குமுதம் இதழில் ஒரு சிறுகதையாவது வெளிவராதா என்று நான் 1970-களில் ஏங்கிய நாட்கள் உண்டு.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அனுப்பியும் எந்த ஒரு சிறுகதையும் வெளிவராத நிலையில் 1977-ம் ஆண்டு தீபாவளியன்று என் முதல் சிறுகதையை குமுதம் இதழ் பிரசுரித்தது.
கதையின் தலைப்பு:
‘இது நியாயமா?’
அதன் பின்னர் மேலும் நான்கைந்து சிறுகதைகளை பிரசுரித்த பிறகு, இரண்டு வருடம் கழித்து ‘பலி’ என்ற தலைப்பில் நான் அனுப்பிய சிறுகதையை அட்டைப்படச் சிறுகதையாக பிரசுரித்தது.
தொடர்ந்து என் சிறுகதைகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போகவே குமுதம் இதழுக்கு தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.
11 வருடம் கழித்து, 1988-ல்தான் தொடர்கதை எழுதும் வாய்ப்பு பெற்றேன். ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை என்கிற தலைப்பில் வெளிவந்த அந்த ‘ஃபேமிலி க்ரைம் த்ரில்லர்‘ தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பின் நானே சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
1990-களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஒவ்வொரு வாரம் குமுதம் இதழை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனக்கு 1991-ம் வருடம் ஜூன் மாதம் 6-6-91 இதழை தயாரிக்கும் வாய்ப்பை அளித்தது குமுதம்.
நான் திணறிப் போனேன். ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில்,
ராஜேஷ் குமார்,
குமுதம் இதழின் 96 பக்கங்களில் உங்களுக்கு 60 பக்கங்கள்.
நீங்கள் அந்தப் பக்கங்களில் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்று எனக்கு சுதந்திரம் அளித்தார்.
குமுதத்தில் ஒரு பக்க சிறுகதையாவது வராதா என்று ஏங்கிய காலம் போய் இப்போது அறுபது பக்கங்களை எனக்கு கொடுத்திருப்பது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பேறாகவே நினைத்தேன்.
அன்றைக்கு குமுதம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த ப்ரியா கல்யாணராமன் அவர்களின் துணையுடன் குமுதம் இதழின் 60 பக்கங்களை சுவாரஸ்யமான செய்திகளால் நிரப்பினேன்.
அட்டையில் என் புகைப்படத்தோடு குமுதம் இதழ், சரம் சரமாய் கடைகளில் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து என் கண்களில் நீர் நிரம்பியது.
எஸ்.ஏ.பி அவர்கள் மகிழ்ச்சியின் மிகுதியால் என்னை சென்னைக்கு வரவழைத்து பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.
பி.கு. – நம்மிடம் ஒரு திறமை இருந்தால், அதைப் பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் அது நம்மை உச்சத்திற்குக் கொண்டு போய் நிறுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.
– எழுத்தாளர் ராஜேஷ்குமார்.