தற்காலத் தமிழ் இலக்கியவாதிகளில் யாருடைய எழுத்து தங்களுக்கு நம்பிக்கை தருவதாக உணர்கிறீர்கள்?
ஜெயமோகன் தனது அரை நூற்றாண்டு வாழ்க்கையிலேயே உச்சத்தைத் தொட்டுவிட்டார்; இருபத்திநான்கு மணிநேரமும் நிலைக்கண்ணாடி முன்னின்று தன்னைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணன் ஒரு தன்னிறைவுகொண்ட பேராசிரியர்.
கோணங்கி ஒரு maverick; இவரையொத்தவர்களையே என் மனம் அவாவுகிறது.
கவிதையில் என்.டி. ராஜ்குமார், ரியாஸ் குரானா, யவனிகா ஶ்ரீராம். இளங்கோ கிருஷ்ணன், எஸ். கயல், வெயில், சங்கரராம சுப்ரமணியன் இவர்களை வாசிக்கத் தவறுவதில்லை.
இசையைத் தேர்ந்தெடுப்பதைப் போலத்தான் இலக்கியப் பனுவல்களைத் தேர்கிறேன்.
வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் உலக அரங்கில் உச்சத்தைத் தொடும் ஆற்றல்கொண்ட ஆளுமை எஸ்.முருகபூபதி. லக்ஷ்மி சரவணகுமாரிடமிருந்து அரிதினும் பெரியதாக எதிர்பார்க்கிறேன்.
சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை என்ற நாவலை ஓர் ஆண் எழுதியிருந்தால் இச்சமூகம் கொண்டாடியிருக்கும்; folk classic என்று பத்தாண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
இவர், எட்டு நாவல்களை எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார். இந்த இலக்கியச் சூழலின் கயமை எனக்கு அயற்சியைத் தருகிறது.
தமிழ்க்குடியின் மதிப்பும் மரியாதையும் இலக்கியத்தின் மூலமே வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறது. நூறு பூக்கள் மலரட்டும்.
– எழுத்தாளர் ரமேஷ்பிரதன்
நன்றி: யாவரும்.காம்.