இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் அது ராகுல் காந்திதான். 1970-ல் பிறந்த இவருக்கு தற்போது ஐம்பத்தியைந்து வயது என்றாலும், அவரது உற்சாகமான சுற்றுப் பயணங்கள், உரை வீச்சு, மக்களுடன் அன்பாகப் பழகுவது என்று அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
அரசியல் ரீதியான கேள்விகளுக்கு நிகராக இவர் எதிர்கொண்டது, “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்” என்பதுதான்.
அதற்கு பல்வேறு விதமான பதில்களை ராகுல் அளித்துள்ளார்.
இரு வருடங்களுக்கு முன்புகூட, ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மாணவிகள் இதே கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு ராகுல், “நான் எனது வேலைகளிலும், காங்கிரஸ் கட்சிப் பணிகளிலும் முழுமையாக மூழ்கிவிட்டேன். அதனால்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்க நேரமில்லை” என்று அவர் தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில், “நான் திருமணம் செய்து குழந்தை பெற்றால், அவர்கள் என் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புவேன். அதைத் தவிர்க்கவே திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரம், “எனக்கு ஏற்றவாறு அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நான் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல” என்றும் அவர் சில நேர்காணல்களில் கூறியுள்ளார்.
சோனியா, ப்ரியங்கா என்ன சொன்னார்கள்?
ராகுல் காந்தியின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் மிகுந்த அக்கறைக் கொண்டிருந்தனர்.
2023-ல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, “ராகுலுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வையுங்கள்” என்று அன்புடன் கேட்டனர்.
அதற்கு சோனியா காந்தி சிரித்துக்கொண்டே, “நீங்கள் தான் அவருக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துச் சொல்ல வேண்டும்” என்று அவர்களிடம் நகைச்சுவையாகக் கூறினார்.
அந்தச் சமயத்தில் அருகில் இருந்த ராகுல்காந்தி, “அது தானாகவே நடக்கும்” என்று பதிலளித்தார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது மக்கள், ராகுலிடம் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
சத்தம் அதிகமாக இருந்ததால் ராகுலுக்கு அது சரியாகக் கேட்கவில்லை.
அப்போது பிரியங்கா காந்தி ராகுலிடம், “நீ எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள், அதற்குப் பதில் சொல்” என்று ராகுலை வற்புறுத்தினார்.
இதைக் கேட்ட பிறகே ராகுல்காந்தி, “இனி சீக்கிரம் செய்துதான் ஆகவேண்டும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
ராகுல் காந்தி தனது நேர்காணல்களில், தனக்குத் தனது தாயார் சோனியா காந்தியைப் போன்ற குணமும், பாட்டி இந்திரா காந்தியைப் போன்ற துணிச்சலும் கொண்ட ஒரு பெண் துணையாக அமைய வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காதல் தோல்வியா?
‘காதல் தோல்வி காரணமாகத்தான் ராகுல் திருமணத்தைத் தவிர்க்கிறார்’ என்று ஒரு பேச்சு நீண்டகாலமாகவே உண்டு.
ராகுலின் காதலி என்றால், வெரோனிக் கார்டெல்லி (Veronique Cartelli)தான் நினைவுக்கு வருவார்.
1990-களில், ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, வெரோனிக்கைச் சந்தித்தார்.
இருவரும் நட்புடன் பழகினர். இருவரும் பலமுறை பொது இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

1998-ல் சோனியா காந்தியின் முதல் அரசியல் பேரணியில் கூட வெரோனிக் கலந்துகொண்டார்.
அதேபோல இருவரும் அந்தமான் சுற்றுலா சென்றபோது, ஒளிப்படக்காரர்கள் தொடர்ந்து சென்று படங்கள் எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டனர்.
1999 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது கூட அவர்கள் லண்டனில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
2004-ம் ஆண்டு ஒரு நேர்காணலில், “நான் வெரோனிகை காதலிக்கிறேன்” என ராகுல் காந்தியே வெளிப்படையாக அறிவித்தார்.
ஆனால், பிறகு இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. வெரோனிக் கார்டெல்லி, தனது நாடான ஸ்பெயினுக்கே சென்றுவிட்டார்.
காதல் முறிவு ஏன்?
இருவரும் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், காதல் முறிவு என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
இதற்குக் காரணம், “ராகுலை காதலிப்பதால் தன் மீது ஊடக வெளிச்சம் படர்வதை வெரோனிக் கார்டெல்லி விரும்பவில்லை. அவர் எளிய வாழ்க்கையை வாழ விரும்பினார். ஆகவே அவர் பிரிந்துவிட்டார்.
அதே போல, தனது தந்தை ராஜீவைப் போல, தானும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வது, அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பும் என ராகுல் நினைத்தார்” என்று சொல்லப்பட்டது.
ராகுலின் காதல்கள்?
வேறு சில பெண்களுடன் காதல் என ராகுலை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது உண்டு.
2012-ம் ஆண்டு, The Sunday Guardian உள்ளிட்ட சில ஆங்கிலப் பத்திரிகைகளில், “ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னரான முஹம்மது ஜாகிர் ஷாவின் பேத்தி நுவால் ஜாஹருடன் ராகுல் நெருக்கமாகப் பழகி வருகிறார்.

