நூல் அறிமுகம்:
கொற்கை என்றதுமே துறைமுகம்தான் எல்லோர் நினைவிற்கும் வரும். சங்கக் காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாகவும், முத்து வர்த்தகத்தின் முக்கிய மையமாகவும் திகழ்ந்த இடம் அது.
அந்த வகையில் கொற்கைப் பற்றி விரிவாக வந்திருக்கிறது ‘கொற்கை – தூத்துக்குடி துறைமுகங்கள்’ என்கிற இந்நூல். இதனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியுள்ளார்.
இதில் கொற்கை துறைமுகமாக இருந்த இடம், கொற்கைக்கான பெயர் காரணம், அங்கே உருவான நாணயங்கள், சங்கு அறுக்கும் தொழில், அதனைப் பற்றி பாடிய இலக்கியங்கள்,
வியாபாரத் தலங்கள், பாண்டிய மன்னர்களும் முத்துக்களும், கொற்கையில் உள்ள முத்துக்கள் எனப் பலவிஷயங்களை அடுக்கியுள்ளார்.
இதன்கூடவே கொற்கையுடன் தொடர்புடைய காயல்பட்டிணம், பழைய காயல், ஓபீரின் என்ற உவரி துறைமுகம், புன்னைக்காயல், தூத்துக்குடி ஆகிய நகரங்களைப் பற்றிய செய்திகளையும் தொகுத்து அளித்துள்ளார்.
கொற்கை என்பது ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாய் இருந்த ஒரு பட்டணம். குறிப்பாக மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், நீண்ட தெருக்களும், பெரிய வணிக நிலையங்களும், பண்டக சாலைகளும், உயரிய கலங்கரைவிளக்கும் கொண்ட நகராக மிளிர்ந்தது.

பாண்டிய பேரரசின் கோநகரமாகவும், துறைமுகப் பட்டிணமாகவும் விளங்கியது. ஆனால், இன்று அற்புத மாட மாளிகைகள் இல்லை. கூடகோபுரங்கள் இல்லை.
பாண்டியனின் அரண்மணை இல்லை. கொற்கை துறைமுகம் எனச் சுட்டிக்காட்டப்படும் அந்த இடத்தில் ஒரு குளம் மட்டுமே இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.
அந்தக் கொற்கை குளத்தினைச் சுற்றிச் சிறுசிறு கிராமங்கள் உள்ளன என்கிறார்.
குளத்தின் நடுவே உள்ள வெற்றிவேல் செழிய நங்கை அம்மன் கோயிலுக்கும் கண்ணகிக்கும் உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடுகிறார்.
இதனையடுத்து கொற்கையில் உருவான நாணயங்கள் பற்றி சொல்கிறார்.
எப்படி சென்னையில் நாணயங்கள் உருவான இடமாக தங்கசாலை பெயர் இருக்கிறதோ அதேபோல் கொற்கையில் அக்கசாலை இருந்ததெனக் குறிப்பிடுகிறார்.
இன்றும் அங்கு அக்கசாலை விநாயகர் கோயில் இதனை பறைசாற்றி உள்ளதாகச் சொல்கிறார்.
அடுத்து சங்கு அறுக்கும் தொழில் என்பது பற்றிய பிரிவில் அத்தனை தகவல்களைத் தருகிறார் இந்நூலாசிரியர்.
சில இடங்களில் எழுத்தாளர் சாத்தான்குளம் ராகவனின் குறிப்புகளை மேற்காட்டியுள்ளார்.
இதன்பிறகு கொற்கையைப் பாடிய இலக்கியங்களை மட்டுமே தருகிறார். அகநானூறு பாடலில் கொற்கையைக் குறிப்பால் உணர்த்தும் பாடலையும் அதன் விளக்கங்களையும் தந்துள்ளார்.
உதாரணத்திற்கு துறைமுகத்தில் எழிலுடன் எண்ணற்ற தாழை மரங்கள் நின்றன. இந்தத் தாழை மரங்கள் கொற்கைக்கு நறுமணம் தந்து கொண்டிருந்தன.
இயற்கையாகவே கடற்கரையில் இருந்து வரும் புலால் நாற்றத்தை அத்தாழம்பூவின் நறுமணம் மாற்றியது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
அகநானூற்றில் இந்தப் பாடல் தலைவன் தன் நண்பனுக்கு தலைவியின் அழகை ஏளனம் செய்ததற்கு மறுப்பு தெரிவித்ததாக வெண்கண்ணனார் பாடியது. இதில் கொற்கையின் அழகை சுட்டியிருப்பதை இந்நூலாசிரியர் தருகிறார்.
இதன்பிறகு வரும் கொற்கை வியாபாரத் தலங்கள் பற்றிய பகுதியிலும் அத்தனை தகவல்களை அடுக்குகிறார். இதனையடுத்து பழைய காயல், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தகவல்களை நம்மால் பார்க்கமுடிகிறது.
அரேபியாவில் இருந்து குதிரைகள் கொண்டு வந்த முஸ்லிம் வியாபாரிகள் தங்கியிருந்த ஊர் காயல்பட்டிணம். அவர்கள் குதிரைகளை விற்றுவிட்டு பதிலுக்கு முத்துகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

13ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் பெரிய நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காயல்பட்டிணத்தில் குடியேறினார்கள். இப்படியான பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
அடுத்து கொற்கையில் கிடைத்த முத்துகள் பற்றி பகுதி வியக்க வைக்கிறது. பொதுவாக முத்து அதன் பருமன், அமைப்பு, ஒளி, நிலை ஆகியவற்றை வைத்து 13 வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இந்த 13 வகை முத்துகளும் கொற்கையில் கிடைத்துள்ளன. அந்த முத்துகள் பற்றி மட்டுமே இதில் பேசியுள்ளார் நூலாசிரியர்.
இதுேபால் முத்துக்குளித்துறை, கொற்கையை ஆண்ட மன்னர்கள், உவரி துறைமுகம், இப்போதைய தூத்துக்குடி துறைமுகம், அது கடந்த வந்த பாதை எனப் பல விஷயங்களை திரட்டித் தந்துள்ளார்.
இப்படி நூல் முழுவதும் நிறைய தகவல்கள் கொட்டி கிடப்பதால் படிப்பதற்கு சுவாரஸ்சியமாக இருந்தாலும் அதனை மனதில் நிறுத்த சிரமப்பட வேண்டியிருக்கிறது.
ஏனெனில் எழுத்தாளர்கள் தந்த தகவல்கள், வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆய்வுக் குறிப்புகள், நேரடியாக களத்திற்கே சென்று சேகரித்தத் தகவல்கள் என எல்லாம் ஒருசேர தந்துள்ளதால் ஓர் அயர்ச்சி வருகிறது.
இருந்தும் கொற்கையைப் பற்றியும், கொற்கை துறைமுகம் குறித்தும் அறிய நினைப்பவர்களுக்கு இது பயனுள்ள நூலாக இருக்கிறது. அந்த வகையில் இது வாசிக்க வேண்டிய நூல்.
கொற்கை – தூத்துக்குடி துறைமுகங்கள்
முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு: பொன்சொர்ணா
பக்கங்கள்: 378
விலை: ரூ. 400/-
தொடர்புக்கு: 94428 34236
– கவின்