நார்வே நாட்டிற்கும் வட துருவத்திற்கும் இடையில் ஆர்டிக் பெருங்கடலில் பனிகளாலும், அடர்ந்த மலைத்தொடர்களாலும் நிறைந்த ஒரு தீவுக்கூட்டம் ஸ்வல்பார்ட்.
நார்வே நாட்டிற்குச் சொந்தமான இந்தத் தீவுக் கூட்டத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்குத் தேவையான ஓர் இன்றியமையாத வளம் அத்தனைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வளம் உண்மையில் நாம் நினைப்பதுபோல் நிலக்கரியோ, எண்ணெய்யோ, அரிய வகை தாதுப்பொருட்களோ, தங்கமோ கிடையாது. மாறாக விதைகள்!
ஆம், உலகில் அனைத்து நாடுகளிலும் புழக்கத்தில் இருக்கக்கூடிய, இருந்த விதைகள் அவை.
இதனை பாதுகாப்பதற்காகவே ஒரு விதைப் பெட்டகம் இந்தத் தீவில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பு.
இதனை உலகின் விதைப் பெட்டகம் என்றே அழைக்கின்றனர். இதில் 13,000 ஆண்டுகால விவசாய வரலாறு பொதிந்துள்ளது.
எதற்காக விதைப் பெட்டகம்?

தற்போது உலகம் அதிகளவில் இயற்கைப் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோயால் உலகமே பேரழிவைக் கண்டது. இத்துடன் சமீபமாக உலகெங்கும் பல்வேறு போர்களும் நடந்துவருகின்றன.
அதனால் ஒருநாள் கடும் இயற்கைப் பேரிழவுகளாலோ, நோய்களாலோ, போர்களாலோ அல்லது ஏதேனும் காரணங்களாலோ உலக நாடுகள் தங்களின் மரபணு விதை வங்கிகளை இழக்க நேர்ந்தால் என்ன செய்வது? அதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பெட்டகம்.
இன்னும் சொல்வதென்றால் ‘2012’ திரைப்படத்தில் உலகம் அழியும்போது அதிலிருந்து மனிதர்கள் தப்பிக்க ஒரு கப்பலை நிர்மாணிப்பார்கள் அல்லவா?
அதுபோல மேற்கூறிய பேரிழவுகளால் நாளை உலகம் அழிந்தால் எஞ்சியிருக்கும் மனிதர்களுக்கான உணவு விநியோகத்தில் எந்தத் தடங்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உலகிலுள்ள விதைகள் அனைத்தையும் இங்கு பாதுகாத்து பத்திரப்படுத்தி வருகின்றனர்.
அதனாலேயே இந்தத் தீவுக்கூட்டம் மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஸ்வல்பார்ட் தீவுக்கூட்டம்:
இந்தத் தீவுக்கூட்டத்தில் ஸ்வல்பார்ட் தீவே பெரியது. இதிலுள்ள லாங்கியர் பெய்ன் நகரத்தில் மட்டுமே நிறைய பேர் வசிக்கின்றனர். மொத்தமாக இந்தத் தீவுக் கூட்டத்தில் 2 ஆயிரத்து 530 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் நார்வேயர், ஜெர்மானியர், ரஷ்யர், போலந்துகாரர், ஸ்வீடன்காரர், டென்மார்க்கை சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
இவர்கள் நிலக்கரி சுரங்க வேலைக்காக வந்து செட்டிலானவர்கள்.
இங்கு 1980ல்தான் விதைப் பெட்டகத்திற்கான கருத்தாக்கம் உருவானது. பின்னர் முதன்முதலாக 1984ம் ஆண்டு லாங்கியர்பெய்ன் நகரில் பனிகளுக்கு நடுவே கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நார்வே நாடு, மரபணு விதை வங்கியை உருவாக்கியது.
காலப்போக்கில் இந்த ஐடியா உலக அளவில் பரவியது.
தொடர்ந்து 2006ம் ஆண்டு விதைப் பெட்டகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது நார்வே உடன் ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாட்டின் பிரதமர்களும் இணைந்தனர்.
பல அடுக்குப் பாதுகாப்புடன் பெட்டகம் வடிவமைப்பு செய்யப்பட்டது. பின்னர், 2008ல் அப்போதைய நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ,
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஜாக்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் ஆகியோர் முன்னிலையில் இந்த விதைப் பெட்டகம் திறக்கப்பட்டது.
இதற்கான முழுச் செலவையும் நார்வே அரசே ஏற்றுக் கொண்டது. பின்னர், ஒவ்வொரு நாடுகளாக தங்கள் விதை மாதிரிகளை இங்கே பத்திரப்படுத்த கொடுக்க ஆரம்பித்தன.

அதன்படி முதல் ஆண்டு முடிவில் 90 ஆயிரம் விதை மாதிரிகள் வந்து சேர்ந்தன.
இப்போது 2025ம் ஆண்டு ஜூன் மாதக் கணக்குப்படி இந்த விதைப் பெட்டகத்தில் 13 லட்சத்து 55 ஆயிரத்து 591 விதை மாதிரிகள் உள்ளன.
இவை மைனஸ் 18 டிகிரி செல்சியஸில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த விதைப் பெட்டகம் உள்ள இடத்தில் டெக்டானிக் செயல்பாடு இல்லாததும், பெர்மாஃப்ரோஸ்ட் எனும் நிலத்தடி உறைபனி இருப்பதும் அந்த விதை மாதிரிகளின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த விதைப் பெட்டகம் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் அதாவது 430 அடி உயரத்தில் இருப்பதால், ஒருவேளை நாளை காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகினாலும் ஆபத்து இல்லை என்கின்றனர்.
தற்போது தொண்ணூறுக்கும் மேற்பட்ட விதை வைப்பாளர்கள் தங்கள் பயிர் மாதிரிகளை இந்த விதைப் பெட்டகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர்.
இத்துடன் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், தென்கொரியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் விதை மாதிரிகளை இங்கு பாதுகாத்து வருகின்றன.
இதனால்தான் ஸ்வல்பார்ட் தீவு ஒரு பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா விதைப் பெட்டகம்:

பெரும்பாலான நாடுகள் தனித்தனியாக விதை வங்கியை வைத்துள்ளன.
அதன்படி உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதை வங்கிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதில் இந்தியாவோ தனக்கென ஒரு விைத பெட்டகத்தையே கொண்டுள்ளது.
இந்தியாவின் விதை மாதிரிகள் ஸ்வல்பார்ட் விதைப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறதுதான்.
இருந்தாலும், விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட இந்தியா தனக்கான ஒரு விதைப் பெட்டகத்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் உள்ள சாங் லா மலைப் பகுதியில் அமைத்துள்ளது.
இதனை 2010ம் ஆண்டு இந்தியப் பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் ஆராய்ச்சிப் பிரிவும், தேசிய தாவர மரபணு வளங்கள் நிறுவனமும், இணைந்து உருவாக்கின.
இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதை மாதிரிகளும் 200க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விதை மாதிரிகளில் பார்லி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, தக்காளி, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவை அடங்கும்.
இவை வெப்பநிலை, பூச்சிகள் மற்றும் ஈரப்பதத்தைத் தாங்கி வளரும் குணங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
– கவின்