கட்சி வேறுபாடுகளை மீறி பலருடன் இருந்த நட்பு!

தனது நண்பர்களைப் பற்றி - கா காளிமுத்து

முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் நினைவு நாளையொட்டி சிறப்புக் கட்டுரை.
***
 
“என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம்.
 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு கிராமத்தில் என்னுடன் பழகின நண்பர்கள் இப்போதும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.
 
எங்க ஊர் கோவில் பூசாரியாக இருக்கும் காளிமுத்து என்பவர் அப்போதும், இப்போதும் நண்பர்.
 
பள்ளிக்கூடப் பருவத்தில் என்னுடைய முக்கியமான நண்பர் ஆசிரியராக இருக்கிற இளவேனில். அவருடைய சொந்தப் பெயர் ராபர்ட் மார்ட்டின். அவரும் நானும் பக்கத்துக் கிராமங்களில் படித்தோம்.
 
ஞாயிற்றுக் கிழமைகளில் தான் சந்திப்போம். அதற்குள் அந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். அப்படியொரு நெருக்கம். இப்போது அவ்வளவாகத் தொடர்பில்லா விட்டாலும் அவர் மறக்க முடியாத நண்பர்.
 
கல்லூரிக் காலத்தில் எனக்கு நெருக்கமான நண்பர் கவிஞர் நா.காமராசன். என்னைவிட அவர் ஒரு வருடம் சீனியராக இருந்தாலும் நெருங்கிப் பழகினோம்.
 
எங்களை இணைத்தது திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம். இருவருக்குமே பரஸ்பரம் ஒருவித அன்பு, மரியாதை.
 
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நானும் இவரும்தான் அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவை எரித்து சிறைக்குப் போனோம். இருவருடைய வீடுகளுக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தோம். இருந்தும் எப்படி மனவேறுபாடு வந்தது என்று தெரியவில்லை.
 
1971-ல் தேர்தல் நடந்தபோது அவரும் சீட் கேட்டார்; நானும் கேட்டேன். அதில் எனக்கு சீட் கிடைத்தது. சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார்கள்.
 
காமராசனுக்குக் கிடைக்கவில்லை. அதிலிருந்து ஏனோ நட்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்விட்டது.
 
“என் நாசித் துவாரங்களில் ஒன்றில் எனக்காகச் சுவாசிக்கிறேன்; ஒன்றில் உனக்காகச் சுவாசிக்கிறேன்” என்றெல்லாம் எனக்குக் கடிதம் எழுதின அவரின் நட்பு அதோடு போய்விட்டது.
 
புதுமுக வகுப்புப் படிக்கும்போது எனக்கு நெருக்கமானவர் க.சுப்பு.
 
பேச்சாற்றலில் வல்லவர். கல்லூரிகளுக்கிடையிலான போட்டி கோவையில் நடந்தது. இருவரும் பேசினோம். பரிசு கிடைத்தது.
 
அதிலிருந்து அவருடன் நெருக்கமான நட்பு. 72-ல் நான் அ.தி.மு.க.வில் சேர்ந்ததிலிருந்து எனக்கு உற்ற துணையாக இருந்த டைலர் ராஜன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார்.
 
என் வாழ்க்கையையே மாற்றியமைத்த நண்பர் பிரணவம் பரமக்குடிக்காரர். அவர் என்னுடன் படித்தபோது ரொம்பவும் நெருக்கமாகக் கூட இல்லை. அரசியல் ஈடுபாட்டால் பி.யூ.சி.யில் நான் ஒரு தேர்வில் பெயிலாகிவிட்டேன்.
 
என் குடும்பத்தில் அப்போதிருந்த சூழ்நிலையில் தொடர்ந்து என்னால் படிக்க முடியவில்லை. இருந்தும் என் பெரியப்பா மூலம் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தேன்.
 
