மக்கள் மனதின் குரல்:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாதிரியே தற்போது இந்தியாவெங்கும் இருக்கக்கூடிய வீட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கையை எப்படியோ மோப்பம் பிடித்து சுமார் மூன்று கோடிக்கு மேல் என்று அறிவித்திருக்கிறபோதே, அதன் பின்னணியில் நாய்களின் ஒட்டுமொத்த குரைப்பொலியும் கேட்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் உள்ள தெரு நாய்கள், அதே தெருவைக் கடக்கிற சிறுமிகள், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை நாய்களினால் கடிபடுவதை தொலைக்காட்சியில் பார்க்கும்போது பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் கடி வலி தொற்றுகிறது.
குறிப்பாக சென்னையில் தெருவெங்கும் பரவலாக நிறைந்திருக்கின்ற ஜந்துக்கள் நாய்களும் மாடுகளும் தான்.
மாநகராட்சி என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், அபராதம் விதிப்பதாகச் சொன்னாலும் அதையும் மீறி மாடுகளும் சிலரைப் பந்தாடுவதைப் பார்க்கும்போது நாம் ஜீவகாருண்யத்துடன் இருக்க முடிவதில்லை.
‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் பிச்சைக்காரனாக வரும் எம்.ஆர்.ராதா ஜீவகாருண்ய கட்சியில் தான் இருப்பதாகச் சொல்லும் எஸ்.எஸ்.ஆரிடம் இப்படிக் கேட்பார்.
“ஏம்ப்பா… நீங்க ஒன்னுமே கொல்றது இல்லையா?, உங்கள மூட்டப்பூச்சிக் கடிச்சா என்ன பண்ணுவீங்க”
ஏறத்தாழ நாமும் எம்.ஆர்.ராதாவைப் போலத்தான் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
தொலைக்காட்சி செய்திகளுக்கு எட்டிய வகையில், எந்த ஜீவகாருண்ய சிந்தனையாளர்களையும் தெருநாய்கள் விரட்டி விரட்டிக் கடித்ததாக ஒரு காட்சிப் பதிவை கூட நாம் எந்தத் தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.
எந்த அரசியல்வாதிகளும் எந்த விவிஐபிகளிடமோ அல்லது அவர்களுடைய நேரடியான உறவுகளோ இத்தகைய கடி வாங்கிய அனுபவத்தில் சிக்கியதாக எந்த ஊடகத்திலும் செய்திகள் வாசிக்கப்படவில்லை.
ஆனால், நாய்களால் கடிபட்டு ரேபிஸ் தொற்றுப் பரவி உயிரிழந்தவர்களைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்படும்போது நாய்க்கடி பட்டால் என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறையும் மாநில சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுக்கின்றன.
அதே சமயம் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு தரப்படும் மருந்துகளுக்கான விற்பனையோ கோடிக் கணக்கில் இருக்கிறது.
ஆக, தெருக்களில் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, அதற்கான தடுப்பு முறைகளை எந்தவிதத்தில் கையாளலாம் என்பதை சீரியஸாக அரசும் அரசு அதிகாரிகளும் அணுக வேண்டிய அவசியமான தருணம் இது.
நாய் யாரைக் கடித்தால் என்ன? நம்மிடம் விழுந்து புடுங்காதவரை சரி என்ற மனோபாவத்தில் இருப்பது எந்த ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
– யூகி