சமுதாய நோய்த் தீர்க்க குருசாமி எடுத்த ‘குத்தூசி’!

நூல் அறிமுகம்:

* தமிழ்நாட்டின் பத்திரிக்கை எழுத்துலகில் அரசியல், மதம், கடவுள், மூடநம்பிக்கை, கல்வி, ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு என்ற பல்வேறு தலைப்புகளில் நக்கலும் நையாண்டியுமாக; கேலியும் கிண்டலுமாக ஜனரஞ்சகமான கட்டுரைகளை தினமும் ‘விடுதலை’ இதழில் எழுதி வந்த எழுத்தாளர் சா. குருசாமி என்ற ‘குத்தூசி குருசாமி’!

அந்த காலத்தில் அவரது புனைப் பெயரான ‘குத்தூசி’ அவரது நிஜப் பெயரையும் மிஞ்சி மிகவும் பிரபலம் அடைந்தது!

* சாமிநாதன் குருசாமி தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் 28.06.1906ல் பிறந்தார். அவர் 1927ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தில் செயலாற்றினார்.

1946ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை விடுதலை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் மறைந்தது 11.10.1965 அன்று!

* அவர் விடுதலை ஆசிரியராக இருந்த காலத்தில் தான் – அரசியல் சட்ட திருத்தம், குலக்கல்வி எதிர்ப்பு, தேசியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, இப்படி பல்வேறு வரலாற்று சம்பவங்கள் தமிழ் நாட்டில் அரங்கேறின!

*இந்த காலக்கட்டத்தில் விடுதலை இதழில் ‘பலசரக்கு மூட்டை’ என்ற தலைப்பில் – குத்தூசி என்ற புனைப்பெயரில் குருசாமி ஏறத்தாழ 5000 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

* குத்தூசி குருசாமி எழுதிய ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இருந்து 185 கட்டுரைகளை தேர்ந்தெடுத்து (1946 முதல் 1953 வரை வெளியானவைகள்) அவற்றை‌ கால வரிசைப்படுத்தி, சிறப்பானதொரு தொகுப்பிலக்கியமாக இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நூல் வெளிவர உதவிய தோழர் வாலாசா வல்லவனுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

* குத்தூசி குருசாமி கட்டுரைகள் மட்டுமின்றி பல சிறுகதைகளையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். அவற்றில் குறிப்பிட தக்கவை :

நான் ஏன் கிறிஸ்த்துவன் அல்லன் (பெர்ட்ரண்ட் ரசல்)
மரண சாசனம் (ஜீன் மெஸ்லியர்)
பேய் பூதம் பிசாசு அல்லது ஆவி (இங்கர்சால் )

* குத்தூசியின் கட்டுரைகள் நக்கலும் நையாண்டியுமாக இருப்பதோடு சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கிறது.. பிற்காலத்தில் வந்த சோ என்ற ராமசாமி கேலியும் கிண்டலுமாக அரசியல் நையாண்டி கட்டுரைகள் எழுதினாலும் அவைகள் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே படிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன!

* ஆனால் குத்தூசியின் எழுத்துக்களோ… பகுத்தறிவுக்காக படிக்கப்பட்டன, பாராட்டப்பட்டன!

நீங்களே படித்து அறிந்துகொள்ள இரண்டு கட்டுரைகள் சுருக்கமாக உங்களுக்காக:

1) ஹிட்லருக்கு தூக்குத் தண்டனை (05.02.1948)

இந்தத் தலைப்பில் குத்தூசி எழுதிய கட்டுரை ஒரு வரலாற்றுத் தகவலை எப்படி பகுத்தறிவு பிரச்சாரமாக மாற்றுவது என்ற யுக்தியின் வெளிப்பாடாகும்.

* இரண்டாம் உலகப் போர் இறுதியில் ஹிட்லரும் அவரது காதலியான ஈவா பிரானும் 29.04.1945 அன்று தற்கொலை செய்து கொண்டார்கள்.

இருப்பினும் மியூனிக் இராணுவ நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் விசாரணை செய்ய இருப்பதாக ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தியை வைத்துக் கொண்டு குத்தூசி எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

* ‌ இந்த செய்தியைக் கேட்ட பின்பு ‘இறந்தவர்கள் மீது எவ்வாறு விசாரணை செய்ய முடியும்?’ என்று ஒரு கோஷ்டியும் ‘ஏன் முடியாது?, அவர்கள் இருவருக்குப் பதிலாக இரண்டு பொம்மைகளை வைத்து அவற்றை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டிக்க வேண்டியது தானே!’  என்று மற்றொரு கோஷ்டியாராம்.