அப்போது பிரணவம் தொடர்ந்து என்னை ஏதாவது கலைக்கல்லூரியில் சேரச் சொல்லிக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். நான் உடனே பி.யூ.சி.க்குள்ள புத்தகங்களே என்னிடம் இல்லை என்று கடிதம் எழுதிப் போட்டேன்.
 
அடுத்த இரண்டாவது நாள் எனக்குப் பெரிய பார்ஸல் வந்தது. அதில் நான் பெயில் ஆன தேர்வுக்கான புத்தகங்கள்.
 
இவ்வளவு ஆர்வமாய் நண்பர் அனுப்பியிருக்கிறாரே என்று அதற்காகவே தேர்வு எழுதினேன். பாஸானேன். அதற்குப் பிறகுதான் தியாகராஜர் கல்லூரியில் சேர்ந்தேன். என் வாழ்க்கை திரும்பினது அங்கேதான்.
 
அந்தத் திருப்புமுனைக்குக் காரணமான அந்த நண்பரை நான் பிரபலமான பிறகு பலமுறை முயன்றும் இதுவரைக்கும் பார்க்க முடியவில்லை.
 
இது மாதிரி இன்னொரு நெருங்கின நண்பர் வைகோ. சென்னையில் அப்போது அவர் புதுக்கல்லூரி மாணவராக இருந்தார். அப்போது ராஜா முகமதுவுடனேயே இருப்பார். பேச்சாளராக அவர் அந்தச் சமயம் பிரபலமாகவில்லை.
 
1967-ல் தேர்தல் அறிவித்தார்கள். விருதுநகரில் காமராஜர்தான் வேட்பாளர். அப்போது “அவரை எதிர்த்து நிற்க ஒரு மாணவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்; ஜெயித்துக் காட்டுகிறோம்” என்று சொன்னோம்.
 
அண்ணாவுக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லை.
 
“அவ்வளவு பெரிய தலைவரை எதிர்த்துத் தோற்கடிக்கணும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவர் பெரிய தலைவர்”ன்னு சந்தேகத்துடனேயே மாணவராக இருந்த சீனிவாசனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
 
அவருக்குத் தேர்தலில் நான்தான் ‘பவர்’ ஏஜெண்ட். தமிழ்நாடு முழுக்கப் பல மாணவர்களுக்குக் கடிதம் எழுதித் தேர்தல் நிதி வசூலித்துக் கொண்டிருந்த நேரம். தேர்தல் வேலை செய்ய வந்தார் வைகோ. நெருக்கமானோம்.
 
என் வாழ்க்கை பற்றி அவருக்கு முழுக்கத் தெரியும்; அவரைப் பற்றி எனக்குத் தெரியும்; ரொம்பவும் மனசுவிட்டுப் பேசுவோம். அரசியலில் வேறுவேறு அணிக்குப் போனதால் தொடர்பு அவ்வளவாக இல்லையே ஒழிய, சந்திக்கிறபோது உள்ளன்போடு பேசுவார்.
 
98-ல் அதி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்கும் கூட்டணி ஏற்பட நானும் ஒரு காரணம்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் சமயத்தில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டோம்.
 
இரண்டு பேரும் சேர்ந்துதானே தி.மு.க.வை எதிர்த்துக் கிட்டிருக்கோம். ஒரே அணியாகச் சேர்ந்தால் என்ன?” என்று கேட்டார் வைகோ.
 
நான் கட்சித் தலைமையிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னேன். அதற்குப் பிறகு எங்கள் ‘அம்மா’விடம் சொன்னபோது, வைகோவை கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்கள்.
 
அப்போது எங்கள் அணியுடன் கூட்டணி சேர்வதையே ஏதோ தீண்டாத காரியம் மாதிரிப் பலர் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அதனால் வைகோ வருவதற்குத் தயங்கினார். நான் அவரிடம் தயங்காமல் வாங்க என்றுகூறி அழைத்துக் கொண்டு போனேன்.
 
