சாதிப் பெருமை – நூல் அறிமுகம்
* பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்திலிருந்து சுதந்திர இந்தியாவின் காலம் வரை சாதி அமைப்பு எவ்வாறு இறுக்கமாக கட்டமைக்கப் பட்டிருந்தது என்ற உண்மையையும்,
சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்வதற்காக – ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூலை மனோஜ் மிட்டா படைத்துள்ளார்!
* ஹைதராபாத்தைச் சேர்ந்த நூலாசிரியர் மனோஜ் மிட்டா ஒரு மூத்த பத்திரிகையாளர்.
டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த படுகொலை பற்றி – When a Tree shock Delhi என்ற நூலையும், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் குறித்து – Modi and Godhra : The Fiction of Fact finding என்ற நூலையும் எழுதிப் பிரபலமடைந்தவர்!
* சென்னையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஆர். விஜயசங்கர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து குழுமத்தின் ஃபிரண்ட் லைன் இதழின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
திராவிட இயக்கம், சங்பரிவாரின் அரசியல், ஆர்எஸ்எஸ் அபாயம் போன்ற தலைப்புகளில் நூல்களையும் மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்து பிரபலமடைந்தவர்!
* மனோஜ் மிட்டா தனது முகவுரையில் இந்த நூலை எழுதியதற்கான நோக்கத்தை இவ்வாறு விளக்கியுள்ளார் :
“சாதியைப் பற்றிய எழுத்துக்களில் இந்தியாவைப் பீடித்திருக்கும் இந்தப் பாகுபாடு உணர்வு குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது அல்லது ஆராய்ந்து கண்பிடிக்காமலேயே இருக்கிறது!” என்று அக்கறையோடு கூறியுள்ளார்.
அதை சரிசெய்ய அந்தப் பணியை தானே மிகவும் சிறப்பாகவும் சின்சியராகவும் செய்து முடித்திருக்கின்றார்!
* நூலின் முகப்புரையாக ‘சாதிக்கெதிரான போராட்டங்களில் சட்ட ரீதியான மைல் கற்கள்’ என்று தலைப்பிட்டு நேர்த்தியான பட்டியலொன்றைத் தந்துள்ளார்.
நூலை எழுதியவர் ஒரு சட்ட வல்லுனர் என்பதை புரிந்துகொள்ளும்படி அந்த பட்டியலில் ஏறக்குறைய 83 தகவல்கள் தரப்பட்டுள்ளன!
அவற்றிலிருந்து ஒரு சிலவற்றையாவது நினைவில் வைத்துக் கொள்வதற்காக இதோ :
1795 : பிரிட்டிஷ் அரசு மரண தண்டனையிலிருந்து பிராமணர்களுக்கு விலக்கு அளித்தது.
1816 : சிறு குற்றங்களில் ஈடுபடும் கீழ் சாதியினருக்கு காட்டுமிராண்டித்தனமான தண்டனை – கால்கள் ஸ்டாக்ஸ் எனப்படும் மரச்சட்டத்திலிருக்கும் துவாரங்களுக்குள் அசைக்க முடியாதபடி பொருத்தி வைக்கப்படும்.
1829 : உயர் சாதியினரின் செல்வாக்கை மீறி வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டையேறுதல் (சதி) என்ற அவமானகரமான நடைமுறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றினார்.
1858 : பொது இடங்களில் கீழ் சாதிப் பெண்கள் தம் மார்பகங்களை சீலையால் மறைக்கக் கூடாது என திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் தடை விதித்தார்.
1890 : பிராமண பூசாரிகளையும், சடங்குகளையும் தவிர்த்த திருமண முறையை ஜோதிபா ஃபூலே அறிமுகப்படுத்திய பின்னணியில், அந்த திருமணங்களுக்காக உள்ளூர் பிராமண பூசாரிக்கு அதற்காக கட்டணம் பெறும் உரிமை இல்லை என பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
1947 : கோயில் நுழைவு விவகாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் சட்டத்தை மெட்ராஸ் மாகாண அரசாங்கம் நிறைவேற்றியது. கோயில் நுழைவை ஒரு பொது உரிமையாக்கியது.
1953 : பிராமண பூசாரிகளும் சடங்குகளும் இல்லாத சுயமரியாதை திருமணம் என்று பெரியார் அறிமுகப்படுத்திய வழக்கம் செல்லாது என மெட்ராஸ் உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.
