மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த ஜெயராமன் பல இசை மேதைகளுக்கு பக்க வாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார்.

வயலின் வாசிப்பில் ‘லால்குடி பாணி’ எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள்.

அனைத்துவித இசைக் கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள்.

கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம்.எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது.

லால்குடி ஜெயராமன் தனது 12-வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார்.

தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர்.

1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை விருந்து.

தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு மக்கள் திலகம் அந்தக் கச்சேரிக்கு திடீரென சென்று ரசித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமை தாங்க அழைத்தபோது, பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அவர்கள்தான் அதற்கு தகுதியானவர் என்று அவரை தலைமை ஏற்கக் கூறி அடக்கத்தோடு மறுத்துவிட்டார்.

‘கலைஞர்களை பாராட்டியாவது பேசுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அந்த இசை மேதைகளை புகழ்ந்துவிட்டு ரசிகராகவே மேடையிலிருந்து இறங்கினார்.

ஒரு நல்ல ரசிகர்தான் ஒரு நல்ல கலைஞராக இருக்க முடியும்.

– பி.எம்.எம்

You might also like