* இந்த யோசனையைப் பிடிக்காதவர்கள் எதிரே வந்த சாமா சாஸ்திரியாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். “ஹிட்லரின் ஒரு உருவமும் வேண்டாம்… கிருவமும் வேண்டாம்! எதற்கும் இந்த தர்ப்பை இருக்கிறதே! (மூட்டையை அவிழ்த்து எடுக்கின்றார்) இது ஒன்றே போதும்!” மேலும் தொடர்கிறார் சாமா.

* “பூதான, கோதான, கன்னிகாதானம் சமர்ப்பியாமி என்று இதை ஒரு தர்ப்பையை வைத்துக் கொண்டே சொல்கிறோமே… கேட்டதில்லையா?… அது போல ஹிட்லருக்குப் பதிலாக ஒரு தர்ப்பையை தூக்கில் போடலாமே!” என்று விளக்குகிறார் சாமா சாஸ்திரி.

* “ஓய்! தர்ப்பையைத் தூக்கில் போடுவதா?… நாவை அடக்கிப் பேசும் ஓய்!… அணுகுண்டைவிட சக்தி வாய்ந்ததுங்காணும் இந்தத் தர்ப்பை!…. இதைத் தூக்கில் போட இந்த ஈரேழு லோகத்தையும் படைத்த ஈஸ்வரனாலும் முடியாது!… இதைக் கண்டால் எப்பேர்ப்பட்ட நிபுணரெல்லாம் நடுங்குகிறார்கள் தெரியுமா?

இந்த தர்ப்பையை வைத்துத்தானே இந்த நாட்டையே கைப்பற்றினோம்!… உனக்கென்ன தெரியும்?… நீ வெறும் சவுண்டிப் பார்ப்பான் தானே!… சரித்திரம் படித்திருந்தான்னோ இதெல்லாம் தெரியும்?.

மன்னாதி மன்னரையெல்லாம் மண்டியிடச் செய்திருப்பது இந்த தர்ப்பை தான் என்று தெரியுமா ஓய்?…

‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ என்றால் அர்த்தம் என்ன என்பதாவது உமக்குத் தெரியுமோ? – என்று விளாசித் தள்ளினார் ரிட்டயர்டு ஜட்ஜ் விஸ்வநாத அய்யர்!”.

* ஒரு உலகச் செய்தியை மூடநம்பிக்கை ஒழிப்பிற்காக பயன்படும்படி உரையாடல்களாக அமைத்து அதை நையாண்டியாகவும் சிந்தனையை தூண்டுவதாகவும் இந்தக் கட்டுரையை திறமையாக எழுதியது தான் குத்தூசியின் சிறப்பு!

இன்னமும் இங்கு ‘தர்ப்பை’ தான் ‘தீர்ப்பை’ வழங்கும் இடத்தில் உட்கார்ந்திருக்கிறது!

தர்ப்பைக்கு குட்பை எப்போதோ?.

****

2) ‌ காவேரியம்மாள் அழைத்துக் கொண்டாள் (23.02.1948) 

இந்தத் தலைப்பில் குத்தூசி எழுதிய கட்டுரை பார்ப்பனரல்லாதாரின் அறியாமையையும் பார்ப்பனரின் தந்திரத்தையும் விளக்குவதற்கான ஒரு கட்டுரையாக அமைந்துள்ளது.

* பார்ப்பனச் சிறுவன் கிட்டுவும் அவனது நண்பன் நமசிவாயம் என்ற பார்ப்பனரல்லாத சிறுவனும் காவேரியாற்றில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

*இருவரும் மரத்தில் ஏறி நின்றபடி நீரில் குதித்து விளையாடி மீண்டும் குதிக்கும் போது, நமசிவாயத்தை கிட்டு விளையாட்டாக தள்ளி விட்டான்.

சிறுவன் நமசிவாயம் கிளையில் அடிபட்டு காவேரியில் விழுந்து நீந்த முடியாமல் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டான்!