நுவால் ஜாஹரின் குடும்பத்தினர் இத்தாலியில் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். அப்போதே காந்தி குடும்பத்திற்கு அவர்களுடன் நட்புண்டு. தற்போது அவர்கள் டில்லியில் செட்டில் ஆகிவிட்டனர்.
இருவரும் டெல்லியில் உள்ள Aman Hotel என்ற பிரபல உணவகத்தில் ராகுலும், நுவாலும் ஒன்றாக அடிக்கடி காணப்படுகின்றனர். அவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்” என செய்திகள் வெளியாகின.
ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2013-ல் ஒரு நிகழ்வு நடந்தது:
ஆம்… இளவரசி நுவால் ஜாஹர், எகிப்து நாட்டின் முன்னாள் மன்னர் ஃபவுட் II-ன் மகனான இளவரசர் முஹம்மது அலி என்பவரை 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்தான்புல்லில் திருமணம் செய்துகொண்டார்.
சுற்றும் சர்ச்சை!
2022-ல் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
‘அந்தப் பெண் நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யாங்கி. அவரை ராகுல் காதலிக்கிறார்’ என்று பாஜகவினர் விமர்சித்தனர்.
ஆனால், உண்மை வேறு என்பது விரைவில் வெளியானது.
ராகுல்காந்தி தனது தோழி சும்னிமா உதாஸ் என்பவரின் திருமணத்துக்காக காத்மாண்டு சென்றார். குறிப்பிட்ட வீடியோவில் ராகுலுடன் இருந்தது, அந்தத் திருமண விருந்துக்கு வந்திருந்த (மணமகளின்) தோழி.
கடைசியாக ராகுல் சொன்னது என்ன?
இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நிகழ்வில் பேசிய ராகுல், “என் தாய் சோனியா குணமும், பாட்டி இந்திரா காந்தி போன்ற துணிச்சலும் கொண்ட ஒரு பெண் அமைந்தால் நன்றாக இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்!
போலி ஒளிப்படங்கள்:
சமீபகாலமாக, ‘ராகுல் காந்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இதோ ஒளிப்படங்கள்’ என சமூக வலைதளங்களில் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றன.
இவை போலியானவை என உடனுக்குடன் காங்கிரஸ் கட்சியினரால் உறுதி செய்யப்படுகின்றன.
அதேபோல இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் தனக்குத் திருமணமாகவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனி பிரம்மச்சாரிதான்..!
‘இனி பிரம்மச்சாரிதான்’ என்பதை தற்போது சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ராகுல் என டில்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்குக் காரணம், சமீபத்தில் வெளியான ஒரு தகவல்.

ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் மூத்த மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர் பெயர் ரெய்ஹான் வதேராவுக்கு. வயது 25.
இவர் தனது தோழி அவிவா பெய்க் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில்தான் இருவருக்கும் சமீபத்தில், இரு வீட்டார் ஒப்புதலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மணமகள் அவிவா, டெல்லியைச் சேர்ந்த இவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்.
இவரது தாயார் நந்திதா பெய்க்கும், பிரியங்கா காந்தியும் நீண்ட கால நண்பர்கள்.
ராஜஸ்தான் ரந்தம்பூர் அருகில் பண்ணை வீட்டில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டினர்.. குறிப்பாக ராகுல் காந்தி.. உற்சாகமாக கலந்துகொண்டார்.
அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளது.
மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்!
“தனது தங்கை மகனின் திருமண நிச்சயதார்த்தமே நடந்துவிட்ட பிறகு, இனி அவர் திருமணம் என்பது ஆச்சரியமான விசயம்தான்.
அந்த நிகழ்வில் உற்சாகமாக கலந்துகொண்டதன் மூலம், ‘இனி தான் எப்போதும் பிரம்மச்சாரிதான்’ என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ராகுல்” என்கின்றனர் டில்லி ஊடகவியலாளர்கள்.
ஆனாலும், திருமணம் குறித்து கேட்டால், “எனக்கு ஏற்ற மணமகள் அமையட்டும்” என்று உற்சாகம் குறையாமல் சொல்லத்தான் செய்வார் ராகுல்.
பலரும் அறியாத விசயம்…
அவர் ஒரு சிறந்த ஸ்குபா டைவர். அதோடு, ஐகிடோ தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர்.
ஆக.. ராகுல் எப்போதும் மோஸ்ட் வாண்டட் பேச்சிலர்தான்!
திருமணம் செய்துகொள்ளாத தலைவர்கள்!
# தமிழ்நாடு
@ ஜெயலலிதா: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்
# இந்தியா
@ அடல் பிகாரி வாஜ்பாய்: இந்தியாவின் முன்னாள் பிரதமர்
@மம்தா பானர்ஜி: மேற்குவங்க முதல்வர்
@ மாயாவதி: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்
@யோகி ஆதித்யநாத்: உத்தரப்பிரதேச முதல்வர்
@ நவீன் பட்நாயக்: ஒடிசாவின் முன்னாள் முதல்வர்
@உமா பாரதி: ஒன்றிய முன்னாள் அமைச்சர்
# உலகம்
@ எலிசபெத்: இங்கிலாந்து ராணி ‘கன்னி ராணி’ என்று அழைக்கப்பட்டவர்
@மார்க் ருட்டே: நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்
@ ஜேம்ஸ் புகேனன்: அமெரிக்க முன்னாள் அதிபர்
– டி.வி.சோமு