1967 : தமிழ்நாட்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு சுயமரியாதை திருமணத்தை இந்து திருமண சட்டத்தில் ஒரு பிரிவாக்கி அங்கீகாரம் வழங்கியது.
1976 : 1954ல் அம்பேத்கர் செய்த பரிந்துரையையும் இணைத்து தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மறு சீரமைத்தது இந்திரா காந்தி அரசு.
1987 : ராஜஸ்தானில் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடன்கட்டையேறிய போது தேசமே கொந்தளித்தது.
இதற்கு எதிர்வினையாக ராஜீவ் காந்தி அரசு உடன்கட்டை ஏற்றுவதை கொலைக் குற்றமாக்கியதோடு மட்டுமின்றி அதனைத் தூண்டியவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை உருவாக்கியது !
இந்த பட்டியலைப் படிக்கும் போது நமது நாட்டின் ‘சாதிப் பெருமை’ உலகெங்கும் ஒரு அவமானகர காரியமாக;
அநாகரிக காரியமாகவே கருதப்பட்டிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை!
* மனோஜ் மிட்டா இந்த நூலை ஐந்து தொகுதிகளாகவும் அதில் பல பகுதிகளாகவும் பிரித்து கட்டுரைகளைத் தகவல்களோடு படைத்துள்ளார்!
அந்த ஐந்து தொகுதிகள்:
1) ஆரம்ப கால சட்டங்கள்.
2) அசுத்தம் பெரும்பான்மை.
3) தடுக்கப்பட்ட வழிகள்.
4) கோவில் நுழைவு.
5) வன்முறைக்குப் பாதுகாப்பு.
சில பகுதிகளின் சாம்பிள் :
* கீழ் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தண்டனை என்ற கட்டுரை – ஈவிரக்கமற்ற ஸ்டாக்ஸ் என்ற தண்டனை பற்றிய வரலாற்றைச் சொல்கிறது !
* மார்பகங்களை மறைக்கும் சிறப்புரிமை என்ற கட்டுரை – கீழ் சாதிப் பெண்களுக்கு எதிராக இருந்த நடைமுறையின் அவலத்தை விவரிக்கிறது.
ஷானார்கள் என்ற நாடார் பெண்கள் தோள் சீலை (ரவிக்கை) அணிய அனுமதி மறுக்கப்பட்ட கொடூரம் பற்றிய தகவல்கள்!
* பெண்களை உயிரோடு எரிப்பதற்கான சண்டை என்ற கட்டுரை – உடன்கட்டை ஏறுதல் (சதி) என்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தைப் பற்றியும், பிரிட்டிஷ் ஆட்சி அதை தடை செய்தது பற்றியும் அதன் பின்னும் சுதந்திர இந்தியாவிலும் சதி அரங்கேறியது பற்றியும் விவரிக்கிறது!
* ஒரு பிராமணர் இல்லாத திருமணம் என்ற கட்டுரை – பம்பாய் மாகாணத்தில் நடைபெற்ற திருமணங்கள் பற்றியும் சீர்திருத்த திருமணம் அல்லது சுயமரியாதை திருமணம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது!
* மேல் சாதியில் திருமணம் செய்யும் மீறல் என்ற கட்டுரை – உயர் சாதிப் பெண்ணுக்கும் கீழ் சாதி ஆணுக்குமிடையே நடக்கும் திருமணங்கள் (பிரதிலோமா) பற்றியும்,
கீழ் சாதிப் பெண்ணுக்கும் மேல் சாதி ஆணுக்குமிடையே நடைபெறும் திருமணங்கள் (அனுலோமா) பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விவரிக்கிறது !
* நீதிபதிகள் வெகுஜனப் படுகொலையாளர்களை விடுவித்தபோது என்ற கட்டுரை – தமிழகத்தை சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் மனதில் பெரிய வலியை சுமந்து கொண்டு அவமானப்படும் கீழ் வெண்மணி படுகொலை பற்றிய விவரங்களும் விளக்கங்களும் கொண்டது !
இந்த நூலைப் படிப்பவர்கள் இந்த கட்டுரையை மட்டுமாவது அவசியம் படித்து, உணர்ந்து, மற்றவர்களுக்கும் அந்த நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் !
