பிரபஞ்சனைப் போல் உண்மையாக வாழ்வது எளிதல்ல!

எழுத்தாளர் தமயந்தி

பிரபஞ்சனுடைய என்னுடைய நட்பு மிகவும் பிரத்தியேகமானது. அவரைப்போல மிகவும் உண்மையாக வாழ்வது மிகவும் சிரமமானது என்பதை வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் நான் புரிந்து கொண்டுள்ளேன்.
 
பிரபல பத்திரிகையில் ஒரு பெண்ணின் முதுகைப் போட்டு இது யாருடைய முதுகு என்று கேட்ட பிறகு அவர் ராஜினாமா செய்து விட்டதாக ஒரு முறை சொன்னார்.
 
அவருக்காக நிகழ்ந்த விழாவில், “எனக்கு மட்டும் இருவேளை சாப்பாடு வசமாக கிடைத்திருந்தால் நான் இன்னும் நல்ல கதைகளை எழுதியிருப்பேன்” என்று சொன்னார்.
 
ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் என்னை அவர், “வெறும் எழுத்தாளராக மட்டும் இருக்காதீர்கள் தமயந்தி” என்று மறுபடி மறுபடி சொன்னது இப்போது அதிகமாக என்னில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
 
எத்தனையோ புத்தகங்கள் எழுதியபோதும் எப்போதும் எனக்கு போதுமான ராயல்டி கிடைத்ததே இல்லை. பெரிதான ஆதரவும் எந்த பதிப்பாளரிடமும் இருந்தும் இல்லை.
 
பணத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில் கதைகள் எழுதுவது என்பது எனக்கு குறைந்துவிட்டது என்பது தான் உண்மை.
 
படித்து முடித்தவுடன் கிடைத்த கல்லூரி பேராசிரியர் வேலையை எல்லாம் நான் விட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று இப்போது எனக்கு புரிகிறது.
 
என்னுடைய சினேகிதி காலையில் போன் செய்து “அன்பு கின்பு என்று தயவு செய்து பினாத்தாதே – அந்த அன்பு உனக்கு சோறு போடாது. பணம் என்று சொல் – அப்போது உனக்கு அன்பு கூட கிடைக்கும்” என்றாள்.
 
அவள் சொன்னதற்கும் பிரபஞ்சன் என்னிடம் பலமுறை வற்புறுத்தியதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை. ஆனால், நிச்சயமாக அதனுள் ஏதோ ஒன்று நரம்பிழை தொடர்பு உள்ளது.
 
ஒருமுறை 2011-ல், 80 ஆயிரம் ரூபாய் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து பிரபஞ்சன் விலகினார். அப்போது என்னை, அவர் வீட்டிற்குச் சென்று ஏன் விலகினார் என்று கேட்கச் சொன்னார்கள்.
 
அப்போது “எனக்கு தட்டச்சு செய்யத் தெரியாது. ஆனால், நன்றாக எழுதுவேன் இல்லையா – ஆனால், அந்த எழுத்தை என்னுடன் என்னுடைய அணியில் இருந்தவர் மதிக்கவில்லை.
 
மதிப்பில்லாத இடத்தில் நான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இருப்பதில் என்ன லாபம் தமயந்தி? இப்போது நான் சந்தோஷமாய் இருக்கிறேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள்“ என்று எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
 
பிரபஞ்சன் பிரபஞ்சன் தான்.
 
– நன்றி: எழுத்தாளர் தமயந்தி முகநூல் பதிவு.
vels
You might also like