosis நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சோளத்தில் செய்த உணவுகள் நன்மையைத் தரும்.

உடலில் உள்ள உப்பைக் கரைக்க வல்லது. இதில் உள்ள பீட்டா கேரட்டின், கண் குறைபாடுகளை சரி செய்யும்.

தோல் தொடர்பான நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல. இது மக்காச்சோளம் மற்றும் இறுங்கு என்ற பெயர்களிலும், ஆங்கிலத்தில் Jowar என்றும் அழைக்கப்படுகிறது.

அரிசி, கோதுமையுடன் ஒப்பிடுகையில், சிறு தானியங்கள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டவை.

இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறுதானிய உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதன் சாகுபடியை அதிகரிக்க, சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க, இந்திய சிறுதானிய வலை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன.

2023 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக இந்தியா அறிவித்திருந்தது.

குறைவான நீர் மற்றும் உரம் தேவைப்படுவதாலும் வறண்ட நிலப் பகுதிகளிலும் வளரும் என்பதாலும் இதனைப் பயிரிடுவதில் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சிறுதானியங்கள், வெறும் தானியங்கள் மட்டுமல்ல. அவை ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நீடித்த விவசாயத்திற்கான ஆதாரங்களாகவும் விளங்குகின்றன. அனைவரும் இதனை பயன்படுத்தி உடல் நலம் பெறுவோம்.

– எஸ். வாணி

You might also like