* அந்த செய்தியைப் பதட்டத்துடன் வீட்டுக்கு ஓடி வந்து தந்தை சாஸ்திரியிடம் பதை பதைக்க சொல்கிறான் கிட்டு! கதறிக் கொண்டே தந்தையிடம், “நமசிவாயத்து அப்பன் நடேச கவுண்டனுக்கு தெரிந்தால், என்னை அறைஞ்சு கொன்னுடுவானே!” 

* “டேய் பைத்தியமே!…. போடா… அவன்தான் ஒரு வாரமா தன் பிள்ளை (நமசிவாயம்) ஜாதகத்தைப் பார்க்கனும்னு என்னிடம் அலைஞ்சிட்டிருக்கானே!… அவன் ஜாதகத்தை எடுத்து ‘ஜலத்தினால் கண்டம் உண்டு… மரணம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்’ என்று எழுதி வைச்சுட மாட்டேனா?…

எனக்காடா தெரியாது? …

நீ வாயை மூடிண்டு இரு!… நீ தள்ளி விட்டதை யாரிடமும் சொல்லாதே!…

‘அவன் என்ன புண்ணியம் பண்ணினானோ… 18 வயதிலேயே அவனைக் காவேரியம்மாள் அழைச்சுண்டாள்! நல்ல சாவு! யாருக்கு கொடுத்து வைக்கும்!’… என்று பிரச்சாரம் செய்து விட்டாப் போறது.  

எனக்காடா தெரியாது?…

நாம் செய்வது எதுவானாலும் இந்த சூத்திரப் பசங்கள் நம்பி விடுவார்கள்!”… என்று நீட்டி முழக்கி பெரியதொரு வியக்கியானம் தந்தார் சாஸ்திரியார்!

* “அது எப்படி அவா நம்புவா? அவாளெல்லாம் படிக்கலயா? புத்தியில்லையா?”… என்று அப்பாவியாக கேட்டான் கிட்டு!

* “படிச்சுப் பாழாய் போனான்கள்!… இதோ பார்! நந்தனார் என்ற பறையன் கோயிலுக்குள் நுழைந்தானே… நம்மவா அவனை என்ன பண்ணினா தெரியுமோன்னோ?.

அது போகட்டும்… இராமலிங்கம் பிள்ளைனு (வடலூர் வள்ளலார்) ஒருத்தன் வேதம், புராணம் எல்லாத்தையும் தூஷிச்சிண்டு இருந்தானே. அவனை என்னா பண்ணினா தெரியுமோன்னா?… (சாஸ்திரி)

* “யாரும் ஒண்ணும் பண்ணலயே! ஜோதிலேன்னா கலந்துட்டா!” (கிட்டு)

* “ஜோதிலேயா? நல்லா சொன்ன! நீயே அப்படி நம்பிட்டிருந்தா!. அவன்கள் ஏன் நம்ப மாட்டார்கள்?

நமசிவாயத்தை காவேரியம்மாள் அழைச்சிண்ட மாதிரி தாண்டா!” சாஸ்திரி)

* “அப்படீன்னா யாரும் கொன்னாபிட்டா?” (கிட்டு)

* “யார் கொல்வா? … நீயேன் சொல்லேண்!”… (சாஸ்திரி)

* “ஓஹோ… நேக்கு புரிஞ்சது!” என்று அசடாக இருந்த கிட்டு அசலான கிட்டாக மாறி தெளிவு பெறுவது போன்ற அக்கிரகார உரையாடலின் ஒரு பகுதி!

இப்போது உங்களுக்கும் வள்ளலார் ஜோதியில் கலந்த மர்மமும் புரிந்திருக்கும்!.

இவ்வாறாக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இந்த தொகுப்பில் உள்ளன!

இதை ஒரு அரிய ஆவண நூலாக எண்ணி இன்றைய தலைமுறையைச் சேர்ந்தோரும் படித்துப் பயன் பெற வேண்டும்!

* இந்த நூலைப் பற்றி நச்சென்று சில வரிகள்:

மனிதர்களின் நோய் தீர்க்க மருத்துவர் குத்தினார் ஊசி!
சமுதாயத்தின் நோய் போக்க குருசாமி எடுத்தார் குத்தூசி!!

****

 
குத்தூசி குருசாமி கட்டுரைகள்!

– ஆசிரியர்: சா. குருசாமி
– விடியல் பதிப்பகம்
– முதல் பதிப்பு 2010
– பக்கங்கள்: 408
– விலை: ரூ. 400/-

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

You might also like