லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!

லுத்மிலா பவ்லிசெங்கா. இப்படி ஒரு பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெயரில் ஏதோ ரஷிய வாடை அடிக்கிறதே என்று ஊகித்திருப்பீர்கள். ஆம். இவர் சோவியத் ரஷியாவைச் சேர்ந்த பெண்மணி.

14 வயதிலேயே துப்பாக்கிச் சுடுவதில் இவருக்கு ஆர்வம். குறிசுட்டுப் பழகும் வகுப்புகளுக்குப் போனார். வோரோசிலோவ் குறிசுடுபவரான பதக்கம் இவருக்குக் கிடைத்தது. கூடவே ஒரு சான்றிதழ் வேறு.

16 வயதில் திருமணம். ஒரு மகன். பிறகு கீவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆசிரியையாகும் முனைப்பில் படித்தார். அதேநேரம் குறி தவறாமல் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் 2 ஆண்டுகாலம் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றார்.

1941ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி. சோவியத் ரஷியா மீது நாஜிகளின் படையெடுப்பு நடந்தது.

அன்று துப்பாக்கிச்சூடு பள்ளிக்கு ஏதோ வேலையாக லுத்மிலா போயிருந்த நேரம் அவரது தலைக்கு மேலே ஹிட்லரின் போர் விமானங்கள் பறந்தன.

லுத்மிலா, இப்போது ரஷிய செஞ்சேனையில் சேரும் முடிவுக்கு வந்தார். இன்ஃபான்டரி படைப்பிரிவில் அவர் சேர விரும்பியபோது அலுவலர்கள் கபகபவென சிரித்தார்கள்.

‘பேசாம நர்ஸாக போம்மா’ என்றார்கள்.

லுத்மிலா அவரது வோரோசிலோவ் பதக்கம், சான்றிதழைக் காட்டியபோது, அவரை ரஷிய செஞ்சேனையின் 25ஆவது டிவிசனில் ஸ்னைப்பர் வீராங்கனையாகச் சேர்த்துக் கொண்டார்கள்.

1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8. பெல்யாவேகா பகுதியில் பதுங்கியிருந்து நாஜி ராணுவத்தினர் 2 பேரை குறிதவறாமல் சுட்டுவீழ்த்தினார் லுத்மிலா.

அது வெறும் தொடக்கம்தான். அந்த ஆகஸ்ட் மாத முடிவில் மொத்தம் 100 விக்கெட்கள் காலி. அசந்து போன ரஷிய ராணுவ அதிகாரிகள் லுத்மிலாவுக்கு சீனியர் சர்ஜெண்ட் பதவி தந்தார்கள்.

அக்டோபர் மாதம். ஒடெசா நகரம் எதிரிகளின் கையில் விழுந்தபிறகு செவஸ்டபோல் நகரத்துக்கு லுத்மிலா இடம்பெயர்ந்தார்.

இரவு முழுவதும் தூங்காமல் மரங்களின் மேலோ, கட்டட இடுபாடுகளுக்குப் பின்னாலோ லுத்மிலா மறைந்திருப்பார். அவரது மோசின் நகன்ட் துப்பாக்கியும் தூங்காமல் எதிரிகளை எதிர்நோக்கி விழித்திருக்கும்.

லுத்மிலா மறைந்திருக்கும் இடத்தில் இருட்டில் இருந்து ஒரு சின்ன சத்தம் கேட்டாலும்கூட ஜெர்மன் ராணுவம் துணுக்குறும். லுத்மிலா என்ற பெயரைக்கேட்டாலே நாஜி ராணுவத்துக்கு கிலியடிக்கும்.

லுத்மிலாவின் துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 257 ஆனபோது அவர் லெப்டினண்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

விரைவில் அவரது குறிதவறா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.

அதாவது லுத்மிலா போலவே குறிதவறாமல் சுட சிறப்புப்பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள்.

சிலநேரங்களில் எதிரிப்படையின் ஸ்னைப்பர் வீரர்களுடன் லுத்மிலா கண்ணாமூச்சி ஆடுவார்.

இந்த மரண விளையாட்டு மணிக்கணக்கில் நீடிக்கும். ஒரு ஜெர்மன் ஸ்னைப்பருக்கும் லுத்மிலாவுக்கும் இடையே நடந்த போட்டாபோட்டி 3 நாள்களுக்கு நீடித்தது. முடிவில் லுத்மிலாவுக்கே வெற்றி.

இந்த மரண விளையாட்டின்போது பல துன்பங்களை லுத்மிலா சந்திந்திருக்கிறார். 4 முறை காயம் அடைந்திருக்கிறார்.

தனக்கு உதவியாக வந்த ஒரு இளம் ஸ்னைப்பர் வீரர் ஒருவர் வந்த முதல் நாளே பலியான துன்பத்தை லுத்மிலா பார்த்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நாஜி ஜெர்மன் ராணுவத்துக்கு லுத்மிலா என்ற பெயர் உதறலை ஏற்படுத்தத் தொடங்கியது.

இரு படையினருக்கும் பொதுவான இடத்தில் நடமாட ஜெர்மன் வீரர்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். காரணம் ஒரு சின்னத் தவறுகூட ராணுவத்தினரின் உயிரைக்குடித்து விடும்.

லுத்மிலாவுக்கு ரஷியா வைத்திருந்த பெயர் மரண மங்கை. அதேநேரம் ஜெர்மன் ராணுவத்தினர் அவருக்கு வைத்திருந்த பெயர் ‘நரகத்தில் இருந்து வந்த தேவி.

ஒருமுறை ஜெர்மன் ராணுவத்தினர் ஒலிப்பெருக்கி மூலம் லுத்மிலாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

‘லுத்மிலா வா. எங்கள் பக்கம் வந்து சேர்ந்துவிடு. நிறைய சாக்லெட்(!) தருகிறோம்.

கூடவே ஜெர்மன் ராணுவத்தில் உனக்கு மிகப்பெரிய பதவி காத்திருக்கிறது’ இப்படி லுத்மிலாவுக்கு எதிரிகளிடம் இருந்து அழைப்புகூட வந்தது.

லுத்மிலா அசைந்து கொடுக்கவில்லை. பிறகு ஜெர்மன் ஒலிப்பெருக்கிகள் இப்படி மிரட்டின.

’நீ மட்டும் கையில் சிக்கினால் உன்னை 309 துண்டுகளாக்கி காற்றில் பறக்க விட்டுவிடுவோம்’.

ஆக, லுத்மிலாவின் கைகளால் 309 நாஜி ராணுவத்தினரின் உயிர்கள் பறிபோய் இருந்தது அந்த மிரட்டல் மூலம் உறுதியாகி விட்டது.

(கதை ரொம்ப பெரிதாக நீள்கிறது. தொடரும் போட்டு அடுத்த பதிவில் மிச்ச கதையைச் சொல்வோம்.)
 
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like