பிர்சா முண்டா: பழங்குடி மக்களின் கதாநாயகர்!

பிர்சா முண்டா. 25 வயது வரையே வாழ்ந்து மறைந்த பழங்குடியினப் போராளி.

இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பழங்குடியின தலைவரின் படம் இவருடையதுதான்.

ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி விமான நிலையம் இவரது பெயரால்தான் அழைக்கப்படுகிறது.

இவரது பெயரில் பல்கலைக்கழகம், விளயைாட்டு வளாகம், தொழில்நுட்ப மையம் அமையப்பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

அண்மையில் இவரது பிறந்த நாளன்று இவருக்கு இவர் பிறந்த ஊரில் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது.

இவரது பிறந்தநாளை தேசிய பழங்குடியினர் நாளாக மத்திய அரசு அறிவித்தும் உள்ளது.

இவருக்காக மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டுள்ளது.

இவரது வரலாற்றைத் திரைப்படமாக்க பெரும் முயற்சிகள் நடந்துவருகிறது.

இருபத்தைந்து வயதில் இறந்து போன இவர் இவ்வளவு பெரிய கவுரவங்களைப் பெற அப்படி என்னதான் செய்தார்.

பார்க்கலாம் வாருங்கள்.

இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலிஹதி கிராமத்தில் 1875-ம் ஆண்டு வறுமையான பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர்.

காட்டுப் பகுதியில் ஆடு மேய்ப்பதுதான் இவரது சிறு வயது வேலையாக இருந்தது. படிப்பதற்கு வழியுமில்லை, அனுமதியுமில்லை, வசதியுமில்லை.

தங்கள் சொந்த நிலத்தை ஆங்கிலேயேர்களின் துணையோடு அபகரித்துக் கொண்ட பண்ணையார்கள் போதிய ஊதியமும், தேவையான உணவும் கொடுக்காமல் அடிமைகளைவிட கேவலமாக நடத்தி வந்ததற்கு ஒரு விடிவு காண எண்ணினர்.

இழந்த நிலத்தை மீண்டும் பெறுவதற்காக ‘நில மீட்பு’ப் பேராட்டத்தை கையிலெடுத்தார் அப்போது அவருக்கு வயது பத்தொன்பதுதான்.

நாம் உழும் நமது நிலம் நமக்கே சொந்தமாக வேண்டும், அதற்கு துணை நிற்கும் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று உரத்து முழக்கமிட்டார்.

இவரது பேச்சுக்கு பழங்குடியினர் கட்டுப்பட்டனர், இவரை தம் மண்ணின் தந்தை (தர்த்தி அபா) என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர்.

நிலம் வைத்துள்ள பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி வரிகொடுக்கமாட்டோம் என்று போராடினார். இதுதான் இந்தியாவில் பழங்குடியின மக்கள் நடத்திய முதல் போராட்டம்.

பண்ணையார்களை அடக்கவேண்டும் ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டும் என்ற இவரது குரல் ஒங்கி ஒலித்தது.

எதிரே நிற்கவோ, நிமிர்ந்து பார்க்கவோ, சத்தமிட்டு பேசவோ தெம்பும் திராணியுமின்றி இருந்த ஒரு கூட்டம் திடீரென தமக்கு எதிராக குரலை உயர்த்துகிறது என்றால் யாருக்குதான் பிடிக்கும்.

இத்தனைக்கும் காரணமான பிர்சா முண்டாவை அடக்கி ஒடுக்க சட்டத்தையும் ஆயுதத்தையும் எடுத்தது அன்றைக்கு நாட்டை ஆண்ட ஆங்கிலேயே அரசு.

காடுகள்தான் பழங்குடியினர் வீடு என்பதை அறிந்து, காடுகளுக்கான சிறப்புச் சட்டம் ஒன்றை ஆங்கிலேயே அரசு கொண்டுவந்தது.

அந்த சட்டத்தின்படி காட்டின் ஒவ்வொரு சதுர அடியும் அரசுக்கே சொந்தம் என்று சொல்லியது.

அதன் அடிப்டையில் காட்டில் உள்ள பழங்குடியின மக்களை வெளியேற்றி அவர்களை நாதியற்றவர்களாக்க வேண்டும் என்று எண்ணியது.

ஆனால், இதை பிர்சா முண்டா கடுமையாக எதிர்த்ததுடன் காட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயே அதிகாரிகள், காவலர்களை வில் அம்பு கொண்டு கொரில்லா போர் முறையில் குழுவோடு சேர்ந்து தாக்கி விரட்டியடித்தார். பலர் பலியாயினர். எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தினார்.

இவர் நடத்திய இந்த போர் ‘உல்குவான் போர்’ என்று இப்போதும் பழங்குடியின மக்களிடம் தீரத்துடன் பேசப்படுகிறது.

இந்த உல்குவான் குழுவில் இருப்பவர்கள் யாரும் பொய் பேசக்கூடாது, மது அருந்தக் கூடாது, உடலையும் மனதையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டம் என்பது போன்ற கொள்கைகளை வகுத்து வைத்திருந்தார்.

