ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விமானத்தில் வெளியூர் செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்தார்கள்.
திடீரென்று முக்கியமான வேறு வேலையின் காரணமாக கலைவாணரால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. அதை மறந்து கலைவாணர் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டார்.
மறுநாள் அவர் போக இருந்த விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து அதிலிருந்த பயணிகள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்று செய்தி வந்தது.
மிகுந்த ஆதங்கத்தோடு சிலர் வந்து, “நல்ல வேளை அண்ணே, நீங்க அந்த விமானத்திலே போகாதது நல்லதாப்போச்சு. கடவுள் காப்பாத்தினார்” என்றார்கள்.
அதற்குக் கலைவாணர், “அந்தக் கடவுள் அவங்களைக் காப்பாத்தலியே! நானும் போயிருக்கணும்” என்றார் கலைவாணர்.
பதற்றத்துடன் வந்த நண்பர், “ஏண்ணே அப்படிச் சொல்றீங்க…!” என்று கேட்டார்.
அதற்குக் கலைவாணர், “நான் போயிருந்தா அவங்களையெல்லாம் காப்பாத்தியிருப்பேன். ஏன்னா விமானமே விழுந்திருக்காது. கடவுள் என்னைக் காப்பாத்துறதுக்காகவாச்சும் அவங்களையும் காப்பாத்தியிருப்பாரே!” என்றாராம்.
– முகநூல் பதிவு