‘பயம் கொள்ளலாகாது பாப்பா’ – கூத்தபிரான்!

‘வானொலி அண்ணா’ என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர், ‘வானொலி அண்ணா’ என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

நடராஜன் என்ற இவரது பெயரை கூத்தபிரான் என்று வைத்துக் கொள்ள யோசனை கூறியவர் இவரது மனைவி ஆவார்.

வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட கூத்தபிரான் 30 வருடங்களுக்கு மேலாக ரேடியோவில் ‘சிறுவர் சோலை’ நிகழ்ச்சி ஒலிப்பரப்பினார். ஆல் இந்தியா ரேடியோவின் இவர் நடத்தி வந்த ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சி அந்த கால கட்டத்தில் மிகவும் புகழ் பெற்றது.

எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதி இயக்கியுள்ள கூத்தபிரான், 7,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் பொழுதே கலையில் ஆர்வம் கொண்ட இவர் ‘பயம் கொள்ளலாகாது பாப்பா’, ‘படிக்கலாம் நடிக்கலாம்’, ‘பறக்கும் கம்பளம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி குழந்தைகளின் கலை ஆர்வத்தை மேலும் திறன் பட செய்ய பெரிதும் பாடுபட்டார். இவருடைய நாடகங்கள் சில நூல்களாக வெளிவந்துள்ளன.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி வந்த இவர், கதைகள் கூறுவதில் வல்லவர். தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக திகழ்ந்தவர். 

1960-களின் துவக்கத்தில் எழுதிய ‘சுருக்குப் பை’ என்ற தொடர் நாடகத்தில் வருங்கால கிரிக்கெட் எப்படி இருக்கும் என்று இடம் பெற செய்து இருந்தார்.

சிறுவர், சிறுமியர்களுக்கான இந்த தொடர் நாடகம், வாரம் தோறும் ஒலிபரப்பாயிற்று ரேடியோவில். அதில் கதாநாயகனாக நடித்த சிறுவன் கிரிக்கெட் மேட்ச்சில் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்து நொறுக்குவான்.

1968-ல் மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் காரி சோபர்ஸ் உண்மையாகவே ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டு சாதனை புரிந்தார், முதல் தர ஆட்டத்தில்.

இந்த ‘சுருக்குப் பை’ நாடகத்தில் அந்த பையன் 1000 ரன்களுக்கு மேல் குவிப்பான். இதுவும் சாதியம் ஆயிற்று. மகாராஷ்டிரவின் கல்யாண் பகுதியைச் சார்ந்த பிரணவ் தனவாடே என்ற பள்ளி மாணவன் உலக ரிகார்டு ஏற்படுத்தினான். பள்ளிக்கூடங்களுக்கு இடையில் நடந்த டோர்ன்மெண்டில், 2016 ல் இந்த மாணவனின் ஸ்கோர் 1009* ரன்கள் நாட் அவுட்.

குழந்தைகளை மேடை நாடகங்களில் பங்கு பெற பயிற்சி அளிக்க ‘அடையார் சிறுவர் சங்கம்’ நிறுவினார். இந்த சங்கத்தின் முதல் நாடகமான ‘அம்மா சொல் அமிர்தம்’ துவக்கி வைத்தவர் ராஜாஜி அவர்கள்.

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1955-ல் குழந்தைகள் நாடக விழாவினை நடத்தியது. கூத்தபிரான் எழுதி அடையாறு வானொலி சிறுவர் சங்கக் குழந்தைகள் நடித்த ‘அன்னை சொல் அமிர்தம்’ என்ற நாடகம் முதல் பரிசினைப் பெற்றது. வானொலியில் பணியாற்றும் வாய்ப்பு வந்ததும், பணியாற்றிக் கொண்டே நாடகப் பங்களிப்புகளைத் தொடர்ந்தார்.

1961-ல், டில்லிக்குச் சென்று நாடகங்களை நடத்தினார். பூர்ணம் விஸ்வநாதனுடன் இணைந்து ‘தனிக்குடித்தனம்’, ‘ஊர் வம்பு’, ‘கால்கட்டு’, ‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற நாடகங்களில் நடித்தார். சோ. ராமசாமி நடித்த, அவருக்கு ‘சோ’ என்ற பட்டப்பெயரைப் பெற்றுத் தந்த, ‘தேன்மொழியாள்’ நாடகத்தின் கதை, வசனம், இயக்கம் கூத்தபிரான் தான்.

1985-ல், ‘நவபாரத் தியேட்டர்ஸ்’ என்ற பெயரில் நாடகக்குழு ஒன்றைத் தொடங்கினார் கூத்தபிரான். ‘நாராயண கோபாலா’, ‘காசிக்குப் போன கணபதி’, ‘சுபஸ்ய சீக்கிரம்’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.
 
இந்நாடகங்களில் அவர், அவரது மகன்கள் கணேசன், ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் ஆகியோரும் நடித்தனர். கூத்தபிரான் பணி ஓய்விற்குப் பின் பல நாடகங்களில் நடித்தார். குழந்தைகள் நாடகக் குழு ஒன்றையும் நடத்தி வந்தார். 6000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சில நாடகங்களில் பெண் வேடமேற்றும் நடித்துள்ளார்.
 

கல்கி அவர்களின் எழுத்துக்கள் மீது தனி மரியாதை வைத்து இருந்த கூத்தபிரான் அவரது படைப்புகளான தேவகியின் கணவன், அமர தாரா ஆகியவற்றை மேடை நாடகங்களாக நடத்தியவர்.

சோவின் நண்பர் ஆன இவர் வசனம் எழுதி இயக்கிய ‘தேன் மொழியாள்’ நாடகம் சோ அவர்களின் விவேகா பைன் ஆர்ட்ஸ் குழுவால் மேடையில் நடிக்கப் பட்டது.

இவர் மெரினா, சுஜாதா எழுதிய நாடகங்கள் மற்றும் காத்தாடி ராமமூர்த்தி, ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் மேடை நாடகங்களில் தோன்றி நடித்தவர்.

கூத்தபிரான் கடைசி வரையில் மேடை நாடகங்களோடு தொடர்பு கொண்டு இருந்தார். 1932-ம் ஆண்டு பிறந்த இவர் 2014-ம் ஆண்டில் மறைந்தார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ள பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– வாசுதேவன்

  • நன்றி: கல்கி

#Koothapiran #VanoliAnna #கூத்தபிரான் #ஆல்இந்தியாரேடியோ #வானொலிஅண்ணா #AllIndiaRadio #சுருக்குப்பை #அடையார்சிறுவர்சங்கம் #அம்மாசொல்அமிர்தம் #Surukkupai #AdyarSiruvarSangam #AmmaSolAmirtham

 
 
You might also like