இவரது இந்த போர் முறை தந்திரத்தால் ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி இவர்களது நிலத்தை பிடுங்கி வைத்திருந்தவர்களும் பயந்து போயினர். நிலத்தைத் திரும்பக் கொடுத்தனர்.

இதனால் பழங்குடியின மக்களின் ஆதரவு பல மடங்கு பிர்சா முண்டாவிற்கு பெருகிறது. தங்களுக்கு எதிரான சட்டங்களை, அதிகாரிகளை, நில உரிமையாளர்களை எதிர்த்து நியாயம் கேட்கலாயினர்.

வெகுண்டெழுந்த ஆங்கிலேயே அரசு பிர்சா முண்டாவிற்கு எதிராகப் போர்ப் பிரளயமே செய்தது. அவரை கைது செய்து சித்திரவதை செய்தே தீரவேண்டும் என்பதற்காக அவரது தலைக்கு விலை அறிவித்தது. அவரைத் தேடி அலைந்தது.

பிர்சா முண்டாவை நெருங்கும் போதெல்லாம் பழங்குடியின மக்கள் அரணாக இருந்து தடுத்தனர். அவருக்காக பாய்ந்து வந்த தோட்டக்களைத் தங்கள் நெஞ்சில் தாங்கிக் கொண்டு இறந்தனர். இப்படி நானுாறுக்கு மேலான பழங்குடியின மக்கள் உயிரைவிட்டனர்.

உயிரைக் கொடுத்தும் காப்போம் என்று தொண்டர்கள் சொல்லும் சொல்லுக்கு உதாரணமாக விளங்கினார்.

ஒரு கட்டத்தில் இவரை பிரிட்டிஷார் கைது செய்தனர். இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்து சித்தரவதை செய்தனர்.

இந்த இரண்டு வருடங்களும் பழங்குடியின மக்கள் பிர்சா முண்டாவின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.

இனி சிறையை நினைத்தே பார்க்கக்கூடாது எனுமளவிற்கு அவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெளியே போனால் அடங்கிக் கிடப்பார் என்று எண்ணி அவரை விடுதலை செய்தனர்.

ஆனால், அவிழ்த்துவிடப்பட்ட சிங்கம் போல அதற்கு பிறகுதான் பிர்சா முண்டா கர்ஜித்தார். வெறிகொண்ட வேங்கையாக ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டே விரட்டவேண்டும் என்று முழங்கினார்.

அதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். அலை அலையாய் தன் பின் திரண்ட பழங்குடியின மக்களின் நலனில் யாரும் கைவைக்கவே அஞ்சும் சூழலை ஏற்படுத்தினார்.

இப்படியேவிட்டால் தங்களை சுத்தமாக கருவறுத்துவிடுவார், நம்மைத் துடைத்து நமது சொந்த மண்ணிற்கு திருப்பி அனுப்பிவிடுவார்.

எதற்கு துணிந்தவர் இந்த பிர்சா முண்டா இவரை இனியும் விட்டுவைக்கக்கூடாது என்று முடிவு செய்து, பல்வேறு பொய் வழக்குகள் போட்டு மீண்டும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் வைத்து என்ன மாதிரியெல்லாம் சித்ரவதை செய்தார்களோ தெரியவில்லை?

அடுத்த சில மாதங்களில் காலரா நோயால் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார் என்று ஒரு கதையைச் சொல்லி பிர்சா முண்டாவின் கதையை முடித்தனர்.

தேக்கைவிட உறுதியான தேகமும் தீரமும் வீரமும் கொண்ட அவரா காலாராவால் இறந்தார். இருக்கவே இருக்காது என்று வெகுண்டு எழுந்த பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார், வீட்டிற்கு ஒருவர் பிர்சா முண்டாவாக உருவெடுத்தனர்.

இதன் காரணமாக காடுகளுக்கான சிறப்புச் சட்டத்தை அரசு ரத்து செய்தது. கூடவே பழங்குடியின மக்களின் நிலம் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் வேறு யாரும் பயன்படுத்த முடியாது கூடாது என்றும் சட்டமியற்றியது.

இதுதானே நாம் வணங்கும் பிர்சா முண்டாவின் ஆசை, ஆதங்கம் எல்லாம் என்று கண்ணீரால் நன்றி சொன்ன மக்கள், அன்று முதல் இன்று வரை பிர்சா முண்டாவை தங்கள் குலதெய்வமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு நம் நாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைவர்களும், பின்னாளில் பிர்சா முண்டா போட்ட விதையே தங்களது போராட்டத்தின் கரு என்றும் பேசினர்.

இதுபோன்ற காரணங்களால்தான் இன்று நாடு முழுவதும் அவரது பெயர் உச்சரிக்கப்படுகிறது. உச்சரிக்கப்படட்டும், உச்சரிக்கப்பட வேண்டும்.

  • எல்.முருகராஜ்

நன்றி: தினமணி

You might also like