* மெட்ராஸ் மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த கீழ் வெண்மணி என்ற சிறு கிராமத்தில், கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காக 42 தலித்களை மிராசுதார் கும்பல் ஒன்று உயிரோடு தீ வைத்து எரித்து சாம்பலாக்கியது!
அந்த சம்பவம் சுதந்திர இந்தியாவின் முதல் சாதிக்கலவரம் என்ற சரித்திரமாகியது!
* விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காகப் போராடினார்கள். அவர்கள் சாதியால் தலித்தாகவும் இருந்தார்கள்.
அவர்களது போராட்டம் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மிராசுதாரர்களுக்கு எதிராக இருந்தது. போராட்டம் முற்றியது.
மிராசுதாரர்கள் வெளியூரிலிருந்து வேலை செய்ய ஆட்களை கூட்டி வந்தார்கள் !
* நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரது ஆதரவாளர்களும் போராடும் தலித்களுக்கு எதிராக களத்தில் இறங்கி, கலவரம் செய்து,
உயிருக்குப் பயந்து ராமையாவின் குடிசைக்குள் ஒளிந்திருந்த 42 தலித் விவசாயக் கூலிகளை அந்த இரவில் (25.12.1968) தீ வைத்து எரித்து சாம்பலாக்கினார்கள்!
* நாடே உலுக்கிய இந்த துயர நிகழ்வுக்குப் பிறகு வழக்கம் போலவே – வழக்கு, விசாரணை, வாய்தா, தீர்ப்பு என்று எல்லாம் மெதுவாக நடந்தேறியது !
* தஞ்சாவூர் கோட்ட நீதித்துறை அமர்வின் நடுவர் சி. எம். குப்பண்ணன் 30.11.1970 அன்று வழங்கிய தீர்ப்பில் – குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் மீதும் கொலைக் குற்றத்துக்காக தண்டனை வழங்கப்படவில்லை!
ஒரு சிலருக்கு வேறு குற்றங்களுக்கு மட்டும் தண்டனையளித்தார்!
* இந்த தீர்ப்பு இப்படியென்றால், மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கின் தீர்ப்போ – கொலைக் குற்றம் தவிர பிற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட எட்டு பேரையும் கூட விடுவித்தது.
தீர்ப்பை எழுதிய நீதிபதி மகாராஜன்,
“அந்த அப்பாவி நபர்களைக் கொல்வது கலவரம் செய்த கும்பலின் பொதுவான நோக்கத்தில் இருந்ததில்லை”… என்று திட்டம் போடும்போது நீதிபதியே பக்கத்திலிருந்து பார்த்தது போல எழுதி நீதியையே வெட்கப்பட செய்து விட்டார் !
* இது மட்டுமா ?
தமிழக அரசு 1975ம் ஆண்டு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் உச்சநீதி மன்றம் 01.11.1990 அன்று வழங்கிய தீர்ப்பில் – கீழேயுள்ள இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதை சுட்டிக் காட்டி தன் கையை கழுவி விட்டது !
* இந்த வழக்கில் வெறும் நான்கு பக்கங்களில் தீர்ப்பு வழங்கியதாகவும் உச்சநீதிமன்றம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டது என மனோஜ் மிட்டா வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்!
இப்படி பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நம்மை உலுக்குகிறது!
* சாதிப் பெருமை பற்றி இவ்வளவு பெரிய, விரிவான, விளக்கமான ஆவணம் போன்ற நூல் இதுவரை வந்ததில்லை! அதற்காகவே ஸ்பெஷலான பாராட்டுகள்!
இந்த நூலை மிகுந்த சமூக அக்கறையோடு, அர்ப்பணிப்போடு, கடின உழைப்போடு, கடமையுணர்வோடு படைத்த நூலாசிரியர் மனோஜ் மிட்டாவுக்கும் மிகச் சிறப்பாக தமிழில் தந்த தோழர் ஆர். விஜயசங்கருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
சாதிப் பெருமை நூலை எழுதி, சிறப்பாக சாதித்தப் பெருமையை அடைந்து விட்டீரகள் தோழர்களே! வாழ்த்துகள்!
****
சாதிப் பெருமை (இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்)
– மனோஜ் மிட்டா
– தமிழில்: ஆர். விஜயசங்கர்
– எதிர் வெளியீடு
– முதல் பதிப்பு – 2025
– பக்கங்கள் 743
– விலை: ரூ. 899/-
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.