அமெரிக்காவுக்கு வரும் அதிகப்படியான இந்தியர்களால் தங்கள் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் சொல்வதைப் போலவே பாகிஸ்தானில் இருந்து வருபவர்களால் தங்கள் நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சவுதி அரேபியா சொல்கிறது.
ஆனால், இரண்டுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் பெரும்பாலும் ஐடி படிப்பை முடித்துள்ள பட்டதாரிகள்.
ஆனால், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சென்றிருப்பவர்கள் பெரும்பாலும் பிச்சைக்காரர்கள்.
ஹெச்1பி விசாவில் வரும் இந்தியர்களால் தங்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே என்பது அமெரிக்க அரசின் கவலை.
அதேபோல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள பிச்சைக்காரர்களால் தங்கள் நாட்டின் இமேஜ் பாதிக்கப்படுமே என்பது சவுதி அரேபிய அரசின் கவலையாக இருக்கிறது.

இஸ்லாமியர்களின் புனிதமான இரண்டு நகரங்களைக் கொண்டுள்ள சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரையாக பணக்காரர்கள் பலரும் வருவார்கள் என்பதால்,
அவர்களிடம் பிச்சை கேட்டால் போடுவார்கள் என்ற ஏண்ணத்தில் ஆண்டுதோறும் பல பிச்சைக்காரர்கள் அந்நாட்டுக்கு சென்றுகொண்டு இருக்கிறார்கள்.
தங்கள் நாட்டுக்கு பிச்சைக்காரர்களை அனுப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசை சவுதி அரேபிய அரசு பலமுறை கேட்டும் இது தொடர்ந்து வருகிறது.
இதனால் இப்போது சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 56,154 பிச்சைக்காரர்களைக் கண்டறிந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் நாடு கடத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
பிச்சைக்காரர்களை நாடு கடத்தியிருப்பதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தால் பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வர விசா கேட்டு விண்ணப்பித்துள்ள பலருக்கும் விசாவை மறுத்துள்ளது.
சவுதி அரேபியா மட்டுமின்றி குவைத், அஜர் பைஜான், பஹரின், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பிச்சை எடுப்பதற்காக பலர் செல்வதாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
தொழிலாளிகள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்ல விசா வாங்கும் சில பாகிஸ்தானியர்கள்,
அந்நாடுகளில் பிச்சை எடுப்பதால் பாகிஸ்தானின் இமேஜ் சர்வதேச அளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு சொல்வது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்காசிய நாடுகளில் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
பிச்சை எடுத்ததாகக் கூறி துபாயில் இருந்து 6,000 பாகிஸ்தானியர்களும், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில் பிச்சைக்காரர்கள் வெளிநாட்டுக்கு போய் தங்கள் மானத்தை வாங்குவதை தடுப்பதற்காக விமான நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான் அரசு.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மக்களுக்கு வேலை வழங்க போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் பாகிஸ்தானில் பிச்சை எடுப்பது ஒரு முக்கிய தொழிலாக மாறி வருவதாகவும்.
மொத்தமுள்ள 23 கோடி பேரில் 3 கோடியே 80 லட்சம் பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தால் வாழ்ந்து வருவதாகவும் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான ‘டான்’ செய்தி வெளியிட்டுள்ளது.
என்னதான் பிச்சைக்கார நாடாக இருந்தாலும், ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் செலவழிப்பதை மட்டும் பாகிஸ்தான் நிறுத்துவதாக தெரியவில்லை.
– பி.எம்.எம்