காரில் என்னுடன் வந்த போதுகூட அவரது ‘பிராண்டான’ கறுப்புத் துண்டைக் கீழே வைத்து விட்டார்.
 
போயஸ் தோட்டத்துக்கு முன்னால் நிற்கிற போலீஸ் பார்த்து விடக்கூடாது என்பதற்காகக் கூச்சப்பட்டு என் மடிமீது தலைவைத்துப் படுத்துக் கொண்டார் வைகோ. அப்படித்தான் அழைத்துப் போனேன். போயஸ் தோட்டத்தில் கிடைத்த வரவேற்பில் நெகிழ்ந்து போனார்.
 
அ.தி.முக கூட்டணியில் இருந்தபோதும் வாஜ்பாய் அரசை அவர் ஆதரித்த பிறகு ஒரு மனப்பிணக்கு வந்துவிட்டது.
 
சிவகாசி தொகுதியில் இருவரும் எதிரெதிர் அணியில் போட்டியிட்ட போதும் கூட தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் இருந்த நட்பின் தரம் தாழ்ந்து விடவில்லை.
 
கூட்டணியை விட்டு அவர் பிரிந்த பிறகு அவரை நான் கடுமையாக விமர்சித்திருந்தது அவர் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது.
 
ரயிலில் ஒரு முறை சந்தித்த போது நான் அ.தி.மு.க. அவைத் தலைவரானதற்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, “என்னைப் பற்றி மேடைகளில் தாறு மாறாகப் பேசுகிறீர்களே! நான் உங்களைப் பற்றிப் பேசுகிறேனா?” என்று கேட்டார்.
 
நான் பதிலுக்கு “நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்; நான் ஒரு கட்சியின் தொண்டன். நான் அந்த நிலையில் விமர்சனம் பண்ணுகிறேன்” என்று சொன்னதை ஏற்றுக் கொண்டு போய்விட்டார்.
 
இன்றைக்கு வரைக்கும் எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்கிறது.
 
சென்னையிலுள்ள நண்பர் ஹஸன் முகமது, மதுரைப் பல்கலைக்கழகத்தின் சடகோபி, இன்னும் என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துகிற திருமங்கலம் முத்துக் குரும்பன், அலங்காநல்லூர் ஜமால் போன்ற நெருக்கமான நண்பர்களுடன் தொடர்பு இப்போதும் நீடிக்கிறது.
 
இதைச் சொல்லும்போது இன்னொன்றையும் நான் கூற வேண்டும். என் வாழ்க்கையில் முதல் நண்பராக எனக்குப் பெரும் உந்துதலைக் கொடுத்திருப்பவர் எனது தந்தையார். அவர் பெயரும் காளிமுத்துதான்.
 
கடுமையான காய்ச்சலோடு நான் படுத்திருந்தபோது சிவகாசிக்கு என்னை அண்ணாவின் கூட்டத்திற்கு அழைத்துச் செல்வார்.
 
பராசக்தி, மலைக்கள்ளன் போன்ற படங்களுக்குக் கூட்டிக் கொண்டு போவார். திராவிட இயங்கங்களின்பால் என் கவனம் திரும்புவதற்கு அவர்தான் காரணம். அபூர்வமாக நான் உணர்ந்த உறவு அது.
 
பல விதங்களில் நெருக்கமாக இருந்த நண்பர்கள் பிரிவதற்கு நான் காரணமாக இல்லாவிட்டாலும், அப்படிப் பிரிந்து சென்றது எனக்கு நெருடலான விஷயம்.
 
அரசியல் மாறுபாடுகளை மீறி பலருடன் இன்றும் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
பல நண்பர்கள்தான் என் வாழ்க்கையைத் திசைதிருப்பி, ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நட்புக்கு முக்கிய இடம் இருக்கத்தான் செய்கிறது.
 
– சந்திப்பு: மணா
You might also like